வீடு





நினைவிருக்கிறது...

இன்னும் நினைவிருக்கிறது...
நான் பிறந்த வீட்டின்
சிறிய ஜன்னல் வழியே
அதிகாலையில்
என்னைச் சந்தித்த முதல் சூரியன்!
- தாமஸ் கூட் (பிரிட்டிஷ் கவிஞர்)

பட்டா பெறுவதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? விளக்குகிறார் ட்ரைஸ்டார் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பா.ஜார்ஜ் பீட்டர் ராஜ்.

1. தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யும்போதே நமக்கு   ஸிறிஜி (ரெவின்யூ பட்டா டிரான்ஸ்பர்) எண் வழங்கப்படுவதில்லை. பின்னரும் தெரிவிக்கப்படுவதில்லை.

2. ஒரிஜினல் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கான தகவல் சாதாரண தபால் மூலமே அனுப்பப்படுகிறது. தபால் தாமதமானாலோ, கிடைக்காவிட்டாலோ நாம் அவர்கள் குறிப்பிட்ட தேதியில் ஆஜராக வாய்ப்பில்லை. இதைக் காரணமாகக் கொண்டே விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்வதும் உண்டு. சில மாதங்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தாலுகா அலுவலகத்தில் விசாரிக்கும்போதுதான், அது தள்ளுபடி ஆன விஷயமே தெரியவரும். சில கேஸ்களில் தபால் கிடைக்காததற்கு விண்ணப்பதாரர்களே காரணமாகி விடுகிறார்கள். விண்ணப்பத்தில் முகவரி குறிப்பிடும்போது சொத்து வாங்கிய கிரயப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியை கொடுத்து விடுவார்கள். அதைத்தான் கொடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், நாம் இப்போது எங்கு குடியிருக்கிறோமோ அந்த முகவரியையே கொடுக்க வேண்டும். பழைய முகவரி கொடுத்தால் நமக்கு அனுப்பப்படும் தகவல் தபால் வந்து சேராது!

3. பட்டா தயாரான பிறகும் நமக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை.இப்படிப்பட்ட அலைச்சல் பிரச்னைகளாலேயே பட்டா விண்ணப்பம் செய்ய பலர் யோசிப்பது உண்டு. வேறுசில வழிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தினால் சிக்கல்கள் வெகுவாகக் குறையும்.RPT எண்ணையும் ஒரிஜினல் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கு நமக்கு அனுப்பும் தகவலையும் பதிவுத்தபாலில் அனுப்பலாம். மின் அஞ்சல், எஸ்எம்எஸ் போன்ற நவீன வசதிகளைப் பயன்படுத்தலாம்.RPT எண்ணைப் பயன் படுத்தி இணையதளத்தின் மூலம் நமது பட்டாவின் இப்போதைய நிலையை தெரிந்துகொள்ள வசதி செய்யலாம். பட்டா தயாரானவுடன் பதிவுத்தபாலில் விண்ணப்பதாரருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம். இவ்வசதிகளை செய்து கொடுப்பதற்கு விண்ணப்பதாரரிடம் தனிக்கட்டணம் வசூலிக்கலாம். இதைவிட சிறப்பான எளிதான முறை ஒன்றும் உண்டு. அது...சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்படும்போதே பட்டா மாற்றத்துக்கான விண்ணப்பத்தையும் கட்டணத்தோடு பெற்று, அதற்கான ரெஃபரென்ஸ் எண் உரிமையாளருக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த விண்ணப்பம் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து நேரடியாக வருவாய்த் துறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து உரிமையாளருக்கு பட்டா வழங்கப்பட்டால் எவ்வளவு ஈஸி!

குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் திட்டங்களை மனதில் கொண்டு நிலத்தில் முதலீடு செய்வோரே அதிகம். இவர்கள் பொதுவாக புறநகர் பகுதி லே அவுட்டில் மனை வாங்கும் ஆசாமிகள். விற்பனையாளர் கொடுக்கும் விளம்பரம் மற்றும் இலவசப் பரிசுகளில் ஈர்க்கப்பட்டு, ‘குறிப்பிட்ட காலத்தில் விலை பன்மடங்கு உயர்ந்துவிடும்’ என்ற நம்பிக்கையில் முதலீடு செய்கிறார்கள். மற்ற வியாபாரங்களைப் போலவே ரியல் எஸ்டேட் தொழிலிலும் பல இலவச அறிவிப்புகள் வெளியாகின்றன. ‘எங்கள் லே அவுட்டில் வீட்டுமனை வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு இலவசம், பட்டா இலவசம், விலை உயர்ந்த பொருட்கள் இலவசம், மூன்றாண்டு பராமரிப்பு இலவசம்’ & இப்படிப்பட்ட கவர்ச்சி அறிவிப்புகளை நம்பி நிலம் வாங்குகிறார்கள். ஆனால், அது அங்கீகரிக்கப்பட்ட லே அவுட்டா எனப் பார்ப்பதில்லை. எப்படிப்பட்ட வீட்டுமனையை வாங்க வேண்டும் என்றும் அறிந்துகொள்வதில்லை. அங்கீகரிக்கப்பட்ட லே அவுட்டுக்கும், அங்கீகரிக்கப்படாத லே அவுட்டுக்கும் உள்ள வித்தியாசமும் புரிவதில்லை. ‘நீங்கள் மனை வாங்கியிருக்கும் லே அவுட் அங்கீகரிக்கப்பட்டது (approved)தானா’ எனக் கேட்கும்போது அவர்களிடமிருந்து வரும் பதில் ‘ஆம்’ என்பதுதான். அதோடு, இன்னொன்றையும் சேர்த்துச் சொல்வார்கள்... ‘பஞ்சாயத்தால் அங்கீகரிக்கப்பட்டது’ என்று. ‘பஞ்சாயத்து அங்கீகாரம்’ என்ற ஒன்று கிடையவே கிடையாது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அப்படியானால்..? அடுத்த வாரம்...

(கட்டுவோம்!)