நியாயம்
ஆபீஸ் முடிந்து நான் வீட்டுக்கு வந்தபோது, மகன்கள் இருவரும் அழுது கொண்டிருந்தார்கள். ‘‘ஏன்... என்னாச்சு?’’ என்றேன் மனைவி பூவிழியிடம். ‘‘வீட்ல இருந்த பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரிச்சு ஆளுக்குப் பாதி கொடுத்தேங்க... அதுல எப்படியோ மூத்தவனுக்கு ரெண்டு பிஸ்கெட் அதிகமா போயிடுச்சு. ‘அவனுக்கு மட்டும் ஏன் ரெண்டு அதிகமா கொடுத்தே?’ன்னு கேட்டு சின்னவன் அழறான். ‘அதுல ஒரு பிஸ்கெட்டை தம்பிக்குக் கொடுடா... ரெண்டு பேருக்கும் சரியா இருக்கும்’னு சொன்னேன். அவன் கொடுக்க மாட்டேங்கறான். ‘அண்ணன்தானே... ரெண்டு அதிகமா சாப்பிடட்டுமே’ன்னு சொன்னா இவனும் புரிஞ்சுக்கல. ரெண்டு பேரும் ஒரே பிடிவாதம். எவ்வளவோ சொல்லியும் கேக்க மாட்டேங்கறாங்க. அதான் ஆளுக்கு ரெண்டு வச்சேன். சின்ன வயசுலயே ஒருத்தருக்கொருத்தர் விட்டுத் தராம எவ்வளவு பிடிவாதம் பாருங்க!’’ - மனைவி பேசிக்கொண்டு இருக்கும்போதே போன் ஒலித்தது. எடுத்தாள். எதிர்முனையில் அவளின் அம்மா... ‘‘சரிம்மா... ஊர்ல இருக்குற வீட்டை வித்தீங்க! வந்த பத்து லட்சம் ரூபாயை எனக்கும் அக்காவுக்கும் சரிசமமா இல்லே பிரிச்சுத் தரணும்? அவளுக்கு மூணு பங்கு... எனக்கு ரெண்டு பங்குன்னு சொல்றது என்ன நியாயம்? வசதி குறைவான இடத்துல வாழ்க்கைப்பட்டிருந்தா, அது அவ தலையெழுத்து. அதுக்காக நான் என்னோட பங்கை எதுக்காக விட்டுத் தரணும்?’’ என்றாள் கறாராக!
|