டைம்





‘‘என்ன வனஜா... தினம் காலைல 6 மணிக்கு ‘டான்’னு பாத்திரம் கழுவ ஆரம்பிச்சுடுவ. இப்ப ஒரு வாரமா கவனிக்கறேன்... மற்ற வேலைய எல்லாம் செஞ்சிட்டு, ஏழு மணிக்குத்தான் பாத்திரம் கழுவறே..?’’ என்றாள் பக்கத்து வீட்டு பரிமளா.

‘‘அத ஏன்க்கா கேட்கிறீங்க... மாடியில குடியிருக்கிற ஒண்டிக் கிழம் மாடியிலேயே வாக்கிங் போற மாதிரி ஆக்ஷன் பண்ணிக்கிட்டு, பாத்திரம் தேய்க்கற என்னை, உத்து உத்துப் பாக்குது, அதோட பார்வையே சரியில்ல... அதனாலதான் லேட்டா பாத்திரம் துலக்க வர்றேன்!’’ என்று அலுத்துக் கொண்டாள் வனஜா.

‘‘என்ன ராமசாமி சார்... ஒரு வாரமா லேட்டா பால் வாங்க வர்றீங்க... விடிய விடிய கூட்டம் அதிகமாயிடுதில்ல..?’’
‘‘இல்ல கணேசா! மாடியிலயே வாக்கிங் போவேன். கீழ் வீட்டு பாப்பா சரியா ஆறு மணிக்கு பாத்திரம் துலக்க வரும். அது எல்லாம் முடிச்சு கிளம்பும்போது சரியா ஆறரை மணியா இருக்கும். அப்போதான் நான் பால் வாங்கக் கிளம்புவேன். ஒரு வாரமா அந்தப் பாப்பாவுக்கு ஒடம்பு சரியில்லையோ என்னவோ... லேட்டாதான் தோட்டத்துப் பக்கம் வருது. அதனால நேரம் தெரியாம குழம்பிடறேன்... எனக்கு கடிகாரமெல்லாம் பார்க்க எங்கப்பா கண்ணு தெரியுது. அதான் லேட்டா வர்றேன்!’’ - கவலையுடன் சொல்லிவிட்டு நடந்தார் ராமசாமி