மோதிரம் எனப்படுவது





பழங்காலத்தில் மோதிரத்துக்குக் கணையாழி என்று பெயர். அரசர்கள் தங்களின் தூதுவர்களை அங்கீகரிக்க ஒரு மோதிரம் அளிப்பார்களாம். அதற்கு ‘முத்திரை மோதிரம்’ என்று பெயர். இது ஒரு வகையான விசா! எங்கும் கேள்வியே இல்லாமல் & பாதாள சிறைக்குக்கூட & முத்திரை மோதிரம் வைத்திருப்பவர் போய் வரலாம்!துஷ்யந்தன் போட்ட மோதிரம் கழன்று விழுந்ததால், அவனது நினைவிலிருந்தே மறையும் அபாயம் சகுந்தலைக்கு ஏற்பட்டது. அசோக வனத்தில் இருந்த சீதா தேவியிடம் ஸ்ரீராமரின் மோதிரத்தை அனுமன் அளித்ததை ராமாயணம் பேசுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ மூன்றாம் பாகம் 14&ம் அத்தியாயத்தில் வந்தியத் தேவன், நந்தினியிடம் தான் பெற்ற பனை முத்திரை மோதிரத்தைத் திரும்ப அளிப்பதை அற்புதமாக அமரர் கல்கி காட்சிப்படுத்தியிருப்பார். ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ கதையில் விளக்கைத் தேய்த்ததும் அதிலிருந்து பூதம் கிளம்பும். அதே கதையில் விளக்கு பூதத்தைவிட பவர் கம்மியான பூதம் ஒன்றும் இருக்கும்... அது மோதிரத்தைத் தேய்த்ததும் வரும் பூதம்! ‘லூக்கா எழுதிய சுவிசேஷ’த்தில் தவறுகள் செய்து வாழ்வைத் தொலைத்திருந்த தீய மகன் திரும்பி வந்தபோது அவனது தகப்பனார் மோதிரம் அணிவித்து வரவேற்றதாகச் சொல்லப்படுகிறது.

ஹாங்காங்கில் ஓங் சி சம் என்று ஒருவர். இவரது வேலையே மோதிரங்களைத் திருடுவதுதான். அதுவும் இறந்த உடல்களிடமிருந்து திருடுவார். அடக்கம் செய்யும் முன் சடலங்களுடன் கை குலுக்குவது சீனக் கலாசாரம். இறந்தவர்களின் கைகளைக் குலுக்குவது இறந்தவர்களின் ஆன்மாவைச் சாந்தி அடையச் செய்யும் என்ற நம்பிக்கை இவருக்கு வசதியாக அமைந்துவிட்டது. அப்படிக் கை குலுக்குவதுபோல நடித்து சடலங்களிலிருந்து மோதிரங்களை அபேஸ் செய்த ஓங் சி சம் இப்போது போலீஸ் பிடியில்!கிரகணங்கள் ஒரு கட்டத்தில் மோதிரம் போன்ற வடிவத்தில் டெலஸ்கோப்பில் தெரியும். கிட்டத்தட்ட முழுமையான கிரகணம் அது! அரிதாகத்தான் இப்படிப்பட்ட கிரகணங்கள் நிகழும். மலேரியல் பேரசைட் போன்ற கிருமிகள் நம் உடலில் வளரும் ஒரு காலகட்டத்தில் மோதிர வடிவத்தை ஒத்திருக்கும்.கையில் உள்ள ஐந்து விரல்களில் ஒன்றுக்கு மோதிர விரல் என்று பெயரே இருக்கிறது. அது சரி! திருமண மோதிரத்தை ஏன் நான்காவது விரலில் போட வேண்டும்? சீன விளக்கம் இது... கட்டை விரல் பெற்றோரையும், ஆள்காட்டி விரல் உடன் பிறந்தோரையும், நடு விரல் உங்களையும், சுண்டு விரல் உங்கள் குழந்தைகளையும் குறிக்கிறதாம். எனவே நான்காவது விரல் வாழ்க்கைத் துணைக்கு. சரியா?மேலை நாடுகளில் திருமணங்களில் மோதிரம் மாற்றுவது முக்கிய நிகழ்ச்சி. சில இடங்களில் நிச்சயதார்த்தத்தின்போது மோதிரங்கள் மாற்றப்படுகின்றன.

சில சமூகங்களில் திருமணங்களில் இன்றளவும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம் சுவாரசியமானது. அப்போதுதான் திருமணமாகி மணவறையில் இருந்து இறங்கிய தம்பதி முன் ஒரு குடம் வைக்கப்படும். அதில் நிறையத் தண்ணீர் இருக்கும்.. அக்குடத்துக்குள் ஒரு மோதிரத்தைப் போட்டு விடுவார்கள். ஒன் டூ த்ரீ சொன்னவுடன் மணமக்கள் ஒருசேரக் கையைக் குடத்தில் விட்டு மோதிரத்தை எடுக்கவேண்டும். குடத்துக்குள் என்ன நடக்குமோ தெரியாது... பெரும்பாலும் மணப்பெண்ணே மோதிரத்தை எடுத்திருப்பார்!மோதிரங்களில் தங்களது பெயரின் முதல் எழுத்தையோ, பிரியமானவர்களின் பெயரையோ பொறித்துக்கொள்வதும் நடை முறையில் இருக்கிறது. குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தை விரல் சூப்பும்போது மோதிரம் வயிற்றினுள் போகும் அபாயம் இருக்கிறது. அல்லது வேறு எங்காவது மோதிரம் தொலைந்து போயிருக்க, அதைக் குழந்தைதான் விழுங்கிவிட்டதோ எனப் பதட்டப்படவும் நேரிடும். மோதிரத்தில் படியும் அழுக்கு, குழந்தை வயிற்றினுள் செல்லும் ஆபத்தும் இருக்கிறது.பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘வெள்ளக்கோவில் பக்கம் ஒருவர் திவாலாகி, மஞ்சள் கடுதாசி கொடுத்து, அவரது சொத்துகள் ஏலம் வந்தபோது இந்த மோதிரமும் ஏலத்துக்கு வந்தது. அப்போது அதை ஏலத்தில் எடுத்துப் போட்டேன்’ என்று சொன்னார். எல்லோரும் திவாலானவரின் மோதிரம் வேண்டாம் எனத் தவிர்த்தபோது, பெரியார் ‘என்னதான் ஆகிறது பார்ப்போமே’ என்று அதை வாங்கிப் போட்டாராம். அதன்பிறகு பணம் மேன்மேலும் சேர்ந்ததே தவிரக் குறையவில்லை என்றார் பெரியார்!

‘பெரியார்’ படத்தின் நூறாவது நாள் விழாவில், பெரியார் அணிந்திருந்த பெருமைக்குரிய மோதிரத்தை, பெரியாராக நடித்திருந்த நடிகர் சத்யராஜுக்கு கி.வீரமணி பரிசளித்தார். அந்த மோதிரம் பெரியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமானது. டிரஸ்ட்டை கலந்தாலோசித்து லிபர்ட்டி க்ரியேஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச ரூபாய் பெற்று, டிரஸ்ட்டுக்குச் செலுத்தி, அதன் பின்னரே மோதிரம் பரிசளிக்கப்பட்டது. ரஜினி, ‘தளபதி’ படம் வந்த புதிதில் வலது கணுக்காலில் கறுப்புக்கயிறு கட்டியிருப்பார். பிறகு, இடதுகை கட்டை விரலில் தங்க வளையம். இப்போது ருத்ராட்சக் கொட்டை மோதிரம் அணிந்திருக்கிறார். சதுர்வேதி சாமியாரை மறந்திருக்க மாட்டீர்கள். சென்னைத் தொழிலதிபர் ஒருவரின் மனைவியையும் மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய வழக்கில் சிக்கிய இவருக்குச் சொந்தமான லாக்கரிலிருந்த பல்வேறு நகைகளில் வைரக்கற்கள் பதித்த ஆறு மோதிரங்களும் இருந்தன.சட்டசபையில் செல்லமாக முதுகைத் தட்டிப் புகழ்பெற்ற தாமரைக்கனியின் மோதிரம்... ஆனாலும் கொஞ்சம் பெரிய சைஸ்!இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் டெல்லியில் இருந்து வெளிவந்த தமிழ் இலக்கிய இதழ் ‘கணையாழி’. சுஜாதா அதில் எழுதிய ‘கணையாழியின் கடைசிப்பக்கம்’ இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் ரசிக்கப்பட்டது.


ராசிக்கல் பொருத்தி அதிர்ஷ்டத்தைக் கூட்டிக்கொள்ள மோதிரத்தைப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ‘குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும்’ என்ற சொலவடை ஒன்றும் இருக்கிறது.ஆனைமுடி சேர்த்து மோதிரம் செய்து போட்டுக்கொண்டால் கண்ணடி படுவதிலிருந்து தப்பிக்கலாம் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தர்ப்பைப்புல்லை மோதிரம் போல அணிந்துகொண்டு சடங்குகள் செய்வது பல சமுதாயங்களில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. ஜவ்வு மிட்டாய் விற்பவர் அச்சு அசலாக மிட்டாயிலேயே மோதிரம் செய்து கையில் கட்டிவிடுவது ஞாபகம் வருகிறதா?தென்னை ஓலையிலும் மோதிரம் செய்து விளையாடியதை மறக்க முடியுமா!

(அடுத்து...)