அய்யோ பாவம் அல்டாப் பாய்ஸ்!





மூக்கைத் துளைக்கும் மசாலா வாசனை வளாகம். கொளுத்தும் வெயிலில் வாணலியுடன் செல்லச்சண்டை போட்டுக் கொண்டிருந்தன கல்லூரி மயில்கள். ‘பொண்ணுங்க சமைக்கிறதே செம காமெடிப்பா’ என்ற பசங்களின் அலம்பல்களுக்கு மத்தியில் ரெடியானது கமகம காமெடி ரெசிபிகள். எஸ்.எம்.எஸ்ஸில் டிப்ஸ் கேட்டு இப்போதான் முதல் முறையா கரண்டி பிடிக்கிறார்களாம். அய்யோ பாவம்... இத்தனை அயிட்டத்தையும் டேஸ்ட் பண்ணப் போற பாய்ஸ் பட்டாளம்! சேலம் கணேஷ் கல்லூரியில் நடந்த டிராஜடி போட்டி அது. பொண்ணுங்க சமைக்கிறதை பசங்க டேஸ்ட் பண்ணி மார்க் போடணுமாம். (பின் விளைவுகளைக் கொஞ்சம் யோசிங்கப்பா!) பசங்க சமைக்கிறதை பொண்ணுங்க டேஸ்ட் பண்ணி மார்க் போடணுமாம். (நீங்க எப்பவுமே கொடுத்து வச்சவங்க!)

முதல் செட் கேர்ள்ஸ் சமையல். மையலா சமையலா என கேட்கும் அளவுக்கு செம ரகளை. ‘ரசம் வெக்கிறேன்னு சொல்லி வம்சத்துக்கே விஷம் வெச்சிருவாங்கடா’ என்ற பொருமல் (பொரியல் அல்ல!) பசங்க பக்கத்தில். அதற்குள் ஒருவர், ‘இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டைக் கூப்பிடவா? இல்லை 108&ஐக் கூப்பிடவா?’ என்று பரபரக்க, முறைத்த கண்களோடு, நுரைத்த எண்ணெயுள் முங்கிய சிக்கனை வேகமாக வறுத்து எடுத்தார் உஷா. நம்மையும் சேர்த்து வதக்கணுமாம்! நரகத்தில் கொடுக்கும் தண்டனையை நிறைவேற்ற அவ்வளவு அவசரமா அம்மணி!‘‘இது என்னோட ஃபர்ஸ்ட் அட்டம்ட். அம்மாகிட்ட டிப்ஸ் கேட்டு வந்தேன். சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் செய்யறேன். இந்தப் பசங்களை காலி பண்ண இந்தக் கோழி போதும்’’ என்ற உஷாவின் மூக்கு சிவக்க அடுத்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்தது யாரோ! நமக்கு ஒருபக்கமாக காதில் இருந்து தீய்ந்த வாசனை. (சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் டேஸ்ட் பண்ண முடியாமப் போச்சே, அடச்சே!)பிரெட் சிக்கன் ஸ்பெஷலிஸ்ட் லாவண்யா. ‘‘ஏற்கனவே லஞ்ச் பேக்ல இவ கொண்டு வந்த பிரெட் சிக்கனை சாப்பிட்டு பலருக்கு டிஸ்ஆர்டர் பிராப்ளம். ஸோ... பசங்கதான டேஸ்ட் பண்ணப் போறாங்க...’’ என்று விளக்கம் கொடுத்தது சுற்றியிருந்த ம.அணி.

ரொம்ப தாராள மனசுடன் சிக்கனை வதக்கி, பிரெட்டை நனைத்துப் பிசைந்து உருட்டி, அதற்குள் சிக்கனை ஒளித்து வைத்து எண்ணெய்க்குள் போட்டார். அம்மாடி மொறு மொறு! ‘‘இது ஏவாள் சாப்பிட்ட ஆப்பிள் மாதிரி. உங்க பாவக்கணக்கில் ஒண்ணு கூடிடும்’’ என்று மிரட்டினார் லாவண்யா. ‘‘பிரெட் சிக்கனை ருசித்த பாவத்தைப் போக்க ஒரு ஜோக் சொல்லி மோட்சம் கொடு அம்மணி’’ என்றோம். ‘‘அது மேத்ஸ் பீரியட். அந்தப் பையன் கிளாஸ்ல படு மக்கு... செம லொள்ளு. வழக்கம்போல அன்னிக்கும் அவன் போட்ட கணக்கு தப்பு. நோட்டை சார் கையில் கொடுத்துவிட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டான். மாஸ்டர் டென்ஷன்ல கத்த ஆரம்பிச்சுட்டார்... ‘என்னடா கணக்கை தப்பாப் போட்டுட்டு டான்ஸ் ஆடுற’ன்னு. லொள்ளு பார்ட்டி என்ன சொல்லிச்சு தெரியுமா? ‘கணக்கு தப்பாப் போட்டாலும் ஸ்டெப்புக்கு மார்க் உண்டுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க?’ மாஸ்டர் முகத்தில் டன் கணக்கில் அசடு!’’இப்போதுதான் நரகத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறது!

வாழைப்பூ வடை வாசனை துப்பட்டாவைப் பிடித்து இழுக்க, சரண்யா சமைத்த வாணலியை எட்டிப் பார்த்தோம். முன்னேபின்னே சமையல் அறையை எட்டிப் பார்க்காதவர் சரண்யா. சுகன்யாவுக்கோ சமையலே ஆயுதம். ‘‘ஏற்கனவே இவர் சமைத்த உப்புமாவை சாப்பிட்டு பத்து கரப்பான்பூச்சிங்க, நான்கு எலிங்க, நூறு எறும்புங்க செத்துப் போச்சாம்! சமைக்கும்போதே வாணலியை எட்டிப் பார்த்த ஐந்து பல்லிங்க கீழே விழுந்து தற்கொலை பண்ணிக்கிச்சாம்! மேட்டரை வெளியில் கசிய விட்டுடாதீங்க’’ என்றார் சரஸ்வதி. போதும்டா சாமி... வாழைப்பூ வடையைப் பார்த்தா மறுஜென்ம ஞாபகங்கள் வர, கஞ்சி இட்லி வாசனை பின்னிருந்து இழுத்தது. செல்வியின் சமையல் இடையே மணமணத்தது அவர் அடித்த காமெடி. ‘‘நான் ஒருநாள் சென்னையில் பஸ்ல போய்ட்டிருந்தேன். அப்போ ஒருத்தர் என் தோளைத் தொட்டு, ‘இதுதான் ராயப்பேட்டையா’ன்னு கேட்டார். ‘இல்ல, என் தோள்பட்டை’ன்னு சொன்னேன். எதுக்கு முறைச்சார்? யாரோ அவரை கோபப்படுத்தியிருக்காங்க...’’
 
அய்யோ ஹைய்யோ!
‘‘டீச்சருக்கும் குட்டிப்பையனுக்கும் நடந்த டயலாக்...
‘நீ பெரியவனாகி என்ன பண்ணப்போறே?’
‘கல்யாணம்!’
‘அது இல்லப்பா... நீ என்னவாக விரும்பற?’
‘ஹஸ்பண்ட்!’
‘அது இல்ல... ஐ மீன்... உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்னு எதிர்பார்க்கற?’
‘வொய்ப்!’
‘நோ நோ... உங்க பேரன்ட்டுக்கு நீ என்ன பண்ணப் போற?’
‘மருமகள் தேடுவேன்!’
‘ஸ்டுபிட்... உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்க்கறாங்க?’
‘பேரக்குழந்தை!’
‘அய்யோ கடவுளே... உன் வாழ்க்கையின் லட்சியம் என்ன?’
‘நாம் இருவர்; நமக்கு இருவர்!’
டீச்சருக்கு மயக்கம் வந்திடுச்சாம்!’’

சொல்லி முடித்த செல்வியிடம், ‘அது என்ன கஞ்சி இட்லி?’ என்றோம். இந்த டிஷ்ஷை கண்டுபிடித்த பெருமையும் செல்விக்கே. வீட்டில் மீந்துபோகும் பழைய சாதம்தான் இதில் ஹீரோ. பச்சரிசியை ஊற வைத்து பழைய சாதத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மாவு புளித்த பின் இட்லித்தட்டில் வழக்கமான இட்லி போல ஊற்றி எடுக்கவும். ரொம்ப சாஃப்ட்! சமையல் முடிந்தவுடனே ரிலாக்ஸ் கிளப் கூடியது. ‘‘பிரைஸ் யாருக்கு வேணா கிடைக்கட்டும். மவனே டேஸ்ட் பண்றவனோட ஸ்டமக்ல எடக்குமடக்கா ஏதாச்சும் நடக்கும்... எவ்ளோ ஸ்பை வெச்சும் பாவம் பசங்களால கடைசிவரைக்கும் இந்த உண்மைய கண்டு பிடிக்கவே முடியலை!’’ (சமைத்த உணவில் பேதி மாத்திரை கலந்துட்டாங்களோ!)

ஸ்ரீதேவி