கந்தக பூமியும் கரையாத எழுத்தும்





வக்கனையான நகைச்சுவையின் உள்ளீடாக மானுடத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் காட்சிப்படுத்தும் வெள்ளந்தியான சொல்லாடல்கள்தான் லட்சுமணப்பெருமாளின் மொழி. சலிக்காத கிராமிய மொழிநடையும், வேடிக்கையான மனிதர்களின் குணச்சித்திரங்களை வடிவமைக்கும் பாங்கும் இந்த கரிசல் காட்டு எழுத்தாளுமையின் முக்கிய அடையாளங்கள். ‘பாலகாண்டம்’, ‘ஒட்டுவாரொட்டி’, ‘கரிசல் நாட்டுக் கருவூலங்கள்’, ‘வழிபடுகடாம்’ போன்ற நூல்கள் இவரது செழுமையான இலக்கியத்துக்குச் சான்றுகள்.

கந்தகம் தகிக்கும் சாத்தூரை ஒட்டியுள்ள படந்தால் என்ற சிறுகிராமத்தில், சிறிய அறையொன்றில் தீக்குச்சிகளை அடுக்கியபடி இலக்கியம் செய்கிறார் லட்சுமணப்பெருமாள். மூத்த ஆளுமையான கி.ராவின் வாரிசு என சக படைப்பாளிகளால் பாராட்டப்படும் இவர், தமிழின் கதைசொல்லி மரபை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்பவர். ‘கற்றது தமிழ்’, ‘பூ’, ‘அம்மாவின் கைப்பேசி’ என திரைப்படங்களிலும் இவரது பங்களிப்பு மிளிர்கிறது.

‘‘அப்பா பேரு சுப்பையா. ஆனா ‘காவக்கார்ரு’ன்னுதான் கூப்பிடுவாங்க. புஞ்சைக்காடுகளை காவல் காக்குறவரு. தானியம்தான் கூலி. அவருக்கு மட்டுமில்லை... எங்க பகுதியில தீப்பெட்டி ஆலைகள் வர்றவரைக்கும் யாரும் பணக்கூலி வாங்கினதில்லை. தானியக்கூலிதான். அம்மானை பாடுறதில கெட்டிக்காரரு அப்பா. ஊருல இழவு விழுந்துட்டா முதல்ல அப்பாவுக்குத்தான் ஆளு வரும். ‘பஞ்சபாண்டவர் வனவாசம்’, ‘நல்லதங்காள் வரலாறு’, ‘சித்திர புத்திர நாயனார் சரித்திரம்’னு விடிய விடிய பாடுவாரு. இழவு வீட்டுல தூங்கக்கூடாது. அம்மானையைக் கேட்டுக்கிட்டு எல்லாரும் விழிச்சிருப்பாங்க. வீட்டுல அடுத்த வேளை சாப்பாட்டுக்கு தானியம் இல்லாட்டியும், அம்மானை பாடுறதுக்குக் காசு வாங்கக்கூடாதுங்கிறதுல அப்பா உறுதியா இருந்தார். ஒரு சேவை மாதிரியே செஞ்சார்.

அம்மா செல்லத்தாயி வசதியான குடும்பத்தில பிறந்தவங்க. அப்பாவுக்கு வாக்கப்பட்ட பெறவுதான் அவங்களுக்கு வறுமை பழக்க மாச்சு. அம்மா குடும்பத்துல ஆண் வாரிசு இல்லை. இப்போ நான் குடியிருக்கிறது அம்மாவுக்கு பாகமா வந்த வீடு. எங்கூடப் பொறந்தவங்க மொத்தம் 5 பேரு. நாலு பொண்ணுங்க. ஒரு பையன். நான் மட்டும்தான் எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படிச்சேன்.

ஜீவனத்துல இருந்த கஷ்டத்தை வார்த்தைகளால சொல்லமுடியாது. எங்களுக்கு மட்டுமில்லை... நிலபுலன்கள் வச்சு விவசாயம் செஞ்ச சம்சாரிகளுக்கும் அதுதான் நிலைமை. கிராமத்து வாழ்க்கையோட அடையாளமே வறுமைதானே!   

தீப்பெட்டி தொழிற்சாலை வர்றதுக்கு முன்னாடி சாத்தூரு பசுமையான பூமி. மானாவாரி விவசாயம் மேல அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தலே. காலப்போக்குல பலபேர் விவசாயத்தைக் கைவிட்டுட்டு வேற தொழில் நாடிப்போகத் தொடங்கிட்டாங்க. குளிர்ச்சி தண்டாம அடிச்ச கடும் வெயிலை மூலதனமா வச¢சு, மெல்ல மெல்ல தீப்பெட்டி கம்பெனி இந்தப்பகுதிகளுக்குள்ள நுழையத் தொடங்குச்சு. முதன்முதலா மக்களுக்கு பணம் கூலியா கிடைச்சுச்சு.

எங்க கந்தக வாழ்க்கைக்குப் பின்னாடி இப்படி நிறைய சோகக்கதைகள் இருக்கு. தானிய உணவுகளை சாப்பிட்டுப் பழகின மக்கள், அரிசி சோத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பினாங்க. தானியம் வயல்ல கிடைக்கும்... ஆனா அரிசி வாங்க பணம் வேணுமே? பல குழந்தைகளை கந்தகம் தின்னு விழுங்கியிருக்கு. காலையில 6 மணிக்கு உள்ளே நுழைஞ்சா இரவு 9 மணி வரைக்கும் கசக்கிப் பிழிஞ்சிதான் வெளியில அனுப்புவாங்க. அது ஒரு காலம். இன்னைக்கு எல்லாம் மாறிடுச்சு. பெரியவங்களுக்கே இப்போ வேலை கிடைக்கலே. விவசாயத்தை விட்டுட்டு தீப்பெட்டித் தொழிலுக்கு மாறின மாதிரி, இப்போ இதை விட்டுட்டு பட்டாசுத் தொழிலுக்கு மாறிக்கிட்டிருக்காங்க. அது மொத்தம் மொத்தமா உயிர்களைத் திங்குது.

நான் நல்லா படிக்கக்கூடிய ஆளு. தினம் 16 கிலோமீட்டர் நடந்துபோய் படிச்சேன். எங்க கிராமத்தைப் பொறுத்தவரைக்கும் எஸ்எஸ்எல்சிதான் கூடுன படிப்பு. அதுக்குமேல படிக்கிறதுக்கு ஒண்ணுமில்லைன்னு நினைக்கிற மக்கள். டாக்டர், எஞ்சினியர் படிப்பெல்லாம் நமக்கான படிப்பு இல்லே. வேற ஆட்களோடதுன்னு நினைப்பு. படிப்பு முடிஞ்சதும் வீட்டிலயே இருந்தேன். கிராமத்துக்குப் பால் ஊத்த வர்றவர், ‘பால் பண்ணையில தெருவண்டிக்கு ஆளுவேணும்... வர்றியா’ன்னார். போய் சேந்துட்டேன். ஒருநாளைக்கு ரெண்டு ரூபா கூலி. நாலைஞ்சு தெருக்களுக்கு பால் கொண்டுபோய் விக்கணும். கிராமங்களுக்குப் போய் பால் எடுத்துக்கிட்டு வரணும். அப்படிப் போகும்போது ஒரு கிராமத்துல வில்லுப்பாட்டு பயிற்சி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மனசுக்கு இதமா இருந்ததால நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அங்கே போய் வில்லடிச்சு பாடுறவங்களோட சேந்து நானும் பாடுவேன்.  



திடீர்னு எமர்ஜென்சி வந்திருச்சு. பால்பண்ணைய மூடிட்டாங்க. வில்லடிக்காரர் கூப்பிட்டு, ‘உன் குரல் கணீர்னு இருக்குப்பா... நீயே முன்பாடகனா இருந்து பாடு’ன்னு சொன்னாரு. வில்லடிக்கிற நுட்பத்தையும் கத்துக்கொடுத்தாரு. அப்படித்தான் என் வில்லுப்பாட்டு பயணம் தொடங்குச்சு. மகாபாரதம், ராமாயணம்னு நகர்ந்துக்கிட்டிருந்த வில்லுப்பாட்டை சமூகக்கலையா மாத்துனதுல என்னோட பங்கும் கொஞ்சமிருக்கு. நாட்டு நடப்புகளைப் பத்தின பகுடி, கேலின்னு நிறைய நகைச்சுவைகளை சேத்தேன். ஏற்கனவே அப்பா மூலமா எனக்கு அம்மானை அறிமுகமாகியிருந்ததால, நானே பாடல்களை எழுதுனேன். இன்னைக்கு வரைக்கும் வில்லுப்பாட்டு வாழ்க்கையோட ஒரு அங்கமா போய்க்கிட்டிருக்கு.

ஆனா அதைமட்டுமே வாழ்க்கையா வச்சுக்க முடியலே. தீப்பெட்டி ஆலைகள் நிறைய வந்துட்டதால லோடு லாரிகளோட தேவை அதிகமாச்சு. லாரி டிரைவராயிட்டா பிழைச்சுக்கலாமேன்னு நினைச்சு கிளீனர் வேலைக்குச் சேந்தேன். ஓரளவுக்கு லாரி ஓட்டவும் கத்துக்கிட்டேன். ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு லோடு ஏத்துக்கிட்டுப் போனப்போ, விசாரிச்சார். ‘எஸ்எஸ்எல்சி படிச்சுட்டு ஏம்பா இந்த ரிஸ்க்கெல்லாம் எடுக்குறே... கண்டக்டர் லைசென்ஸ் எடுத்தின்னா உடனடியா வேலை கிடைக்கும்’னார். எடுத்தேன். உடனடியா ஒரு தனியார் பஸ்ல வேலை கிடைச்சுச்சு. 5 வருஷம் கண்டக்டர் வேலை. எங்க பஸ்ல தினமும் வர்ற ஒரு தீப்பெட்டி கம்பெனி ஓனர், ‘‘எஸ்எஸ்எல்சி படிச்சுட்டு ஏம்பா கண்டக்டரா நிக்கிறே... எங் கம்பெனிக்கு வந்து கணக்கெழுதுறியா’ன்னு கேட்டாரு. சரி, உக்காந்து பாக்குற வேலையாச்சேன்னு வந்தேன். ஓரளவுக்கு தொழிலைக் கத்துக்கிட்ட பிறகு தனியா செய்யலாமேன்னு ஆசைப்பட்டேன். ஒரு ஆபீஸை லீசுக்குப் புடிச்சேன். அதை நடத்திக்கிட்டே லோன் வாங்கி வீட்டுக்குப் பக்கத்தில ஒரு ஆபீஸ் கட்டுனேன். இப்போ அதுதான் என் ஜீவனம்.

சொந்தமா தீப்பெட்டி ஆபீஸ் இருக்கதால சம்பாத்தியம் அதிகமிருக்கும்னு நினைக்காதீங்க. அதெல்லாம் ஒரு காலம். நூத்தி இருபது கம்பெனிகள் இருந்த இடத்துல இப்போ ஒண்ணோ, ரெண்டோதான் இருக்கு. இவங்க எல்லாரும் பாத்த வேலையை ஒரே ஒரு கம்பெனியில, ஒரே ஒரு இயந்திரம் செஞ்சு முடிச்சிருது. அந்த கம்பெனியில தீக்குச்சிகளை வாங்கியாந்து பெட்டிகள்ல அடைச்சுக் குடுக்கிறது மட்டும்தான் இப்போ எங்க வேலை. ஒருநாளைக்கு எனக்கு 100 ரூபா கிடைச்சா போதும்... ஆனா அதுகூட கிடைக்கலேங்கிறதுதான் எதார்த்தம்.

என்னைப் பத்தியே சொல்லிட்டு, எழுத்தைப் பத்திச் சொல்லாம விட்டுட்டேன் பாருங்க. இன்னைக்கு வரைக்கும் பெரிசா எதுவும் வாசிச்சதில்லை. காசு கொடுத்து புத்தகம் வாங்குற அளவுக்கு வசதியுமில்லை. நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறப்போ அன்பளிப்பா கொடுக்கிற புத்தகங்களை மட்டுமே வாசிக்க முடியுது. என்னை நல்ல கதைசொல்லின்னு சொல்றாங்க. நான் மட்டுமில்லே. எங்க கிராமத்துல வாழுற எல்லாருமே கதை சொல்லிங்கதான். நகரத்துல ஒருத்தர்கிட்ட, ‘மணி என்ன’ன்னு கேட்டா மணியைச் சொல்லிட்டு போயிக்கிட்டே இருப்பார். எங்கூர்ல கேட்டீங்கன்னா, ‘ஏன்... பேங்க்ல பணம்போட போறதுக்கு லேட்டாயிருச்சா’ன்னு கேப்பார். வார்த்தைக்கு வார்த்தை கேலி, கிண்டல், உபகதை, பழமொழி... ஒரு சம்பவத்தைச் சொல்லும்போதே கதையா வடிவமைக்கறது கிராமத்து ரத்தத்தில ஊறினது.

இப்போ வயசு 58 ஆகுது. 48 வயசுவரைக்கும் நான் ஒத்தை எழுத்துகூட எழுதினதில்லை. ஒரு புத்தகத்தையும் வாசிச்சதில்லை. இப்படிச் சொல்றதில எந்தப் பெருமையும் இல்லைன்னு எனக்குத் தெரியும். ஆனா அதுதான் எதார்த்தம். என் பேச்சையும், நகைச்சுவையையும் ரசிக்கிற ஓவியர் மாரீஸ், உதயஷங்கர் மாதிரி நண்பர்கள், ‘இதையெல்லாம் எழுதி வைங்கய்யா’ம்பாங்க. ‘பறிப்பு’ நான் எழுதின முதல் கதை. ஒரு கத்தரிக்காய் வியாபாரி சாகுபடி பண்ணி நஷ்டப்படுறது தான் உள்ளடக்கம். ‘நந்தன்’ இதழ்ல வந்துச்சு. இன்னைக்கு வரைக்கும் அந்த உற்சாகம்தான் என்னை உந்தித் தள்ளுது.

‘கி.ரா மாதிரியே எழுதுறேன்’னு சிலர் பாராட்டும்போது கூச்சமா இருக்கு. கி..ரா ஒரு சமுத்திரம். நான் சின்ன கம்மாய். அவரது அருகாமைக்குக்கூட நான் போகமுடியாது. இதுவரைக்கும் நான் எழுதினது, என்னோட 17 வயது வரையிலான அனுபவங்களை மட்டும்தான். இன்னும் அம்பது வருட வாழ்க்கையை எழுத வேண்டியிருக்கு. என்னால முழுநேர எழுத்தாளனா இயங்க முடியலே. வாழ்க்கை கொடுக்கிற அழுத்தம் அப்படி. திருமணமாகி இரண்டு பிள்ளைகள். பையன் ராணுவத்தில இருக்கான். பெண்ணுக்குத் திருமணமாயிடுச்சு. என் வீட்டுக்காரி நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில வேலைக்குப் போறா... அவளுக்கு ஒருநாளைக்கு நிச்சயமா 100 ரூபா கூலி கிடைச்சுடும். எனக்கும் நூறு ரூபாய் நிச்சயமாயிட்டா நிம்மதியா எழுதலாம்..!’’
- வெ.நீலகண்டன்
படங்கள்: டி.ஏ.அருள்ராஜ்