தாய்





‘‘அடிப்பாவிப்பய மவளே! புருஷன் செத்து பத்து வருஷமான பிறகு, இவ புத்தி ஏன் இப்படி போகணும்? இப்ப எவங்கிட்டயோ போயி வயத்தை நிரப்பிக்கிட்டு வந்திருக்காளே... கேடு கெட்டவ! கேடு கெட்டவ!’’

‘‘இனிமே இவ நம்ம குப்பத்திலே இருந்தா நம்ம வீட்டுப் பொம்பளை புள்ளைங்க கெட்டு குட்டிச் சுவராயிடும். முதல்ல இவள எங்காவது கண் காணாத இடத்துக்குப் போயி தொலையச் சொல்லணும்!’’
- இப்படி ஆளாளுக்கு பகவதியை நாக்கில் நரம்பில்லாமல் பேச, அவள் சிலையாய் நின்றாள்.
‘‘ஏண்டி... நாங்க எவ்ளோ மனசு கொதிச்சிப் பேசிட்டிருக்கோம். நீ பாட்டுக்கு ஒண்ணும் தெரியாத அப்பிராணி மாதிரி நிக்கறே..? பொழுது விடியறதுக்குள்ள வீட்டை காலி பண்ணிட்டு மூட்டை முடிச்சோட கௌம்பற வழியைப் பாரு. இல்லாட்டி நடக்கறதே வேற!’’
- பகவதிக்கு கடும் எச்சரிக்கை விடுத்து கூட்டம் கலைந்தது.
‘‘குழந்தை பெத்துக்குற பாக்கியம் இல்லாத எனக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காம, இந்த ஏச்சும் பேச்சும் கேட்டுக்கிட்டு வாடகைத் தாயா இருக்க சம்மதிச்ச நீ, ரியலி கிரேட் பகவதி. இந்த உண்மையைக்கூட யார்கிட்டயும் சொல்லாம, எனக்காக இதையெல்லாம் தாங்கிக்கிட்டே... உன்னை பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு’’ - நன்றிப் பெருக்கோடு தன் வீட்டு வேலைக்காரி பகவதியின் கரங்களைப் பற்றிக்
கண்ணீர் வடித்தாள் வாணி.