நாட்டைக் காக்கும் ரோபோ!





எந்திரன் வந்தாலும் வந்தது... எங்கும் ரோபோ பேச்சுதான்!‘மெஷின்ல மனுஷனைக்கூடச் செய்வாங்களாய்யா’ என அடித்தட்டு மக்கள் வாய்பிளந்து நிற்க, அரசாங்கமோ ரோபோ ஆராய்ச்சியை முடுக்கிவிட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ), ராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரைத் திருப்பதோடு அவற்றை உருவாக்கும் முயற்சிகளையும் தொடங்கியிருக்கிறது. ஆவடியில் ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (சி.வி.ஆர்.டி.இ) நடத்திய ‘ரோபோ’ போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

‘‘மாணவர்கள்தானே எதிர்கால நம்பிக்கை. அவங்க திறமை நாட்டுக்குப் பயன்படணும்னுதான் இப்படியொரு போட்டி’’ என்கிற சி.வி.ஆர்.டி.இ. இயக்குனர் சிவக்குமாரிடம் பேசினோம்.‘‘ரோபோக்கள் நமக்கு பலவகைகள்ல உதவும். வீட்டுவேலை செய்றதுல ஆரம்பிச்சு, மனுஷனால முடியாத பல கஷ்டமான வேலைகளைச் செய்யப் பயன்படுத்தலாம். முதல்ல, ராணுவத்துல பயன்படுத்தணும்னு சொல்றது மனித இழப்புகளைத் தவிர்க்கத்தான். ஏன்னா, அதுதான் உயிரைப் பணயம் வைக்கற துறை. பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் அது எந்திரத்தோட போயிடும். அமெரிக்கா, ஜப்பான், சில ஐரோப்பிய நாடுகள்ல மட்டும் ராணுவத்துல ரோபோக்கள் பயன்பாடு வந்திருக்கு. நாம இப்பதான் இறங்கியிருக்கோம்.போர் வாகன ஆராய்ச்சி நிறுவனத்துல ‘ஆளில்லா வாகனம்’ பிரிவுல ரோபோட்டிக் டெக்னாலஜியைப் பயன்படுத்தி போர் வாகனம் தயாரிக்கப்படுது. அந்த வாகனம்தான் ரோபோ. ‘அட்டானமஸ்’னு சொல்லப்படுற தானே இயங்கி, இயக்கிக்கொள்கிற வாகனம். ரெண்டு ரெஜிமென்ட்டுகளுக்குப் பண்ணித் தந்துட்டு இருக்கோம்.

இந்த ரோபோக்கள் மூணு வேலைகளைச் செய்ற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். முதல்ல, மைன் டிடெக்ஷன்... கண்ணிவெடி மாதிரி மறைத்து வைக்கப்பட்டிருக்கிற ஆபத்துள்ள பொருட்களைக் கண்டுபிடிக்கும். அடுத்து எதிரியோட ஏரியாவுக்குள்ள போய் அந்த ஏரியாவோட கிளைமேட், ஆள்நடமாட்டம் போன்ற சாதகபாதகங்களைத் துல்லியமா கணிச்சிட்டு வரும். மூணாவதா கதிரியக்கத் தடுப்பு. அணுகுண்டே வெடிச்சிருந்தாலும் அந்த இடத்துல இருந்து இது செயல்பட முடியும்’’ என்கிற சிவக்குமார், ‘‘மேலும் சில விஷயங்களை ராணுவ ரகசியம்ங்கிறதால வெளியிட முடியாது’’ என்கிறார்.புனேயில் தயாராகிற ‘தக்ஷ்’ ரக வாகனங்கள் இப்போது இந்தப் பணிகளைச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. ரோபோ வாகனம் என்பதைத் தாண்டி மனித உருவ ரோபோக்களை உருவாக்குவதும் டி.ஆர்.டி.ஓ.வின் அடுத்த திட்டம்!

‘‘இப்ப கடினமான மலைப்பகுதிகள்ல ராணுவ வீரர்கள் உடமைகளைத் தாங்களே தூக்கிச் செல்ல வேண்டியிருக்கு. அதுக்குப் பயன்படற ரோபோக்களை உருவாக்குகிற வேலைகள் நடந்திட்டிருக்கு. அது மனித உருவ ரோபோவாகவோ அல்லது கால்நடை உருவ ரோபோவாகவோ இருக்கலாம். அதுக்கடுத்த திட்டம் ‘ரோபோ சிப்பாய்கள்’.அதுக்கு இன்னும் கொஞ்ச கால அவகாசம் ஆகலாம்’’ என்கிறார் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் தலைமைக் கன்ட்ரோலர் பிரகலதா.கடைக்குப் போவது, காபி போட்டுக் கொடுப்பதிலிருந்து நம்மைக் காப்பதற்காக வெயிலிலும் மழையிலும் பனியிலும் பார்டரில் நின்று போர்புரிவது வரை நமக்குச் சேவகம் செய்ய வரப் போகிறார்கள் ரோபோக்கள்!பொறாமைப்படாமல் ஒரு ராயல்ட் சல்யூட் அடியுங்கள், நமது மூளைதானே?

அய்யனார் ராஜன்