பல்லாயிரம் சிலைகளோடு ஒரு கோயில்!





‘‘இதோ இந்த சிலை நான் பிறக்குறதுக்கு முன்னாடி எங்க அப்பா, அம்மா செஞ்சு வச்சது. இந்தச் சிலை, என் பையன் பொறக்குறதுக்கு முன்னாடி ‘எங்களுக்கு ஆம்பிளைப் புள்ள பொறக்கணும்’னு வேண்டிக்கிட்டு நாங்க செஞ்சு வச்சது. அதோ அங்கே இருக்கு பாருங்க... டாக்டர் மாதிரி ஸ்டெதாஸ்கோப் போட்டுக்கிட்டு... அது, என் தங்கச்சிக்கு மெடிக்கல் சீட்டு கிடைக்கணும்னு வச்சது. அதோ அங்க புத்தகத்தை விரிச்சு வச்சுக்கிட்டு நிக்கிற சின்னப்பொண்ணு சிலை இருக்கில்ல... அது, சரியா படிப்பு ஏறலன்னு என் தம்பி மவளுக்காகச் செஞ்சு வச்சது...’’ & சீனிவாசன் சுட்டிக்காட்டும் சிலைகளைப் பார்க்க வியப்பாக இருக்கிறது! இந்தச் சிலைகளுக்குப் பின்னால், ‘எதைக் கேட்டாலும் 21 நாட்களில் நிறைவேற்றித் தரும்’ தெய்வ நம்பிக்கையும் பரவிக் கிடக்கிறது.

அரசு, நாவல் மரங்களும், அவற்றுக்கு இணையாக முட்செடிகளும் அடர்ந்து கிடக்கும் ஒரு ஒதுக்குப்புறம்... முகப்பில் உக்கிர முகத்தோடு அமர்ந்திருக்கும் அழகுமுத்து அய்யனார்&பொற்சிலை&பூரணி. அதன் பின்னே அழகர் சித்தர் இறங்கி காணாமல் போன கிணறு. இவற்றைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான சிலைகள். ஒவ்வொரு சிலைக்குப் பின்னாலும் ஒவ்வொரு வேண்டுதல்... நம்பிக்கை... இந்த அபூர்வம் நடந்திருப்பது, புதுச்சேரியிலிருந்து ஏம்பலம் வழியாக கடலூர் செல்லும் வழியில் இருக்கிற தென்னம்பாக்கத்தில். மிகச்சிறிய கிராமம். ஊரைச் சுற்றிலும் ஏராளமான கோயில்கள். அவற்றில் ஒன்றுதான் அழகுமுத்தையன் என்கிற அய்யனார் கோயில். இக்கோயிலுக்கு அருகில் தங்கியிருந்து, ‘உனக்கென்ன வேண்டும்’ என்ற வார்த்தையால் பக்தர்களை ஆசீர்வதித்து, இறந்துபோன அழகர் சித்தரின் கருணைதான் இங்கே சிலைகளின் வடிவத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர்.‘‘அழகர் ரொம்ப சக்தியுள்ளவருங்க. அவரு உயிர் பிரிஞ்ச எடத்துல ஒரு அணையா விளக்கு எரிஞ்சுக்கிட்டே இருக்கும். அதையே பாத்துக்கிட்டு தியானம் பண்ணுனா அந்த வௌக்கு ஒளியிலேயே அவரு காட்சி தருவார்னு மக்கள் நம்புறாங்க. அவரு தலத்துல நின்னு தங்களோட குறையைச் சொல்லி, குறிப்பிட்ட நாளுக்குள்ள குறை நிவர்த்தியானா சிலை வைக்கிறேன்னு வேண்டிக்குவாங்க. நிவர்த்தியான உடனேயே அதே கோலத்தில ஒரு சிலை வச்சிருவாங்க.

 
குழந்தை இல்லாதவங்க குழந்தை சிலை வப்பாங்க. கர்ப்பமா இருக்கவங்க என்ன குழந்தையை விரும்புறாங்களோ, அந்த சிலையை வைப்பாங்க. புள்ளை சரியா படிக்க மாட்டேங்குதுன்னா கையில புத்தகத்தோட சிலை வைப்பாங்க. வக்கீலா ஆகணும்னு நினைக்கிறவங்க, வக்கீல் டிரஸ்ஸோட சிலை வைப்பாங்க. கடந்த 20 வருஷமா சேந்த சிலைகளே லட்சக்கணக்குல இருக்கும். சிலைகள் சேரச் சேர, பழைய சிலைகளை தூக்கிப்போட்டுருவோம்’’ என்கிறார் கோயிலின் பூசாரி குமார்.மணக்கோலத் தம்பதி, வீடுகட்டும் நிலையில் பொறியாளர், சீருடை அணிந்த போலீஸ் என குவிந்து கிடக்கும் சிலைகளில் வியப்பூட்டுகிற எண்ணிலடங்கா கோரிக்கைகள். ஒரு குக்கிராமத்துக்குள் குடியிருந்துகொண்டு மாநிலம் கடந்தும் பக்தர்களை ஈர்க்கும் அழகர் சித்தர் யார்?‘‘அவரு 200 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவருங்க. அவரு யாரு, எங்கேயிருந்து வந்தார்னு எல்லாம் எங்களுக்குத் தெரியாது. அந்தக் காலத்துல இது கடும்காடா இருந்த பகுதி. ஆள் நடமாட்டமே இருக்காது. ஒருநாளு, அதோ அந்த அரசமரத்துக்கு கீழே இந்த சித்தர் உக்காந்து இருந்தாராம். அவருமேல நாலைஞ்சு பாம்புங்க எழஞ்சு திரிஞ்சிருக்கு. அதைப் பாத்த எங்காளுங்க மெரண்டு போயிட்டாங்க. மறுநாளு ஊரே கூடி, அவரை ‘யாரு என்ன’ன்னு விசாரிச்சி, சில கோரிக்கைகளை சொல்லியிருக்காங்க. எண்ணி 21 நாள்ல எல்லாம் நிறைவேறிப்போச்சு. அதுக்குப்பெறவு அவரை சாமியா கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க.



ஒருநாளு,நேரா இந்தக் கெணத்துக்குள்ள இறங்கிட்டாராம். எங்காளுங்க உள்ளே எறங்கி தேடிப் பாத்துருக்காங்க. உள்ள எதுவுமே இல்லையாம். அதுக்குப் பெறவு, அந்தக் கெணத்துமேல இந்தக் கல்ல வச்சு அவரையே தெய்வமாக கும்புட ஆரம்பிச்சுட்டாங்க. இப்பவும், குறைன்னு வந்து நின்னு எதைக் கேட்டாலும் எண்ணி 21 நாளுக்குள்ள நிறைவேத்தி வச்சிருவாரு’’ என்கிறார் இவ்வூரைச் சேர்ந்த மணி. கோயில் தர்மகர்த்தாவாக இருந்த ஒருவர்தான் சிலை செய்து வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார் என்கிறார்கள். ‘‘அய்யனார் கோயில்கள்ல மண்ணுல குதிரை சிலைங்க, மதலை சிலைங்க செஞ்சு வைக்கிறது வழக்கம். அச்சுல வார்த்தாப்புல சிமென்ட்ல செஞ்சு வைக்கிறது வேறெங்கையும் வழக்கத்தில இல்ல’’ என்கிறார் குமார்.வெளியிடங்களில் இருந்து சிலைகளைச் செய்து கொண்டுவந்து வைப்பது சிரமம் என்பதால், கோயில் அருகிலேயே ஒருவர் இந்தத் தொழிலைச் செய்கிறார். ஒரு சிலையின் விலை 2000 ரூபாயாம்.அழகர் சித்தர் கிணற்றுக்குள் இறங்கிய நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் தென்னம்பாக்கம் மக்கள். அன்றைய தினம் பல்லாயிரம் பேர் கூடுகிறார்கள். குழந்தைகள் தங்களுக்காக வைக்கப்படும் சிலைகளை அடையாளம் கண்டு குதூகலிப்பது சுவாரஸ்யம் மிகுந்த காட்சி. உலகிலேயே சக்தி மிகுந்த மருந்து நம்பிக்கைதான் என்பார்கள். அந்த நம்பிக்கையின் மகத்துவம் தென்னம்பாக்கம் அழகர் சித்தர் சந்நதியின் எல்லாத் திசைகளிலும் சிலைகளாக பரவிக் கிடக்கிறது!

வெ.நீலகண்டன்