ராசி கோயில்கள்



பன்னிரெண்டு ராசிகளுக்குள் கும்பத்தையும், மகரத்தையும் சனிதான் ஆள்கிறது. ஆனாலும் மகரத்தில் பிறந்தவர்களுக்கும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு. மகரத்தை சர ராசி என்று அழைப்பர். அதாவது ஒருமுறை யோசித்தால் திரும்பத் திரும்ப அதையே ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். சரவெடி போல வெடித்துத் தள்ளுவார்கள். எதிலேயுமே ஒரு வேகம் இருந்து கொண்டிருக்கும். அடுத்து அடுத்து என ஓடிக் கொண்டிருப்பார்கள். ஆனால், கும்பத்தில் பிறந்தவர்கள் இதற்கு நேர்மாறாக இருப்பார்கள். அது சர ராசியெனில் இதை ‘ஸ்திர ராசி’ என்பார்கள். நின்று நிதானமாகவே எந்த முடிவையும் எடுப்பீர்கள். பொறுமை, சாந்தம் என்பதுதான் உங்களின் பொதுவான இயல்பாக இருக்கும். ‘உலகம் உருண்டைதானே... பார்த்துக்கலாம்! எப்படிப் பார்த்தாலும் எங்கிட்ட அவன் வந்துதானே ஆகணும். யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வராமலா போயிடும்’ என்று எதிரிகளைக்கூட விட்டுப் பிடிப்பீர்கள். சனி கிரகத்தினுடைய மெதுவான போக்கு கும்ப ராசியின் மூலமாக வெளிப்படும்.கும்பம் என்றாலே, அது ஒரு குடத்தின் அமைப்பைத்தான் குறிக்கும். குடத்தை திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இந்த ராசியில் பிறந்தவர்கள் தனக்குள் இருப்பதை வெளியே தெரியாமல் வைத்திருப்பீர்கள். பத்து நிமிஷம் பேசியதற்குப் பிறகுதான் உங்களுடைய விஷயத்தை சொல்லவே ஆரம்பிப்பீர்கள். உங்களிடத்தில் பல ஆற்றல்கள் குவிந்து கிடக்கும். ஆனால் அதை சரியாக வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டல் இல்லாமல் உங்களிடம் விஷயத்தைக் கறப்பது கடினம்தான். நான்கு விடைகள் கொடுத்து எது சரி என்று கேட்டால் நான்குமே சரியாக இருக்குமோ என்று யோசிப்பீர்கள். எல்லா விஷயங்களுக்கும் ஊடாக ஒரு தொடர்பு இருப்பதை உணர்வீர்கள். எல்லாமுமே சக்தியின் மொத்த வடிவம்தானே என்கிற கும்பத்தின் தத்துவம் உங்களிடத்தில் உங்களையறியாது வெளிப்படும்.



இரண்டாம் இடமான தனம், குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். தனுசு குரு அமைதியாகப் பேசுவார் எனில், நீங்களோ ஒரு பிரச்னையை நாட்டு வக்கீல்போல வளைத்து வளைத்துப் பேசுவீர்கள். ஒருவர் சார்பாக பேசாது இருவரின் தரப்பிலுள்ள நியாயத்தையும் சொல்வீர்கள். இரண்டு தரப்புமே கட்டுப்படுவதுபோல தீர்வு சொல்வீர்கள். ஏனெனில், சனி ஒரு நீதிக் கிரகம் ஆகும். சனி ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமைந்து விட்டால் எளிதாக வக்கீலாகவும், ஜட்ஜாகவும் அமர்ந்து விடுவார். பள்ளியில் படிக்கும்போது வகுப்பறையில் நீங்கள் இருந்தாலும் மனம் எங்கேயாவது திரிந்தபடி இருக்கும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களெல்லாம் எப்போதாவது அரிதாகத்தான் எடுப்பீர்கள். ஆனால், மொழித்திறன் அதிகமாக இருக்கும். இரண்டாம் இடமானது பணவரவை குறித்தும் சொல்வதால் கணிசமாக ஒரு தொகை வந்து கொண்டே இருக்கும். அந்த வரவில் சிறிய அளவே சேமிப்பாக இருக்குமே தவிர, பெரிய அளவில் ஓரிடத்தில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ‘ஏன் இப்படி செலவு செய்கிறீர்கள்’ என்று கேட்டால், ‘இறைக்கிற கிணறுதான் சுரக்கும்’ என்பீர்கள்.மூன்றாம் இடத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருவதால் காரசாரமான உணவுகளை உட்கொள்வீர்கள். வறுத்தது, பொரித்தது மற்றும் குத்து வெட்டு உணவு இருந்தால் ஒரு கை பார்ப்பீர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் அசைவப் பிரியர்களாக இருப்பீர்கள். மேலும் மூன்றாமிடம் என்பது இளைய சகோதரர், மற்றும் முயற்சி ஸ்தானத்தையும் குறிக்கிறது. இளைய சகோதரருக்கு நிறைய உதவிகள் செய்வீர்கள். ஆனால், திடீரென்று ஒட்டு உறவு இல்லாமல் தனித்துப் போகும் நிலையும் ஏற்படும். ஏனெனில், மேஷச் செவ்வாய் எமோஷனலாக முடிவுகளை எடுப்பார். ‘எவ்ளோ நாள்தான் பொறுமையா இருக்கறது... என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க...’ என்றெல்லாம் யோசிக்க வைப்பார். அதனால் இளைய சகோதரர் வழியில் வரவும் பிரிவும் சகஜமாக இருக்கும்.

நான்காம் இடமான தாய் ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், தாயாரை எப்படி நேசிப்பீர்கள் என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. சிலர் கைகளில் அம்மாவின் பெயரை பச்சை குத்தி வைத்துக் கொள்வர். நான்காம் இடத்தை சுக ஸ்தானம் என்றும், வாகன ஸ்தானம் என்றும் அழைப்பர். இதற்கு சுக்கிரனே வருவதால் ‘அலுவலகம் கூட ஆலமரத்தின் கீழ் இயற்கையாக இருந்தால் எப்படியிருக்கும்’ என்று யோசிப்பீர்கள். சிறிய இடமாக இருந்தாலும் பங்களாவின் அழகைக் கொண்டு வருவீர்கள். கைக்கு அருகேயே எல்லாப் பொருட்களையும் வைத்துப் பழகி உபயோகிக்கும் பழக்கம் இருக்கும். ஓட்டை, உடைசலாக இருந்தாலும் முதலில் வாங்கிய வண்டியை பத்திரமாக வைத்திருப்பீர்கள். அதேநேரம் விதம்விதமான வாகனங்களை வாங்கியபடியும், விற்றபடியும் இருப்பீர்கள். எங்கேனும்   exchange offer  என்கிற போர்டு இருந்தால், அங்கு முதல் நபராய் நிற்பீர்கள். ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக மிதுன புதன் வருவதால் பூர்வ புண்ணியம் அதிகமாக இருக்கும். சிறியதாக எப்போதும் அதிர்ஷ்டம் உண்டு. ஆனால், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குள் வரும் குழந்தைப்பேறு தாமதமாகத்தான் இருக்கும். உங்களில் சிலருக்கு கர்ப்பச் சிதைவுக்குப் பிறகோ, தாமதமாகவோ, மருத்துவ உதவியாலோ குழந்தை பிறக்கும். ஒரு சிலருக்கு முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும். குழந்தை பிறந்த பிறகு உங்களின் பூர்வ புண்ய அம்சங்கள் அந்தக் குழந்தையைச் சூழ்ந்து கொள்ளும். பிள்ளைகளால் உங்களின் அந்தஸ்து பன்மடங்கு பெருகும். ஐந்துக்குரிய புதனே எட்டாம் இடத்திற்கும் அதாவது கன்னி புதனாக வருகிறார். எட்டாம் இடம் என்பது ஆயுளைக் குறிப்பதால், அதற்கு கன்னி புதன் அதிபதியாக வருவதால் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.
 
ஆறாம் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். அழகு, ஆடை, அலங்காரம் போன்றவற்றிற்கு உரியவராகவும் வருகிறார். அதனால் ஒப்பனைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். நோயைக் குறிக்கும் இடமாகவும் இது வருவதால் ஒவ்வாமை, சீதளம், வீசிங், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் அவதிப்படுவீர்கள். ஏழாம் இடத்திற்கு அதிபதியாக சூரியன் வருகிறார். உங்கள் ராசிநாதனான சனிக்கு சூரியன் எதிர்மறை கிரகம் ஆவார். அதனால் வாழ்க்கைத்துணையுடன் சண்டை போட்டுக் கொண்டே ஒற்றுமையாக இருப்பீர்கள். தவிர்க்க முடியாமல் சிலருக்கு இரண்டாம் தாரமும் உண்டு. பாக்யாதிபதியான ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இதனால் அப்பா என்ன தொழில் செய்தாரோ, அதுவே உங்களுக்கு அமையும். ஆனாலும் ஏதோ சில காரணங்களால் அப்பாவைப் பிடிக்காமல் போகும். அதை வெளியில் சொல்லாமல் பூட்டி வைத்துவிடுவீர்கள். பத்தாம் இடத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறார். அது உங்களின் தொழில் ஸ்தானத்தைப் பற்றியும் பேசுகிறது. ஜோதிடம், மாந்திரீகம் என்று ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்து வகைகள் போன்ற கம்பெனிகளில் பணிபுரிவீர்கள். கோதண்ட குரு எனும் தனுசு குரு உங்களின் பதினோராம் இடத்திற்கு அதிபதியாக வருகிறார். அரசாங்கத்தோடு தொடர்புடைய தொழில்களில் டெண்டர் எடுப்பீர்கள். திடீரென்று மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் அதிக லாபம் பெறுவீர்கள். பன்னிரெண்டாம் இடத்துக்கு மகரச் சனி அதிபதியாக வருகிறார். ராசிநாதனே உங்களுக்கு விரயாதிபதியாக வருவதால் மனசுக்குப்பிடித்தவர்களுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். ராசியாதிபதியே பன்னிரெண்டாம் இடத்துக்கு அதிபதியாக வருவதால் மறுபிறவி இல்லாமல் செய்து விடுவார். ‘கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கான். நமக்கெதுக்கு அந்தப் பணம்’ என்று குறுக்குவழியில் நுழைய அஞ்சுவீர்கள். சொந்த ஊரில் கோயில் கட்டுவீர்கள். அல்லது இருக்கும் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நிகழ்த்துவீர்கள்.
 
 கும்பம் என்பது அடக்கி வைத்திருக்கும் சக்தியைக் குறிப்பது. அதனால் மந்திர, தந்திரங்கள் அனைத்தையும் கும்பத்தில் வைத்து சக்தியேற்றுகிறார்கள். கோயிலின் கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் வைத்துத்தான் தீர்த்தத்தை அபிஷேகம் செய்கின்றனர். எல்லாவற்றையும் ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் சக்தியை சிதறாது செய்யும் ஒரே சக்தி கும்பத்திற்கு மட்டும்தான் உண்டு. இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்தியும் ஒடுங்கிய ஆலயத்திற்கு செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம் ஆகும். அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமக குளத்தில் அமுதமாக கொட்டியது. ஈசன் அத்தல திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், அமுத கும்பேஸ்வரர் எனவும் பல்வேறு திருநாமங்களோடு அருளாட்சி செய்தார். பிரம்மா மழலையொன்று மாமலையைப் பார்ப்பதுபோன்று நிகழ்ந்தவற்றை பிரமிப்போடு பார்த்தார். ‘ஐயனே... என் சிவனே...’ என கும்ப லிங்கத்தைப் பூஜித்தார். வானவரும், தேவர்களும் கும்பேசருக்கு பிரம்மோற்சவம் நடத்தினர். எத்தனை யுகாந்திரங்களுக்கு முன்பு அமைந்த கும்பேஸ்வரர் இன்றும் பேரருள் பொழிகின்றார். பாவங்கள் நீக்கும் தலமாக காசியைக் குறிப்பிடும் புராணங்கள், அதைவிட ஒரு படி மேலேற்றி ‘கும்பகோணத்தில் செய்த பாவம் கூட காசியில் கரையாது. கும்பகோண மகாமக தீர்த்தம்தான் பாவ நிவர்த்தி’ என்கின்றன. இத்தல அம்பாளின் திருநாமம் மங்களாம்பிகை ஆகும். ஈசன் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அம்பாளின் உடற்பாகம் திருவடி முதல் திருப்பாத நகக்கணு வரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் இந்தப் புராணத்தைப் புரிந்துகொண்டு ஈசனை தரிசித்து வாருங்கள். கும்பகோணத்திற்கு எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

அடுத்த வாரம் அவிட்டம் 3, 4 பாதங்களில் பிறந்த அன்பர்களுக்காக...

முனைவர் கே.பி.வித்யாதரன்