அது என்ன செயற்கை மணல்?
புதிதாக வீடு கட்டும் பிளானில் இருக்கிறோம். ‘செயற்கை மணலை வைத்துக் கட்டினால் பலமானதாக இருக்கும்’ என்கிறார் நண்பர் ஒருவர். அது என்ன செயற்கை மணல்?
- கந்தசாமி, திருப்பரங்குன்றம். பதில் சொல்கிறார் சிட்டிபாபு (தலைவர், அக்ஷயா கட்டுமான நிறுவனம், சென்னை)
கட்டுமானத் துறை பத்து வருடத்துக்கு முன்பு இருந்த நிலையை விட இன்று சுமார் இருபது மடங்கு வளர்ந்திருக்கிறது. ஆனால், கட்டுமானத்தில் முக்கிய மூலப்பொருளான மணல், பெருகிவரும் தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. ஆற்று மணலின் அளவே குறைந்து விட்டது. ஆறுகளுக்கு மணலைக் கொண்டு வரும் பருவ மழைகள் பொய்த்துப் போனதே இதற்குக் காரணம். டிமாண்ட் அதிகமாகிப் போனதால் விலையும் ஏறிவிட்டது. தட்டுப்பாட்டைப் போக்கி, விலையைக் கட்டுக்குள் வைக்க அரசும் என்னென்னவோ முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் நிலைமை சரியாகவில்லை.
இந்தச் சூழலில்தான் கல் குவாரிகளில் தேங்கும் பாறைத்தூளை மணலுடன் சேர்த்துப் பயன்படுத்த ஆரம்பித்தன சில நிறுவனங்கள். இதைத்தான் ‘குவாரி டஸ்ட்’ அல்லது ‘செயற்கை மணல்’ என்கிறோம். கேரளாவில் அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல வரவேற்பு இருப்பதால், இதைத் தயாரித்து விற்பதையே தனித்தொழிலாகச் செய்ய ஆரம்பித்தன சில நிறுவனங்கள். கோவை பகுதியில் அதிகம் நடக்கிறது இந்தத் தொழில். சமீபத்தில் ‘இந்தத் தொழிலுக்கு முறைப்படி அனுமதி வழங்கவும், இயந்திரங்கள் வாங்க கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக அரசே அறிவித்துள்ளது.
இன்று ஒரு லோடு ஆற்று மணலின் விலை 18,000 ரூபாய் என்றால், செயற்கை மணலை பத்தாயிரத்துக்கு வாங்கலாம். கட்டுமானத்தில் இது பேஸ்மென்ட், பேவ்மென்ட் ஃபில்லிங் மற்றும் கட்டுமான வேலைகளில் நல்ல பலனைத் தருகிறது. அதே நேரம் பூச்சு வேலைகளில் இந்த மணல் எல்லோருக்கும் திருப்தி தருவதாகச் சொல்ல முடியாது. எனவே, முழுவதுமாக செயற்கை மணலை வைத்து கட்டிடம் கட்டுவதென்பது இப்போதைக்குச் சாத்தியமாகவில்லை.
23 ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கிய பிளாட்டுக்கு இன்னும் எங்களால் பட்டா வாங்க இயலவில்லை. பட்டா வாங்க என்னதான் வழிமுறை? இடத்தை விற்றவர்களிடம் கேட்டால், ‘நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; அது முடிந்த பிறகே எதுவும் செய்ய முடியும்’ என்கிறார்கள். இப்போது நாங்கள் என்ன செய்வது? - எஸ்.ஆனந்தலக்ஷ்மி, திருச்சி. பதில் சொல்கிறார் சுப்புலக்ஷ்மி (வருவாய்த்துறை உயரதிகாரி, வேலூர்.) நில அளவை ஆவணமான பட்டா வழங்க அதிகாரம் பெற்றவர் தாசில்தாரே! ‘பட்டா பெறுவதில் காலதாமதம் ஆகிறது’ என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது (அரசாணை எண்: 210). அதன்படி, தற்போது ஒரு நிலத்தை வாங்கினால் பத்திரம் பதிவு பண்ணிய உடனேயே பட்டாவுக்கும் அப்ளை பண்ணி விடலாம். தாசில்தாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றில்லை. சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமே விண்ணப்பிக்கலாம். திங்கட்கிழமை தோறும் பட்டா மனுக்களைப் பெறுகிறார்கள் அவர்கள். விண்ணப்பத்துடன் தாய்ப்பத்திரம் உள்ளிட்ட சில ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டியிருக்கும். கிராம நிர்வாக அலுவலர், அந்த மனுவின் மீதான அறிக்கையை அந்த வார இறுதிக்குள் வட்டாட்சியருக்கு அனுப்புவார். வட்டாட்சியர் மேல் விசாரணை செய்து, அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் பட்டா கைக்கு கிடைக்க உத்தரவிடுவார். இதுதான் நடைமுறை.
தங்கள் விஷயத்தில் நிலம் தொடர்பாக வழக்கு நடப்பதாகச் சொல்வதால், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு முன்பாக வருவாய்த்துறை அதில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. வழக்கு தாக்கலானபோது நிலத்தின் பட்டா யார் பெயரில் இருந்ததோ அதுவே தீர்ப்பு வரும் வரை நீடிக்கும். நிலத்தின் மீது தங்களுக்கு இருக்கும் உரிமைக்கு ஆதாரமான பதிவுப்பத்திரம், வரி கட்டிய ரசீதுகள் போன்றவற்றை பத்திரமாக வைத்திருங்கள்.
|