அரிவாள் துப்பாக்கி இடத்தில் கேமரா...





‘‘சின்ன வயசில என்னோட ஹீரோக்களா ரெண்டு பேர் இருந்தாங்க. ஒருத்தர் ஸ்டில் போட்டோகிராபர். இன்னொருத்தர் டிரம்மர். எத்தனை பெரிய கூட்டத்திலும் இந்த ரெண்டு பேர் மட்டும் ஹீரோக்களா தனிச்சுத் தெரிஞ்சாங்க. பின்னாளில நான் பிரஸ் போட்டோகிராபரா ஆகணும்ங்கிறதுக்கு இது ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்தது. இப்ப என் படக்கதைல வர்ற ஹீரோவும் ஒரு பிரஸ் போட்டோகிராபர்தான்...’’ என்கிறார் இயக்கத்தில் தன் மூன்றாவது படமான ‘கோ’வைப் படமாக்கிவரும் கே.வி.ஆனந்த்.‘‘அதோட தினசரி, வாரப் பத்திரிகைகளால எங்க வீட்டை நிறைச்சிருந்த என் அப்பாவும் பத்திரிகைகள் மேல ஒரு பார்வை உருவாகக் காரணமா இருந்தார். பத்திரிகைப் பணிங்கிறது பரபரப்பும், வலிமையும் மிக்க ஒரு மக்கள் தொடர்பு சாதனம். அதில கிடைச்ச அனுபவங்களை வச்சு இந்தப்படத்தோட கதையையும், திரைக்கதையையும் என் நண்பர்கள் எழுத்தாளர்கள் சுபா கூட சேர்ந்து அமைச்சிருக்கேன்...’’ என்கிற கே.வி.ஆனந்த், ஃப்ரீலான்ஸ் பத்திரிகைப் புகைப்படக்காரராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி பின் திரைப்படத்துறையில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகி, இன்றைக்குத் தமிழின் முன்னணி இயக்குநராக கவனம் பெற்றிருப்பவர்.

‘கனா கண்டேன்’, ‘அயன்’ படங்களை அடுத்து அவர் இயக்கிவரும் ‘கோ’வும் முந்தைய அவரது படங்களைப்போலவே தற்கால சமூக நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அதைப்பற்றிப் பேசினார் ஆனந்த்.‘‘கனா கண்டேன்ல கடல்நீரைக் குடிநீராக்கற ஒரு ப்ராஜக்ட் களமா இருந்தது. அதோட சமுதாயத்தை பயமுறுத்திக்கிட்டிருந்த ‘கந்து வட்டி’ப் பிரச்னையையும் வச்சிருந்தேன். அடுத்த ‘அயனோ’ட கதைக்களம் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தப்பட்டதா இருந்தது. அசோகன், நம்பியார் காலத்திலேர்ந்தே கடல்ல டார்ச் அடிச்சு நடந்த பல கள்ளக்கடத்தல் வேலைகளைப் பார்த்திருக்கோம். ஆனா அதே களத்தில உண்மையில எப்படிக் கடத்தல் நடக்குதுங்கிற விஷயங்களை இயல்பா காட்டியபோது படம்மேல நம்பகத்தன்மை வந்தது.அதையும் தாண்டி இந்தப்படத்தில நேரடியாவே பத்திரிகைத்துறையை களமா வச்சிருக்கேன். என் வாழ்க்கையையே எடுத்துக்கிட்டாகூட ஒரு முன்னாள் அமைச்சர் ஆக்கிரமிச்சிருந்த புறம்போக்கு நிலத்தைப் படமெடுத்தப்ப அவரோட ஆள்கள் துரத்திக்கிட்டு வந்தாங்க. கிடைச்ச கேப்பில கேமராவுக்குள்ளேர்ந்த ஃபிலிமை மாத்திட்டேன். வந்தவங்க அந்த ஃபிலிமை வெளியே இழுத்து வீணாக்கிட்டுட்டுப் போனாங்க. படமெடுத்த ஃபிலிம் என் பாக்கெட்ல பத்திரமா இருந்தது.



இப்படிப் பரபரப்பாவும் சமயோசிதமாவும் அமைஞ்ச பிரஸ் போட்டோகிராபரை ஹீரோவா முடிவு செய்தப்ப, அவரோட சாதாரணப் பணிகளே ஹீரோயிஸமா ஆனது. பத்திரிகைப் பணிகள்ல தினசரிப் பேப்பருக்கான பணிகள் இன்னும் பரபரப்பானது. அதுக்கான நேரடி அனுபவங்களுக்காக ஒரு தினசரி அலுவலகத்தில ஒருநாள் தங்கியிருந்து நடைமுறைகளைக் கவனிச்சது உபயோகமா இருந்தது. ஒரு சினிமா ஹீரோவுக்கு அரிவாளும், துப்பாக்கியுமே ஆயுதங்களா இருக்க தமிழ்சினிமாவில, அதுக்குப் பதிலா கேமராவைக் கொடுத்திருக்கேன்...’’ என்றவர் இந்தப்படத்துக்காக முதலில் சிம்புவைப் பேசி பிறகு சில காரணங்களால் ஜீவாவை ஹீரோவாக்கினார். ‘‘படத்துக்கும், சூழ்நிலைக்கும் சரியான முடிவை எடுத்தேன். அது இப்ப நிறைவாவும் இருக்கு. நிறைய திறமை இருந்தும் இன்னும் சரியா வெளிப்படாத ஹீரோவா ஜீவாவைப் பார்க்கிறேன். நடனம், சண்டைகள்ல அபாரத்திறமை இருக்கிற அவருக்கு நடிக்கவும் தெரிஞ்சிருக்கிறது பலம். இதை ‘ராம்’, ‘ஈ’, ‘கற்றது தமிழ்’ படங்கள் உறுதி செஞ்சது. அவருக்கும் இதுவரை ஏற்காத அழகான வேடம் இது...’’ என்றவர் ஹீரோயினாகும் ராதா மகள் கார்த்திகா பற்றியும் சிலாகித்தார்.‘‘கார்த்திகாவுக்கு இதில பிரஸ் ரிப்போர்ட்டர் கேரக்டர். அந்தப்பொண்ணு முகத்தைப் பார்த்தப்பவே, உண்மைச் செய்திகளை தைரியமா சொல்லக்கூடிய நம்பகத்தன்மை தெரிஞ்சது.


 அவங்க அம்மா ராதா நடிப்பு பற்றி நல்லா சொல்லிக் கொடுத்திருக்கிறதால தேவைக்கு அதிகமாவே ஒத்துழைக்க முடிஞ்சது கார்த்திகாவால. இவங்ககூட பியா, அஜ்மல், பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் இருக்காங்க.இசை ஹாரிஸ். டைரக்டரா நான் இன்னும் கத்துக்கிற அளவிலதான் இருக்கேன்ங்கிறதால பாடல்களில்லாத படம் எனக்கு இன்னும் சாத்தியப்படலை. அதனால அழகா காதல், நட்பு எல்லாம் கலந்த பாடல்களை இசைச்சிருக்கார் அவர். ‘அயன்’ல யாரும் போகாத ஆப்ரிக்கா போனது போல இதுக்கு சீனா, நார்வேன்னு பறந்து படம்பிடிச்சோம். இன்னும் ஒரு படி மேலே போய் சீனாவில படமெடுத்த ‘ஹர்பின்’ங்கிற இடத்துக்கே ஹாரிஸைக் கூட்டிப்போய் கம்போஸ் பண்ணினோம். ‘அங்காடித்தெரு’வில தன் திறமையை நிரூபிச்ச என் அஸிஸ்டன்ட் ரிச்சர்ட் எம்.நாதன் இதுக்கு ஒளிப்பதிவு செய்ய, ‘அயன்’ல பரபரப்புக்குக் கைகொடுத்த எடிட்டர் ஆன்டனியும் இதில இருக்கார்.எல்லாத்துக்கும் மேல சினிமாவைக் காசா பார்க்காம ஸ்கிரிப்டா பார்த்த ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் குமார், ஜெயராமனுக்கு இந்தப்படத்துக்கான முழு ஸ்கிரிப்ட்டும் அத்துப்படி. அதுக்கான தேவையை நான் விட்டுட்டாகூட அவங்க கவனிச்சு எடுக்க வச்சிடறாங்க. தீபாவளி பரபரப்பு ஓய்ஞ்சு பொங்கலுக்கு வந்திடும் வேகத்தில, மீதி வேலைகள்ல துரிதமா இருக்கோம்.’’பொங்கல்... கோ பொங்கல்..?

வேணுஜி