பட்டம் வாங்கும்போது போடும் அங்கி அடிமைச்சின்னமா?





கல்லூரி தொடும் மாணவர்களின் கனவு உடை அது. பெற்றோரும் உற்றாரும் உடனிருக்க, கம்பீரமான அந்த கறுப்பு அங்கியை அணிந்தபடி மேடையேறிப் பட்டம் பெறும் நிகழ்வானது வாழ்க்கையிலேயே முக்கியமானது. ஆனால், ‘இந்த அங்கி வெள்ளையரின் ஆதிக்க அடையாளம்... அடிமைத்தனத்தின் வெளிப்பாடு... அதைத் தவிர்க்கவேண்டும்’ என்ற குரல் எழுந்திருக்கிறது. இவ்விதம் குரல் எழுப்பியிருப்பது சாதாரண ஆசாமிகள் இல்லை... முன்மாதிரி மனிதர்கள்!


மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா. வேந்தர், துணைவேந்தருக்கு மத்தியில் சிறப்பு விருந்தினராக வீற்றிருந்தார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தில், தான் அணிந்திருந்த பட்டமளிப்பு அங்கியை கழற்றி வீசிய அமைச்சர், ஆக்ரோஷமாக மைக் பிடித்தார். ‘‘சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைக் கடந்த பிறகும் ஏன் காலனி ஆட்சிமுறையைப் பின்பற்ற வேண்டும்? பட்டமளிப்பு விழாவுக்கு சாதாரண உடை போதாதா? இந்த அங்கி, நமக்குள் அடிமை மனோபாவத்தை உருவாக்குகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும்’’ என்று முழங்கினார் அமைச்சர். அந்த சூடு ஆறும் முன்பாக, திரிபுரா மாநிலத்தில் நிகழ்ந்த ஓர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் மாணிக் சர்க்கார், ‘‘இந்த அங்கி அடிமைத்தனத்தின் அடையாளம். இதை அணிய மாட்டேன்’’ என்று சொல்லி, தான் அணிந்த உடையோடு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அண்மையில், லக்னோ பாபா சாகீப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘‘பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் எச்சமான இந்த அங்கியைத் தவிர்க்க வேண்டும். அதிக எடையுள்ள இந்த அங்கிக்குப் பதிலாக எடை குறைந்த அங்கவஸ்திரம் போன்ற இந்திய உடைகளைப் பயன்படுத்தலாம். அல்லது அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய உடைகளை அணிந்தபடியே பட்டம் வாங்கலாம்’’ என்றார் கலாம். இந்த விவாதங்களுக்கு மத்தியில், குரு காசிதாஸ் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில தேசிய பல்கலைக்கழகங்கள் வேட்டி, சட்டை போன்ற நம் பாரம்பரிய உடைகளோடு பட்டமளிப்பு விழாக்களை நடத்தி, இவர்களின் உணர்வுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன!1857&ல் சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்ட தருணத்தில், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைப் பின்பற்றி பிரிட்டிஷ் அரசால் தீர்மானிக்கப்பட்டது இந்த அங்கி. இது உண்மையிலேயே சங்கடமா? சந்தோஷமா? கல்வியாளர்கள், மாணவர்களின் மனநிலை அறிய விரும்பினோம்.


முனைவர் தங்கமுத்து முன்னாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்

வழக்கறிஞர், போலீஸ், டாக்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு சீருடை இருப்பதைப் போல கல்வியாளர்களுக்கான அடையாளம் அந்த கறுப்பு அங்கி. இந்த கௌரவத்தை மாணவர்கள் விரும்புகிறார்கள். தங்கள் வாரிசு அந்த அங்கி அணியும் நாளை எதிர்பார்த்துக் குடும்பமே காத்திருந்து கொண்டாடுகிறது. முன்பு அங்கியோடு சேர்த்து தொப்பியும் அணியும் வழக்கம் இருந்தது. சில சங்கடங்கள் ஏற்பட்டதால் அதை இப்போது தவிர்த்து விட்டோம். இப்போதும் எல்லா மாணவர்களுக்கும் அங்கி அணிந்து மேடையில் பட்டம் பெறும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ரேங்க் வாங்கியவர்கள், மெடல் வாங்கியவர்கள், எம்.பில், பிஹெச்.டி. பட்டம் பெறுபவர்கள் மட்டுமே நேரடியாக இப்படி அங்கி அணிந்து பட்டம் வாங்குகிறார்கள். பலர் அஞ்சல் வழியிலேயே பெற்றுக்கொள்கிறார்கள். வடமாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் பட்டமளிப்பு விழாக்களையே நிறுத்தி விட்டார்கள். இந்த அங்கி பட்டதாரிகளுக்கான உடை. அதைத் தாண்டி வேறுமாதிரியாக இதைப் பார்க்க விரும்பவில்லை!


மணிகண்டன் முனைவர் பட்ட மாணவர்

ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு விலகி 60 வருடங்கள் கடந்த பிறகும், அவர்கள் கடைப்பிடித்த கல்வி முறையைத்தானே இன்றுவரை கடைப்பிடிக்கிறோம். ஆங்கிலேயரின் கல்வித்திட்டம் சரி, அவர்கள் உடையை அணிவது மட்டும் தவறு என்பது என்ன நிலைப்பாடு..? நீங்களும் நானும் அணிந்திருப்பது கூட ஆங்கிலேயரின் உடைதானே? எல்லா கல்வி நிலையங்களையும் ஆங்கிலமே ஆக்கிரமித்திருக்கிறது. ஊருக்கு ஊர் ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள் தொடங்குகிறார்கள். அதெல்லாம் அடிமைச்சின்னம் இல்லையா? கல்வியில் உலகமே ஓர் குடையின் கீழ் திரண்டுவிட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று கூடப் படிக்க முடிகிறது. கறுப்பு அங்கி அணிவது மரியாதைக்குரிய நிகழ்ச்சி. அதை விவாதப் பொருளாக மாற்றக்கூடாது.


திருமலை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

இந்த விவாதம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இதை மிகப்பெரும் பிரச்னையாகப் பார்ப்பதும் குரல் கொடுப்பதும்தான் வேடிக்கை. இன்ஜினியரிங் படித்து முடிக்க 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. மருத்துவம் படிக்கவோ 45 லட்சம் ரூபாய்! கல்வி மிகப்பெரும் வணிகமாகி விட்டது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்லூரியைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கடி. பட்ஜெட்டில் 10 சதவிகிதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமும் கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், இதுவரை உள்நாட்டு உற்பத்தியில் வெறும் இரண்டேகால் சதவிகிதமே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இந்தப் பிரச்னைகளை எல்லாம் புறம்தள்ளிவிட்டு உடை விஷயத்தை முதன்மைப்படுத்தி விவாதிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.


முனைவர் திருவாசகம் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்

கல்வியைப் பொறுத்தவரை இன்று உலகளாவிய எல்லையை நாம் தொட்டுவிட்டோம். நாங்கள்கூட ‘சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்’ தொடங்கியிருக்கிறோம். இந்த முறைப்படி, வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் நம் நாட்டில் ‘மார்க் டிரான்ஸ்பர்’ செய்து கொள்ள முடியும். ஒரு பாடத்தை மட்டும் வெளிநாட்டில் படித்துவிட்டு அந்த மதிப்பெண்ணை இங்கே மார்க் ஷீட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த அளவு கல்வி வாய்ப்புகள் பரந்துவிரிந்துவிட்ட நிலையில் ‘அங்கி’ பற்றிய விவாதம் தேவையா? மாணவர்கள் இதை ஒரு மரியாதையாகக் கருதுகிறார்கள். நான் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, பட்டமளிப்பு விழாக்களை முறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் என் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அதில் சில பரிந்துரைகளை வழங்கியிருந்தோம். பட்டமளிப்பு விழா பற்றி ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் ஒவ்வொரு விதி உண்டு. வேந்தரில் தொடங்கி, துறைவாரியாக பட்டம் பெறும் மாணவர்கள் வரை இந்தந்த வகையிலான அங்கியை அணிய வேண்டும் என்று துல்லியமான விதிமுறைகள் இருக்கிறது. இதை துணைவேந்தர் நினைத்தால் கூட மாற்றமுடியாது. ஆளுநர் மட்டுமே பரீசீலிக்க முடியும். இந்த பாரம்பரியத்தில் கைவைக்க வேண்டாம் என்றே சொல்வேன்.

வெ.நீலகண்டன்