சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு மட்டும் வயதே ஆவதில்லை. ரிட்டயர்மென்ட்டும் கிடையாது. வாய்ப்புகள் இல்லாமல் கோடம்பாக்கத்துக் கதவுகள் மூடினால்தான் அவர்களுக்கு ஓய்வு! வாய்ப்புகள் இருந்தபோதே சினிமாவிலிருந்து விலகியவர் நடிகர் ராஜா. ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘இனி ஒரு சுதந்திரம்’ என அவர் நடித்த பலதும் வெற்றிப் படங்கள். வெற்றிப்பட ஹீரோவாக இருந்தபோதே சினிமாவிலிருந்து விலகிய ராஜா, இன்று நம்பர் ஒன் பிசினஸ்மேன்! ‘காஸ்மோ ஃப்ளோர்ஸ்’ என்கிற பெயரில் கிரானைட் மற்றும் மார்பிள் பிசினஸ் செய்கிற ராஜா, மாதம் ஒரு மாநிலத்தில் பிராஞ்ச் ஆரம்பிக்கிற அளவுக்கு பிசி! ‘‘காலேஜ் முடிச்சிருந்த நேரம் அது. ‘ஹேண்ட்ஸம்மா இருக்கே, சினிமாவுக்கு ட்ரை பண்ணேன்’னு ஃப்ரெண்ட்ஸ் உசுப்பேத்திட்டிருப்பாங்க. அந்த நேரம் பார்த்து பாரதிராஜா சார்கிட்டருந்து சினிமா வாய்ப்பு. வெங்கடேஷான என்னை ‘ராஜா’வாக்கினதும் அவரே. ‘நடிப்பெல்லாம் வராது சார்... நான் போய் ஏதாவது காலேஜ்ல படிச்சிட்டு வரேன்’னேன். ‘நடிக்கத் தெரிஞ்சவன் எனக்கு வேணாம்’னு, தெரியாத சினிமாவுக்குள்ள என்னை இழுத்துவிட்டார். விருப்பமே இல்லாம நுழைஞ்ச சினிமா துறைல ஒரு கட்டத்துல ஆர்வம் அதிகமாச்சு. ஆனா, ‘ஒரு கிராமம் சார்... அதுக்குள்ள கோட் சூட் போட்டுக்கிட்டு வெள்ளைக்கார துரை மாதிரி நீங்க என்ட்ரி கொடுக்கறீங்க’ங்கற ரேஞ்சுலயே இருந்தது எல்லா வாய்ப்பும்.
வேலையே இல்லாம வீட்டுக்கு அனுப்பறதுக்கு, வேலை இருக்கிறப்பவே விலகிடறது நல்லதுனு தோணுச்சு. டைல்ஸ், கிரானைட்ஸ், மார்பிள்ஸ்னு குடும்ப பிசினஸ் காத்திட்டிருந்தது. நடிக்கவே தெரியாம சினிமாவுக்குள்ள வந்தது மாதிரிதான், ஒண்ணுமே தெரியாம பிசினஸுக்குள்ளயும் வந்தேன். ஆரம்பத்துல நிறைய நஷ்டங்கள்... லட்சக்கணக்குல கோட்டை விட்டிருக்கேன். ஆனாலும், எங்க தப்புனு கண்டுபிடிச்சு திருத்திக்கிட்டதோட, பிசினஸை உயரத்துக்குக் கொண்டுபோற வழிகளை யோசிச்சேன். எல்லாரும் ஆயுசுல ஒருமுறை வீடு கட்டறாங்க. அது அவங்கவங்களுக்கு கனவு இல்லம். அங்குலம் அங்குலமா அதை எப்படி செதுக்கணும்னு முடிவு பண்றது அவங்க விருப்பம். சும்மா நாலஞ்சு டிசைன்ல டைல்ஸையும் மார்பிளையும் காட்டி, ஏதோ ஒண்ணை செலக்ட் பண்ணச் சொல்வாங்க கான்டிராக்டர்கள். அந்த நிலைமையை மாத்த, கிரானைட், மார்பிளுக்கான ஸ்பெஷல் ஷோரூம் ஆரம்பிச்சேன். கோடீஸ்வரர்லேர்ந்து, மாசச் சம்பளம் வாங்கறவங்க வரைக்கும் யாரும் விசிட் பண்ணலாம். அவங்கவங்க பட்ஜெட்டுக்கேத்தபடி டைல்ஸையும் மார்பிளையும் செலக்ட் பண்ணலாம். அதுதான் கான்செப்ட். அந்த முயற்சிக்குப் பலன் கிடைச்சது. நஷ்டத்துலேர்ந்து எழுந்தேன். இன்னிக்கு ஹைதராபாத், டெல்லினு ஏகப்பட்ட கிளைகளோட என் பிசினஸ் வளர்ந்திருக்கிறதைப் பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிற ராஜாவின் நட்சத்திர வாடிக்கையாளர் பட்டியலில் ரஜினிகாந்த், விக்ரம், விஜய், அஜித், சிம்பு, அர்ஜுன், கார்த்திக், இயக்குனர் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், சேரன் என பலரும் உண்டு!
அத்தனை பேரும் ராஜாவை நடிக்கச் சொல்லிக் கேட்கத் தவறுவதில்லை. யாருக்கும் ‘யெஸ்’ சொல்லாமல் இருக்கிறார்.‘‘ஷூட்டிங் பார்த்து ரொம்ப நாளாச்சேனு, அஜித் நடிக்கிற படம் பக்கம் எட்டிப் பார்த்தேன். ‘என்ன சார், மறுபடி நடிக்கிறீங்களா’ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்காக ஒரு கேரக்டரை புக் பண்ணிட்டு, திடீர்னு ஒருநாள் பிரபு சார் கூப்பிட்டார். ‘வேணாம் சார்’னு மறுத்துட்டேன். பார்க்கிறவங்க எல்லாம் கூப்பிடாம இல்லை. ஆனா, என்னோட செகண்ட் என்ட்ரி எனக்கு நிறைவானதா இருக்கணும்னு காத்திட்டிருக்கேன். ‘இதுதான் உனக்கானது’ன்னு மனசு சொல்லிட்டா, அடுத்த நிமிஷமே பைசா சம்பளம் வாங்காம நடிக்கத் தயார். தமிழ் சினிமாவை கவனிச்சுட்டுதான் இருக்கேன். ரொம்ப மாறிருக்கு. டைரக்டர்கள் ஆகட்டும், ஹீரோக்கள் ஆகட்டும்... அத்தனை பேரும் பின்னியெடுக்கறாங்க. பிரமிப்பா இருக்கு!தமிழ்ல படம் புரொட்யூஸ் பண்ற பிளான் போயிட்டிருக்கு. அடுத்த வருஷம் பண்ணணும்னு நினைச்சிட்டிருக்கேன். என்ன ஆகும்னு தெரியலை. இதுவரைக்கும் நான் நினைச்சது எதுவுமே நடந்ததில்லை. இங்கிலீஷ்ல ‘டெஸ்டினி’ஸ் சைல்டு’னு சொல்வாங்க. நான் அப்படித்தான்’’ என்கிறவர் இப்போதும் ஹீரோவாக நடிக்கலாம் போல அதே இளமையுடன் இருக்கிறார்.‘‘பொண்ணு ரோஹிதா காலேஜ் படிக்கிறா. ஆர்க்கிடெக்சர்... பையன் அனிஷ் 3&வது. குடும்பத்தை அழகா பார்த்துக்கிறாங்க மனைவி மாதவி... சந்தோஷமா போயிட்டிருக்கு வாழ்க்கை’’ என்கிறவரின் கண்களிலும் வார்த்தைகளிலும் நிஜமாகவே சந்தோஷம்!