“சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் செல்போன் வாங்கிக் கொடுக்காதீர்கள். அவர்கள் வைத்திருந்தால் அதைப் பிடுங்குங்கள். செல்போன் இல்லாமல் அவர்கள் வாழமுடியாதா? பெண்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் செல்போன்தான் காரணம்..!’’
- இப்படி திருவாய் மலர்ந்தருளியவர், ஒரு பெண்ணை தலைவியாகக் கொண்டு அரசியல் செய்யும் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பியான ராஜ்பால் சிங் சைனி. தங்கள் மகள் ஒருவரோடு ஓடிப்போனதாகவும், அதற்கு செல்போனே காரணம் என்று ஒரு பெற்றோர் தன்னிடம் அழுததாகவும், அன்று முதல் எல்லா மேடைகளிலும் இதை வலியுறுத்தி வருவதாகவும் பேசியிருக்கிறார் சைனி.
இதற்கு சில நாட்களுக்கு முன்புதான், ‘அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க பெண்களுக்கு 16 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும்’ என்ற சாதிப் பஞ்சாயத்துகளின் யோசனையை வரவேற்று, கவர்னரிடமும் பரிந்துரைத்தார் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா.
‘ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்கள் மீதும், துப்பட்டா இல்லாமல் வரும் பெண்கள் மீதும் ஆசிட் ஊற்றுவோம்’ என்று எச்சரித்து கல்லூரிகளில் நோட்டீஸ் ஒட்டினார்கள் ஜார்கண்ட் முக்தி சங்கத்தினர்.
நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் பெண்களே காரணம். கால்முதல் தலைவரை மூடிக்கொண்டு, பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தால், ஆண்கள் உத்தம புத்திரர்களாக இருப்பார்கள். உணர்வுகளைத் தூண்டி விட்டு ஆண்களை குற்றவாளியாக்குவது பெண்கள்தான்.
சைனியும், சௌதாலாவும், ஜாதிப்பஞ்சாயத்தும், ஜார்கண்ட் முக்தி சங்கமும் இன்னபிற நவீன இந்தியாவின் அரசியல் சிற்பிகளும் சொல்ல வருவது இந்தக் கருமத்தைத்தான்.
‘‘எவ்வளவு நன்மையோ, அந்த அளவுக்கு தீமை ஒவ்வொன்றிலும் இருக்கிறது. பயன்படுத்தும் விதம்தான் இதைத் தீர்மானிக்கிறது. மொபைல் போனால் பாதிக்கப்பட்ட பலர் என்னிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள். அதில் 80 சதவீதம் 13 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். அண்மையில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு 13 வயது. அவள் ‘மெசேஜ் அடிக்ஷன்’ பிரச்னையோடு இருந்தாள். என்னிடம் பேசியபோதும் மொபைல் பட்டனை அழுத்திக்கொண்டே இருந்தாள். ‘எப்பவும் மொபைலும் கையுமாவே இருக்கா... ராத்திரியிலகூட தூங்காம எஸ்எம்எஸ் அனுப்புறா. கேட்டா கோபப்படுறா. வீட்டில யார்கிட்டயும் பேசுறதில்லை. ஸ்கூல் போயிட்டு வந்தவுடனே மொபைலை எடுத்துக்கிட்டு உக்காந்திருவா. தப்பாவெல்லாம் அனுப்புறதில்லை. ஜோக்ஸ், கணக்கு, விடுகதைகள்... மொபைலை ஒளிச்சு வச்சா, அழுது ஊரைக் கூட்டிடுறா..’ என்று பதைபதைப்போடு சொல்லிக் கலங்கினார் அவள் அம்மா. எஸ்எம்எஸ் அடிக்ஷன் அவளுக்கு வலிப்பையும் கொண்டு வந்துவிட்டது. தீவிர சிகிச்சைக்குப்பிறகு அவளை மீட்டோம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மொபைல் அடிமைகளாக மாறிவிடுகிறார்கள். பல குடும்பங்களைக் கூட மொபைல் கலைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கு நான் கவுன்சலிங் கொடுத்திருக்கிறேன். எந்நேரமும் செல்போனிலேயே பேசிக்கொண்டிருந்த மனைவி மீது சந்தேகப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண்களும் உண்டு...’’ என்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
அதே நேரம், சைனியின் கருத்தை கடுமையாக எதிர்க்கிறார் சுபா. ‘‘ஓரிரண்டு சம்பவங்களை மட்டும் வைத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் புத்தி சொல்லக்கூடாது. ஆண்களை விட பெண்களுக்கே மொபைல் அவசியமாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு மொபைல் வாங்கிக்கொடுக்கும் முன்பு, அதை ஹேண்டில் செய்யும் மெச்சூரிட்டி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சிறுமிகளுக்கு மட்டுமல்ல... சிறுவர்களுக்கும் இது பொருந்தும்’’ என்கிறார் சுபா.
‘‘மொபைலால் பிரச்னைகள் ஏற்படுவது உண்மைதான். குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. சில பெண்கள் தடுமாறுகிறார்கள். அதில் சந்தேகமில்லை. பாதிக்கப்பட்ட பல பெண்களின் வழக்குகளை நான் கையாண்டிருக்கிறேன். விவாகரத்து வரைக்கும் பல விவகாரங்கள் நீள்கின்றன. ஆனால், அந்த எம்.பியின் வார்த்தைகளில் அக்கறை இல்லை. ஏராளமான உள்நோக்கங்களே இருக்கின்றன. ‘பெண் ஓடிப்போய்விட்டாள்’ என்று சொல்வதே அவரது அவமானகரமான சுயரூபத்தை வெளிக்காட்டுகிறது. ஒரு பெண் ஒரு ஆணைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு? இதில் ஆணுக்கு பங்கே இல்லையா..? மொபைல் போனை அந்த ஆண் பயன்படுத்தவே இல்லையா..?’’ என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி.
‘‘நாட்டில் நடக்கும் எல்லா பண்பாட்டுக் குலைவுக்கும் செல்போன் மட்டுமே காரணம் அல்ல. எல்லாவற்றையும் கற்றுத் தருகிற டி.வி. வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. கொழுத்துப் போய், வெறிகொண்டு அலைகிற ஆண்களை கண்டிக்கவோ, தடுக்கவோ துப்பற்ற இதுபோன்ற பிற்போக்கு அரசியல்வாதிகளின் பேச்சைப் புறக்கணிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மேலேயே பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிற இவர்களின் வக்கிரத்தை நாடு புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஆண்களைவிட அதிகமாகவே பெண்கள் உழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தொடர்பு சாதனமாக மட்டுமல்ல... பாதுகாப்பு சாதனமாகவும் உதவுகிறது மொபைல்.
போர்னோகிராபியை மொபைல் இன்று விரல் நுனியில் கொண்டு வந்துவிட்டது. இதனால் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் எதிர்காலமே பாழாகிறது. மனரீதியாக சிதைவுகளை உண்டாக்கும் பகுதிகள் இடம்பெறாத வகையில் சிறுவர்களுக்கு என்று செல்போனை வடிவமைக்க வேண்டும். நவீன விஞ்ஞானத்தில் எல்லாமே சாத்தியம்தான்’’ என அக்கறை காட்டுகிறார் சாந்தகுமாரி.
பெண்களுக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கும் குரல்கள், பெண்ணியப் படைப்பாளிகளையும் உசுப்பி விட்டுள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய லீனா மணிமேகலை, ‘‘ராஜ்பால் சிங் சைனி மாதிரியான எம்.பிக்கள் ராஜ்யசபாவில் இருப்பது இந்த நாட்டின் மொத்த மக்களுக்கும் முட்டாள் பட்டம் கட்டுவதைப் போலிருக்கிறது’’ என்று கொதிக்கிறார். ‘‘சட்ட சபைகளில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருக்கிற எம்.பிக்களிடமிருந்து போன்களைப் பிடுங்க வேண்டுமே தவிர, பெண்களிடமிருந்து அல்ல. எதற்கெடுத்தாலும் பெண்களை இழுக்கும் இந்த மாதிரி கலாசாரவாதிகள் எம்.பிக்களாக இருப்பது, நமது வரிப்பணத்திற்குத்தான் கேடு. ‘பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க பெண்கள் சேமியா சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்’ என்று ஹரியானாவில் எவனோ ஒரு பஞ்சாயத்து தலைவன் சொன்னதாக படித்தேன். அதிகாரத்தில் இருக்கும் அபத்தவாதிகள் பெருகிக் கொண்டே போகிறார்கள். பெண்களை சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் அற்பத்தனத்தை விட்டுவிட்டு, அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதிகள் மூளையில் இருக்கும் களிமண்ணில் மண்புழுக்களைத்தான் பிடித்துவிட வேண்டும்’’ என்று கொதிக்கிறார் லீனா.
- வெ.நீலகண்டன்