பிளாஸ்டிக் பாய்களின் வரவால் பாரம்பரியமிக்க கோரைப்பாய்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிற சூழலில் ஆமீனாளின் தயாரிப்புகள் கோரை விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பதாக இருந்தன. இது பலரது கைத்தொழில் முயற்சிக்கு புதிய வழித்தடம் அமைக்கும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
'அழகுக்கு ஆண், பெண் பேதமே கிடையாது. அது எல்லோருக்கும் பொதுவானது' என்கிறார் கின்னஸ் சாதனை புகழ் மேனகா. நீங்கள் பிரசுரித்த 64 படங்களில் ஒன்றிலாவது ஆண் முகத்தையும் காட்டியிருக்கலாமே! ஆண்கள் மேல் குங்குமத்துக்கு என்னய்யா வெறுப்பு!
- ரத்தினகுமார், ராமேஸ்வரம்.
'எனப்படுவது' பகுதியில் தேன் பற்றி லதானந்த் தந்த தகவல்கள் படிக்கப் படிக்க இனிமை சேர்த்தது. அடுத்து என்ன என்கிற ஆவலைத் தூண்டியது!
- அய்யாறு வாசுதேவன், சென்னை-14.
பட்டா விண்ணப்பத்துக்கான வழிமுறைகளை 'வீடு' பகுதியில் சொல்லியிருந்தது பயனுள்ள, பயன்படுத்த வேண்டிய தகவல்கள். வாராவாரம் வரும் வாசகங்கள் வீட்டுக்கு உயிரூட்டுகின்றன.
- கண்ணன், ராமநாதபுரம்.
கணினி முன் காலத்தைக் கழித்து வேண்டியதை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்யும் கலியுகக் காலத்தில் கலாசாரத்தைக் காக்க கடைகளுக்கு தடை போடும் கிராமமா? தீப்பெட்டிக்குக்கூட வெளியூர் செல்லும் இவர்கள் அலைச்சலைப் பொருட்படுத்தாது கலாசாரம் காப்பதை வியக்காமல் என்ன செய்ய..!
- பாண்டியராஜ், நெய்வேலி.
சாலமன் பாப்பையா தனது பெற்றோரைப் பற்றி அசைபோட்டது நெகிழ்வாக இருந்தது. வறுமையில் தவித்த குடும்பத்திலிருந்து பெருமைக்குரிய மனிதராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் அவரது வார்த்தைகளில் வெள்ளந்தித்தனம் கவ்விக்கிடக்கிறது... அதுதான் பாப்பையா!
- எம்.ராம், மதுரை.
ஒபாமா இந்தியா வருவது வியாபார விசிட்டாக இருக்கும்போது தாஜ்மஹாலுக்கு எப்படி நடைபோடுவார்? அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய மார்க்கெட்டில் வாய்ப்பளிப்பதும், பதிலுக்கு ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த இடம் கேட்பதும் பண்டமாற்று முறையைப் போலத்தான்.
- ஆகாஷ், திருச்சி.
'ரீடர்ஸ்பேட்டை' பகுதி கலக்குது தலீவரே... போதாதுன்னு இலியானா படத்த வேற போட்டு இன்னாத்துக்கு இம்சைய கூட்டுறீங்களோ... சும்மா நச்னு இருக்கு நைனா!
- ரூபேஷ், சென்னை-28.