பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க!





ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்று சொல்வதைப் போல, துறைகளை எடுத்துச் சொன்னாலும் சொல்லலாமே தவிர, நிறுவனங்களைப் பற்றி சொல்லக் கூடாது. ஏனென்றால், இது பொதுப்படையாக முதலீடு பற்றியும், முதலீட்டில் பங்குச் சந்தை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றியும் பேசும் மேடை! நிறுவனங்களைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் முழுமையாக அலசி ஆராய்ந்து சொல்லவேண்டும். அதைப் பற்றிய ஆராய்ச்சி என்பது கணக்குப் பாடத்தைவிட உன்னிப்பாகப் பின்தொடரவேண்டிய விஷயம். அதனால், அதையே வேலையாகப் பார்க்கும் பங்குத் தரகு நிறுவனங்களின் கருத்துகளைக் கேட்டு ஆலோசித்துக் கொள்வதுதான் நல்லது. பொதுவாகச் சொல்லும் கருத்து, நிறுவனங்களைப் பரிந்துரை செய்வதாக ஆகாது.ஆனால், எப்படிப்பட்ட நிறுவனங்களைத் தேர்வு செய்யலாம் என்பதற்குச் சில குறிப்புகளை என்னால் கொடுக்கமுடியும். நம்மூர் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘தாயைப் போல் பிள்ளை... நூலைப் போல் சேலை’ என்று! நிறுவனங்களுக்கும் தாய் போல சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து அந்த நிறுவனங்கள் நல்லவையா கெட்டவையா என்பதைத் தீர்மானித்துவிட முடியும்.

கம்பெனி செயல்பாடு

ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த பங்குகளை வாங்கலாமா கூடாதா என்பதைத் தீர்மானிக்க, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும். இதற்கு தினமும் அந்த நிறுவனத்தின் தலைமையகத்துக்கு ஆட்டோ பிடித்துப் போய் கண்காணிக்க வேண்டுமா என்றெல்லாம் சந்தேகம் கேட்க வேண்டாம். அவ்வளவு மெனக்கெடல் தேவையில்லை. தினசரி செய்திகளைக் கவனித்து வந்தாலே போதும். இப்போது எல்லா சேனல்களிலும் கம்பெனி செய்திகளுக்கு என்று தனியாக நேரம் ஒதுக்குகிறார்கள். எல்லா செய்தித் தாளிலும் வணிகச் செய்திகள் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது, ‘அடடே... புதுசா பாலம் கட்டப் போறாங்களா... அந்த ஒப்பந்தம் இந்த நிறுவனத்துக்குத்தான் கிடைச்சிருக்கா’ என்ற ஆச்சரியத்தோடு நிற்காமல், அந்த நிறுவனத்தின் வேறு ஆர்டர்கள் பற்றியும் செய்திகளைத் திரட்டலாம். இதை வைத்தே அந்த நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கணிப்புக்கு உங்களால் வரமுடியும். அந்த கணிப்பை வைத்தே, அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா கூடாதா என்ற முடிவுக்கு உங்களால் வந்துவிடமுடியும்.சில நிறுவனங்கள் தற்போது டல்லாக இருந்தாலும் எதிர்காலத்தில் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கும். அதுபோன்ற நிறுவனங்களை அடையாளம் கண்டுகொண்டால், நிச்சயம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியும். அதேபோல, இப்போது பிரகாசமாக இருக்கும் நிறுவனம் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அணையும் ஜோதியாக இருக்கலாம். அதில்போய் மாட்டிக் கொள்ளக்கூடாது. அதைக் கவனிக்கவும் நிறுவனங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

புரமோட்டர்கள்.

புரமோட்டர்கள் என்பவர்கள்தான் நிறுவனத்தின் தகப்பன் இடத்தில் இருப்பவர்கள். ஒரு கம்பெனியை ஆரம்பித்து நடத்துகிற புரமோட்டர்கள் யார்? அந்தக் கம்பெனி எந்த குரூப்பைச் சேர்ந்தது என்பதைப் பார்த்தால், அந்த கம்பெனியின் லட்சணத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.பலநேரங்களில் மிகப் பெரிய குழுமத்தில் இருந்து புதிய நிறுவனம் வரும்போது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதுபோன்ற நிறுவனங்களின் பங்குகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும். ஏனென்றால், நல்ல முதலாளிகளால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் நிச்சயமாக லாபகரமாகச் செயல்படும் என்ற நம்பிக்கைதான்.புரமோட்டர்கள் சரியில்லை என்றால் நல்ல கம்பெனிகூட காணாமல் போயிடும். அதேசமயம் நல்ல புரமோட்டர்கள், சுமாரான கம்பெனியைக் கூட தூக்கி நிறுத்திவிடுவார்கள். கம்பெனியை நடத்துபவர்களின் திறமை, போட்டியைச் சமாளிக்கிற திறன், தொழில் நேர்மை, லாபத்தை முதலீட்டாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கிற தன்மை இதையெல்லாம் பார்த்துத்தான் ஒரு நிறுவனத்தின் புரமோட்டர் நல்லவரா, கெட்டவரா என்பதைத் தீர்மானிக்கமுடியும்.

காலாண்டு அறிக்கைகள்

மனிதர்களுக்கு ஜாதகம் போல நிறுவனங்களுக்கு காலாண்டு அறிக்கைகள். ஜாதகத்தை நம்பாதவர்கள்கூட இருக்கலாம். ஆனால், நிறுவனங்களின் இந்த ஜாதகத்தை நம்பாதவர்கள் முதலீட்டாளராக இருக்கமுடியாது. அந்த அளவுக்கு முக்கியமானது இந்த காலாண்டு அறிக்கை.எல்லா கம்பெனிகளும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் செயல்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிடும். இதுதான் காலாண்டு அறிக்கை. அந்த மூன்று மாதத்தில் கம்பெனியின் விற்பனை, மொத்த வருமானம், நிகர லாபம் என சகல விவரங்களும் அந்த அறிக்கையில் இருக்கும். அந்த விவரங்களை வைத்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா என்பதை முடிவு செய்துவிடமுடியும். இந்தக் கணக்குகளை கடந்த ஆண்டு அதே காலகட்டத்துக்கு அந்த நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன் வளர்ச்சியை அறிந்துகொள்ளமுடியும்.இந்த அறிக்கையின் அடிப்படையில் முதலீடு செய்யலாமா என்பதை முடிவு செய்யும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. நம் கையில் எந்த காலாண்டு முடிவு இருக்கிறதோ, அதை முந்தைய ஆண்டின் அதே காலாண்டு அறிக்கையோடுதான் ஒப்பிடவேண்டும்.

ஏன் அப்படி..?



ஒரு உதாரணம் சொல்கிறேன்... சர்க்கரை ஆலைகள் சாறு பிழியும் சீஸனில் நல்ல லாபம் காட்டும். கரும்பு அரவை இல்லாத மற்ற சீஸன்களில் லாப விகிதம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். உங்கள் கையில் இருக்கும் காலாண்டு அறிக்கை சாறு பிழியும் சீஸனாக இருந்து, ஒப்பீடு செய்யும் காலாண்டு லாபம் குறைவான காலாண்டாக இருந்தால் அந்த நிறுவனம் அமோகமாகச் செயல்படுவதாகத் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. அதனால்தான் முதலாம் காலாண்டு, இரண்டாம் காலாண்டு, மூன்றாம் காலாண்டு, நான்காம் காலாண்டு என்று எந்த காலாண்டோ... அதைக் கொண்டு ஒப்பிடுவது சரியாக இருக்கும்.இந்தக் கணக்குகளில் உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒரு விஷயம் இருக்கிறது. தினமும் உங்கள் கவனத்தில் பட்டுக் கொண்டே இருக்கும் விஷயம் அது. அதுதான், குறிப்பிட்ட நிறுவன பங்கின் விலை..!அது எப்படி வாங்குவதற்கான அளவுகோலாக இருக்கும்..?

காத்திருங்கள்... சொல்கிறேன்!