ஒண்ணாம் வகுப்பு படிக்கிறபோதே, நல்லா மனப்பாடம் பண்ற பக்குவம் எனக்கு வந்திருச்சு. நாகுப்பிள்ளை வாத்தியாரு நிறைய தமிழ்ப்பாடல்களைச் சொல்லிக் குடுப்பாரு. சாக்பீஸ்ல படம் வரைஞ்சு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்களை எழுதி வச்சிருப்பாரு. எங்க அய்யாவை விட ஒருபடி அதிகமா எம்மேல அக்கறை எடுத்துக்குவாரு. அப்போ என் குடும்பம் இருந்த நிலைமையில, நாகுப்பிள்ளை ஆசிரியர் மட்டும் இல்லாமப் போயிருந்தா, என் அண்ணனுங்க போல நானும் ஒரு வேட்டிய சுத்திக்கிட்டு ஹார்வி மில்லுக்கு கூடை சுமக்கப் போயிருப்பேன். வறுமை ஏற்படுத்துன காயங்கள்ல இருந்து என்னை மீட்டு, படிப்பு மேல ஒரு பிரியத்தை உருவாக்குனதுல நாகுப்பிள்ளை வாத்தியாருக்கு முக்கியமான பங்கு இருக்கு. நாலாவது படிச்சிக்கிட்டிருந்தேன். ரெண்டாவது உலகப்போரு தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு. கார்ப்பரேஷன்ல ஒரு பேச்சுப் போட்டி. யுத்தத்தால ஏற்படக்கூடிய விளைவுகளைப் பத்திப் பேசணும். நாகுப்பிள்ளை வாத்தியாரு அதுக்காக ஒரு கட்டுரை எழுதினாரு. என்னைக் கூப்புட்டு, 'டேய் பாப்பு... இதை நாளைக்கே மனப்பாடம் பண்ணிக்கிட்டு வரணும்’னு உத்தரவு போட்டாரு.மறுநாளு, மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்தேன். ‘டேய்... சொல்லிக் காட்டுடா’ன்னாரு. கையப் பின்னாடி கட்டிக்கிட்டு கடகடன்னு ஒப்பிச்சேன். ‘ஏண்டா கையக் கட்டுறே’ன்னு கேட்டாரு. ‘ரொம்ப உதறல் எடுக்குதுய்யா’ன்னு சொன்னேன். ‘கையக் கட்டக்கூடாதுடா... வேணும்னா சட்டையை முன்னால புடிச்சுக்கோ’ன்னு சொல்லிட்டு, போட்டி நடந்த இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாரு.
மதுரை, கிருஷ்ணன்கோவில் பக்கத்துல இருந்த தொடக்கப்பள்ளிலதான் போட்டி. கல்வி அதிகாரிங்க முன்னிலையில நான் தத்தித் தத்தி ஒப்பிச்சேன். என்னைவிட சிறப்பாவும் ஆக்ஷனோடவும் பேசுன இன்னொரு பையனுக்குப் பரிசு கெடச்சிச்சு. ஆனாலும் என்னை அன்பா அணைச்சுக்கிட்ட நாகு வாத்தியாரு, ‘டேய்... பரிசு பெருசில்லடா. நீ நல்லாப் பேசுனேடா... நம்ம ஸ்கூலுக்கே பெருமை சேத்துட்டே’ன்னு பாராட்டுன பாராட்டு இருக்கே..! வடை, போண்டான்னு விதவிதமா தின்பண்டங்களை வாங்கித் தந்து, ‘தின்னுடா’ன்னு பெத்த புள்ளையைப் பாக்குறது மாதிரி என்னைப் பாத்தாரு. இன்னைக்கு கிடைக்கிற பேர், புகழ் எல்லாமே நாகு வாத்தியாரோட வெள்ளந்தியான அந்த பாராட்டுக்கு முன்னால சின்னதாப் போயிருச்சுய்யா..!ரெண்டாம் வகுப்புல இன்னொரு வித்தியாசமான வாத்தியாரு... டேனியல்னு பேரு. அவருதான் சமய சமரச சிந்தனையை எனக்குள்ள ஊன்றி விட்டவரு. அவரும் கிறிஸ்தவருதான். ஆனா, அனுமனை வணங்குவாரு. ‘இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எல்லாம் ஒண்ணுதாண்டா’ம்பாரு. பள்ளிக்கூட சுற்றுச்சுவர்ல பெரிசா ஒரு அனுமன் படத்தை வரைஞ்சி வச்சிருப்பாரு. வெள்ளிக்கிழமையானா படத்துக்கு முன்னாடி எல்லாரும் வரிசையா உக்காந்து தியானம் பண்ணணும். நாங்களும் ஆர்வமா போய் உக்காருவோம். தியானம் பண்றதுக்காக இல்லே... கடைசியா, பொரிகடலையும் வெல்லமும் குடுப்பாரு... அதுக்காக!அந்தக்கால மதுரைக்கும் இப்போ உள்ள மதுரைக்கும் நிறைய வித்தியாசம்யா. இப்போ மாசி வீதி இருக்கே... அதோட மதுரை முடிஞ்சுபோச்சாம். மத்ததெல்லாம் பின்னாடி சேந்ததுதானாம். பெரியார் பேருந்து நிலையம் இருக்கிற எடத்துக்கு எதுத்தாப்புல ஒரு கோட்டை இருந்ததுக்கான அடையாளம் இருக்கு.
அந்தக் கோட்டைக்குள்ள அடங்குன பகுதிதான் மதுரையாம். கோட்டையை இடிச்சு விரிவு படுத்தினப்போ கிழக்குப் பக்கத்தில, விட்டுப்போன மிச்சம் கொஞ்சம் இருக்கு. அதுக்குப் பேரே ‘விட்டவாசல்’தான். இப்போ ரயில்வே ஸ்டேஷன் இருக்கே... அந்த இடத்தை தேர்வு பண்ணினப்போ, ‘மதுரைக்கு வெளியே ஸ்டேஷன் கட்டக்கூடாது’ன்னு மதுரை நகரசபை தீர்மானமே போட்டுச்சாம். வெளிவீதியில இருந்த அகழிகளை எல்லாம் மண்ணைக் கொட்டி தூத்து, சதுர அடி இவ்வளவுன்னு வெள்ளைக்காரன் வித்திருக்கான். அந்த இடங்களை கம்யூனிட்டி கம்யூனிட்டியா மக்கள் வாங்கியிருக்காங்க. அப்படி விரிவடைஞ்சதுதான் இப்போவுள்ள மதுரை மாநகரம். எனக்குத் தெரிய, மதுரையில எந்தப் பக்கம் பாத்தாலும் பூங்காக்களா இருக்கும். கிழக்கு கோபுர, மேற்கு கோபுர வாசல்கள், மிஷன் ஆஸ்பத்திரிக்குப் போற வழின்னு பல பகுதிகள்ல பசுமை படர்ந்து கிடந்துது. வெள்ளைக்காரன் காலத்துல நல்லாவே பராமரிச்சாங்க. ஆனா, நம் மக்கள் பசுமை பற்றின நாகரிகமே தெரியாம, எல்லாத்தையும் ஆக்கிரமிச்சு கட்டிடங்களா மாத்திட்டாங்க. மதுரையில எங்களுக்கு விளையாட்டுத் திடல்னா வைகை ஆறுதான். அப்போல்லாம் தண்ணியில்லாக் காலங்கள்ல, வைகையில ததும்பத் ததும்ப மணல் கிடக்கும். இப்போ மண்ணை அள்ளி அள்ளி வைகையை நிர்வாணப்படுத்திட்டாங்க. பொட்டைக்காடா மாறிப்போச்சு. நதி, வனம் எல்லாத்தையும் அழிச்சு கான்க்ரீட் காடா மாத்திக்கிட்டே போனா, நாளைக்குக் குடிக்க தண்ணியும் திங்க சோறும் கிடைக்காதுங்கிற உண்மையை நம்ம மக்கள் எப்போதான் புரிஞ்சுக்கப்போறாங்களோ தெரியலே...
வைகையில தண்ணி வர்ற காலங்கள்ல, ஆத்தை ஒட்டி இருக்கிற இடுகாட்டுக்குப் போயிருவோம். அதுல ஒரு பக்கம் இந்துக்களோட கல்லறை; இன்னொரு பக்கம் கிறிஸ்தவர்களோட கல்லறை. நடுவுல நீளமா ஒரு பகுதி இருக்கும். அதுல விளையாடுவோம்.கிட்டிப்புல்லு, பம்பரம் குத்துறது, மொறைகாரப் புள்ளைகளோட நொண்டி விளையாடுறதுன்னு வெளையாட்டு களை கட்டும். தாயம் விளையாட்டுல தோக்குறவங்க நெத்தியில நாமம் போடுவோம். பாவம், இன்னைக்கு உள்ள புள்ளைகளுக்கு இந்த மாதிரி விளையாட்டுங்க எல்லாம் அந்நியமா போயிருச்சு. டிவி பொட்டிகளும், கம்ப்யூட்டர்களுமே அவங்க சந்தோஷமா மாறியிருக்கு. ஓடியாடிக் களைச்சு, உடம்பு உருக விளையாட இப்போ கிராமப்புறப் புள்ளைகளுக்குக்கூட நேரமில்லே. பெத்தவங்களை விட இன்னைக்கு புள்ளைங்களுக்குத்தானே அதிக பணிச்சுமை. படிப்பு, வீட்டுப்பாடமுன்னு..!தாய வெளையாட்டுல மட்டும் என்னை அடிச்சுக்க ஆளே இல்லே. மொறப்புள்ளைக நெத்தியில பலதடவை நாமம் போட்டிருக்கேன். ஆனா, மத்த எல்லா விளையாட்டுலயுமே தோத்துப்போற ஆளு நானாத்தான் இருப்பேன். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போறது அப்போ பெரிய கொண்டாட்டமா இருக்கும். எனக்கும் மீனாட்சிக்குமான பந்தம் நான் கைக்குழந்தையா இருக்கையிலேயே தொடங்கிருச்சு. எங்க அய்யாவும் அம்மாவும், ஏதோவொரு வேலையா என்னைத் தூக்கிக்கிட்டு மீனாட்சியம்மன் கோயில் பக்கமா போயிருக்காங்க. அம்மாவையும் என்னையும் விட்டுட்டு அய்யா வேறொரு இடத்துக்குப் போயிட்டாரு. அய்யாவை ரொம்ப நேரமா காணுமேன்னு அம்மாவுக்குக் குழப்பம்.
அந்தக் குழப்பத்தில என்னைக் கவனிக்காம விட்டிருச்சு. கோயிலைச் சுத்தி புதுசா கம்பிவேலி போட்டிருக்காங்க. அம்மா இடுப்புல இருந்த நான், அந்த வேளைல இறங்கிப் போயி அந்த கம்பி வேலிக்குள்ள தலையைக் குடுத்துட்டேன். திரும்ப எடுக்க முடியலே... கத்தியிருக்கேன். அம்மா, பதறிப்போயி தலையை இழுத்துப் பாக்குதாம். அதாலயும் இழுக்க முடியலே. உடனே அம்மா குரலெடுத்துக் கத்த, பெருங்கூட்டமே கூடிருச்சாம். பாருங்கய்யா... கைக்குழந்தையா இருக்கையிலேயே நமக்கு பெரிய கூட்டம் கூடியிருக்கு!கடைசியா யாரோ ஒரு மனுஷன் வந்து, சிரமப்பட்டு, சேதாரம் இல்லாம தலையை வெளியே எடுத்தாராம். அதுக்கப்புறம் எங்க அம்மா, ‘அன்னைக்காவது போயித் தொலைஞ்சியா, நிம்மதியா இருந்திருப்பேனே’ன்னு திட்டும்.அந்த கம்பி வேலியிருக்கே... அதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்குய்யா. இப்போ இருக்கிற மாதிரி அப்போ பாத்ரூம், டாய்லெட் வசதியெல்லாம் இல்லே... கோயிலுக்குப் பின்னாடிதான் எல்லாம். கால் வைக்கவே சங்கடமா இருக்குமாம். ஏதோ ஒரு வருஷம், இந்தக் கோயிலுக்கு வந்த உ.வே.சாமிநாதய்யர் இந்தக் காட்சியைப் பாத்து வருத்தப்படுறார். ‘எவ்வளவு புனிதமான இடம்... இதைப்போயி இப்பிடி அசிங்கப்படுத்துறாகளே’ன்னு வருந்தி அவரோட வரலாற்று நூல்ல எழுதுறார். அதுக்குப்பிறகு, நகரத்தார் ஒருத்தர் அவரோட செலவுல இந்த வேலியைப் போட்டுக் குடுத்திருக்காரு. நகரத்தார்களுக்கும் மீனாட்சியம்மனுக்கும் இருக்கிற பந்தம் இருக்கே, அது உணர்வுபூர்வமான பந்தம்யா..!