அனுயாவுக்கு அஞ்சு முத்தம்...





ஹீரோவாகிவிட்டபின் ஐந்து வருடங்களாக படங்கள் இயக்குவதை சற்றே ஓரம்கட்டி வைத்திருந்த சுந்தர்.சி, இப்போது தானே நடிக்கும் படமொன்றை இயக்கி முடித்திருக்கிறார். அது அவரே தயாரிக்கும் படமாகவும் அமைந்தது இன்னொரு செய்தி. அது அவ்னி சினி மேக்ஸின் 'நகரம்’.

‘‘எப்படி இருக்கிறது முப்பெரும் பொறுப்பு..?’’

‘‘பார்க்கிறவங்களுக்கு இது ஏதோ பெரிய சுமையா தெரியும். ஆனா நான் டைரக்டரா இருந்ததைவிட, ஹீரோவா இருந்ததை விட, இது ரொம்பவும் சுதந்திரமா இருக்கு. டைரக்டரா இருக்கும்போது ஹீரோவுக்காகவும், புரட்யூசருக்காகவும் நாம் நிறைய விட்டுக்கொடுக்கணும். நடிகனா வந்தபின்பும் ஒரு காட்சி சரியா இல்லைன்னு தோணினாலும் டைரக்டர் சொல்றபடி கேட்டாகணும்ங்கிற நெருக்கடி இருக்கு. ஆனா நானே புரட்யூசர், டைரக்டர், ஹீரோன்னும்போது யாருக்காகவும், எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்காம நினைச்சதைச் செய்யமுடியுது. இந்த சுதந்திரம் என் படங்களை இப்படியே தொடரலாமோன்னு நினைக்க வைக்குது...’’

‘‘அந்த சுதந்திரத்தை வச்சுக்கிட்டு ‘நகர’த்தில என்ன புதுசா சொல்லியிருக்கீங்க..?’’

‘‘அப்டேஷன் இல்லாத எதையும் கால வெள்ளம் அடிச்சுக்கிட்டு போயிடும். இது என் பாணியிலான கதைன்னாலும், இப்ப இருக்க இயல்பான கதை சொல்ற ட்ரெண்ட் இதில இருக்கும். இதுக்கான லைனே புதுசு. ‘அதுக்குப்பிறகு அவன் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தான்’னு சொல்றமாதிரிதான் எல்லாக் கதைகளும் பெரும்பாலும் முடியும். ஆனா நிஜத்துல அங்கேர்ந்து இன்னொண்ணை நோக்கி வாழ்க்கை நகருது. எங்கே மற்ற கதைகள் முடியுதோ, அங்கே இருந்துதான் இந்தப் படக்கதை தொடங்குது. ‘கேட்’ செல்வம்ங்கிறது என் கேரக்டர். நகரத்தில் இருக்க சாமானியன். அவன் சந்திக்கிற நபர்களோட பிரச்னையெல்லாம் ஒரு கட்டத்தில அவன் தலைமேல சுமத்தப்பட்டு, வாழ்க்கையின் ஓரத்துக்குத் தள்ளப்படுறான். அங்கே அவனோட செயல்பாடுகள் எப்படி இருக்குன்னு போற லைன். பரபரன்னு ஆக்ஷன் இருக்கும். ஆனா எத்தனை சண்டைன்னு படம் பார்த்துட்டு வரும்போது யாராவது கேட்டாதான், படத்தில விரல்விட்டு எண்ணுற அளவுக்கு சண்டைகள் இல்லைன்னு புரியும். சிட்டி சப்ஜெக்டுன்னா வட சென்னை, தென் சென்னை தாதாயிஸ கதையாவோ, வழக்கமான காதல் கதையாவோ இல்லாம, இங்கே பெரும்பான்மையா இருக்க நடுத்தர வர்க்கத்து சாமானியன் சந்திக்கிற பிரச்னைகளை இதில தொட்டிருக்கேன்.

என் ஜோடியா அனுயா. சினிமால குரூப் டான்சரா வர்ற அவங்களுக்கு ரொம்பவும் பொருத்தமா இருந்தது தோற்றமும், நடிப்பும். ஒருகட்டத்தில நான் அவங்களுக்கு முத்தம் கொடுத்து நடிக்கவேண்டி வந்தப்ப உடனே ஒத்துக்கிட்டதும், இன்னொரு இடத்தில கிளாமரா வரச் சொன்னப்ப, இது கதைக்கு அவசியமில்லையேன்னு வாதிட்டு அது சரிதான்னு நான் ஒத்துக்கிட்டதும் அனுயாவோட டெடிகேஷனுக்கு உதாரணங்கள். இரண்டாவது ஹீரோயினா ஈரானைச் சேர்ந்த நடிகை ‘மரியா’ நடிச்சிருக்காங்க.  என்கூட ஒரு இடைவெளிக்குப்பிறகு வடிவேலு வர்றார். ‘ஸ்டைல் பாண்டி’ங்கிற கேரக்டர்ல வர்ற அவர், ‘வாழ்வே மாயம்’ கமல் ஸ்டைல்ல சிகையலங்காரத்தோட செய்யற காமெடிகள் நினைச்சு சிரிக்க வைக்கும். என் படங்கள்ல அவர் பேசிய வசனங்கள் அந்தந்த காலகட்டத்தில பேசப்பட்ட மாதிரியே இதிலயும் பேசப்படும். ‘என்கிட்ட சீரியசா பேசாத... எனக்கே சிரிப்பு வந்துடும்...’ங்கிறது ஒரு சாம்பிள். வைரமுத்து, தமன் காம்பினேஷன்ல பாடல்கள் அருமையான மெலடிகளா வந்திருக்கு...’’


‘‘அனுயாவோட முத்தம் நிறைய டேக் போச்சுதானே..?’’

‘‘அது அஞ்சு டேக் போச்சு. ஏன்னா அது ரெண்டரை நிமிஷம் ஒரே ஷாட்ல ஓடக்கூடிய காட்சி. அதுக்குள்ள முத்தமும் வரும். டெக்னிகலா ஒண்ணு சரியா வந்தா, ஒண்ணு சரியா வராது. அப்படித்தான் ரீடேக் போச்சு. இந்த விஷயம் தெரிஞ்சு கேட்டீங்களா... இல்ல, குத்துமதிப்பா கேட்டீங்களா..?’’‘இச்’சு மதிப்பா கேட்டதுதான்..!

வேணுஜி