உழைக்கும் வளைக்கரங்களே!





‘‘நாடோடி பொழப்பு, ரேஷன் கார்டுகூட கிடையாது. ஊர்க்கொடைக்கு வந்தா சொந்தங்களைப் பார்ப்போம். பள்ளிக்கூடமே போனதில்லைன்னாலும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மராத்தி, இந்தினு பல மொழிகள் பேசத் தெரியும். ஆனா, கால் வயித்துக் கஞ்சிக்கு ஊர் ஊராத் திரியறோம். வயசுக்கு வந்த பொம்பளப்பிள்ளைகளை வீட்டில் விட்டுட்டு நாங்க நிம்மதியா வேலை பார்க்க முடியாது. அதனால அவங்களுக்கும் வேலையக் கத்துக் கொடுக்கறோம். கிணறு வெட்றது, ஏரிய தூர் வார்றதுதான் எங்க வேலை. தலையில மண்ணு சுமந்த பொம்பளப் பிள்ளை இப்போ கிரேன் ஓட்டுது!’’ என்று பெருமையுடன் சிரிக்கிறார் செல்வராஜ்.

‘‘பல தலைமுறையா கிணறு வெட்றோம். வயசுக்கு வர்ற வரைக்கும் ஸ்கூலுக்கு அனுப்புவோம். பிறகு படிப்பை நிறுத்தி எங்களோட வச்சுக்குவோம். வேலை பழகி ரெண்டு, மூணு வருஷத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்துருவோம். எங்க குடும்பத்தில் பிறக்கிற பொம்பளைங்க நடை தளர்ற வரைக்கும் மண்கூடை சுமந்தாகணும்...’’ என ஆறுமுகம் விட்ட பெருமூச்சின் அங்கலாய்ப்புக்களை அடியோடு மாற்றியிருக்கிறது சுசீலா, சின்ன சித்ரா, சித்ரா ஆகியோரின் முயற்சி! எட்டாம் வகுப்புடன் படிப்புக்கு டாட்டா சொல்லி மண் சுமக்க வந்த குட்டிப்பெண்கள்... இவர்கள் வேலை பார்த்த இடத்தில் ஆண்கள் மண் அள்ளப் பயன்படுத்தும் கிரேன் இயக்கினர். பெரிய இரும்புத் தட்டில் மணலை நிரப்பி அதில் உள்ள சங்கிலியை கிரேனில் மாட்டினால், அது தட்டைத் தூக்கிவந்து லாரியில் கொட்டியது. இதைப் பார்த்த இவர்கள் மூவருக்கும் கிரேனை இயக்கிப் பார்க்க ஆசை. மெல்ல மெல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதற்கான பட்டயப்படிப்பு முடித்தவர்களே களத்தில் இறங்கி வேலை செய்யும்போது திணறுவார்கள். இவர்களோ இந்த எந்திரத்தை மிக லாவகமாகக் கையாளுகின்றனர். இரண்டு வருடங்களில் மூவரும் கிரேன் ஆபரேட்டர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர்.‘‘மண் அள்ளும் சித்தாள் வேலைக்குச் சேர்ந்தோம். வெயில் நேரத்தில் காலை 6 மணிக்கு வரவேண்டும். வெயில் தாண்டி மாலை வரை கிணறு வெட்டும் வேலை. காட்டுப்பகுதியில்கூட வேலை செய்ய வேண்டியிருக்கும். மெல்ல மெல்ல கிரேன் ஆபரேட் செய்து பழகினோம். உயரமான இடங்களில் நின்று கிரேன் இயக்கும்போது ஆழமான கிணற்றைப் பார்த்தால் தலை சுற்றும்... பயமாகவும் இருக்கும். அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். இப்போ வேலைக்கு இடையில் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கிறது. சித்தாள் வேலைக்கு சேர்ந்த நாங்க இப்போ கிரேன் ஆப்பரேட்டர்கள்!’’ என்று பெருமையாகச் சிரிக்கின்றனர். வளையல்கள் அணிந்த கைகளைவிட கூடுதல் அழகு உழைக்கும் கைகளுக்கு உண்டு!

ஸ்ரீதேவி