பெயர்




 
‘‘டேய், வைரஸ் வாத்தியார் வர்றார்டா!’’ - பேருந்துக்குள் பள்ளி மாணவர்கள் சிலர் பேசிச் சிரித்ததைக் கேட்டதும், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் பாலையாவுக்கு கார்மேகம்தான் நினைவுக்கு வந்தான்.

எட்டாம் வகுப்பிலேயே ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வைப்பதில் அவன் பிஹெச்.டி. முடித்திருந்தான். சொன்னதையே திரும்ப சொன்னால் ‘ரப்பர் ஸ்டாம்ப்’! குறைவாக மார்க் போட்டால் ‘ரேஷன் கடை’! எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு ‘கிரைண்டர்’ என்று சமயோசிதமாக இருக்கும் அவன் வைக்கும் பட்டப் பெயர்கள். அப்பாவித்தனமாக பேசுவதால் பாலையாவுக்குக் கூட ‘குழந்தை’ என்று அவன் பெயர் வைத்திருந்ததாகக் கேள்வி.

‘அந்த கார்மேகம் இப்ப எங்க இருக்கானோ... எப்படி இருக்கானோ!’ என்று பாலையா பெருமூச்சு விட்டபோது பேருந்து ஓரங்கட்டி நின்றது. ஏதோ அரசியல் கட்சித் தலைவர் ஊர்வலமாகப் போவதாகச் சொன்னார்கள்.

ஜீப்பில் கை கூப்பியபடி பேருந்து ஜன்னலுக்கு மிக அருகில் கடந்து போன அந்த அரசியல்வாதியை எங்கேயோ பார்த்தது போலிருந்தது பாலையாவுக்கு.

‘‘எங்க குழந்தைகளுக்கு நீங்கதாண்ணே பேரு வைக்கணும்’’ என்றபடி நான்கைந்து பெண்கள் கைக்குழந்தைகளை நீட்ட... பெயர் வைத்தார் அரசியல்வாதி.

பெயர் சூட்டும் வைபவம் முடிந்து ஜீப் நகர, ‘‘அண்ணன் கார்மேகம் வாழ்க!’’ என கோஷம் பறந்தது.

‘‘டேய், நீ இன்னும் பேரு வச்சுக்கிட்டுத்தான் திரியறியா?’’ - கார்மேகத்தை அடையாளம் கண்ட பாலையாவின் மனம் துணுக்குற்றது.