அனுஷ்கா வர லேட்டாகவே, ஏ.வி.எம்லயே செட் போட்டு விக்ரம் நடிக்கிற பாடலை எடுத்துக்கிட்டிருக்கார் டைரக்டர் விஜய். சேனை வகையறாக்களோட சூப்பர் செட்ல நடிக்கிற ச்சீயான் முகத்தில மீசை மைனஸ்.
அனுஷ்கா லேட் பண்றதுக்குக் காரணம் வேணுமா..? பி.வாசு டைரக்ஷன்ல தெலுங்கு ‘சந்திரமுகி பார்ட் டூ’ முடிக்கிற பிஸியில் இருக்கு பொண்ணு. தமிழ்லயும் அனுஷ்க்கே அந்தக் கேரக்டரைப் பண்ணினா பொருத்தமா இருக்கும். இனி ‘ஜோ’வை எங்கே தேட..?
லிங்குசாமியோட ‘வேட்டை’ல ஆர்யாகூட நடிக்கிற மாதவன், திரும்பவும் ‘யாவரும் நலம்’ விக்ரம் குமார் டைரக்ட் பண்ற ‘அதிர்ஷ்டசாலி’யில ஹீரோ ஆகறார். யா.ந. மாதிரி பயமுறுத்தாம இது ஜாலியான ரொமான்டிக் படமாம். மேடிக்கு ஜாலி..!
‘
காவலன்’ல ஒரே ஒரு பாட்டுக்கு ஐரோப்பா போக அசின் டேட்ஸுக்குக் காத்திருக்க நேரத்தில பொள்ளாச்சி பறந்திட்ட விஜய், ‘வேலாயுதத்’துக்காக 300 டான்சர்கள் புடை சூழ ஹன்சிகாவோட டூயட் பாடிக்கிட்டிருக்கார்.
குடும்பப் பிரச்னை, காதல் பிரச்னைக்கு இடைலயும் தன் ‘எங்கேயும் காதல்’ படத்தைக் கிட்டத்தட்ட முடிச்சுட்டார் பிரபுதேவா. ரெண்டு பாடல்கள் மட்டும் பாக்கி. எங்கே இருந்தாலும் காதல் காதல்தானே..?
ஃபீல்டு விட்டு ஃபீல்டு வந்த கிரிக்கெட்டர்கள் வரிசையில வர்றார் ‘பகவான்’ ஹீரோ யுவராஜ். கொச்சியைச் சேர்ந்த இவர் ஸ்டேட் லெவல் போட்டிகள்ல ஸ்ரீசாந்த், பாலாஜிகூட ஆடியவர். உதயதாரா ஜோடியா படத்தில எப்படி ஆடறார்னு தெரியலை...
திருநங்கைகள் மேல ஆரோக்கியமான பார்வையை ஏற்படுத்த ஒரு திருநங்கையான ‘கற்பகா’வை வச்சே ‘பால்’ படத்தை எடுத்து வர்ற டி.சிவகுமார், எல்லாருக்கும் புரிய அதைக் கமர்ஷியலாவே எடுத்திருக்காராம். பால் மாறாம ரிலீஸ் பண்ணிடுங்க..!
ரீமிக்ஸ் பண்றவங்களுக்குப் பெரும்பாலும் இளையராஜா பாடல்கள்தான் சிக்கும். ஆனா ‘பொறுத்திரு’ படத்தில, பழைய எம்.ஜி.ஆர் பாடலான ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேனை’ ரீமிக்ஸ் பண்ணியிருக்கார் தினா. சொல்லாமப் பண்ணினா ரியல் மிக்ஸ்..!
நாடகத்திலேர்ந்து சினிமாவுக்கு வர்ற நடிகர்கள் லிஸ்ட்ல, ‘உன்னையே காதலிப்பேன்’ காமெடியன் ‘செய்யாறு செல்வத்துரை’யை சேர்த்துக்கலாம். 60 நாடகங்கள்ல நடிச்சிருக்க அவரோட பட எண்ணிக்கை இப்ப மூணு. சிரிக்க வச்சு சிரிங்க..!