கோவை கொடூரம்:குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன வழி?





முஸ்கானுக்கு பன்னீர் ரோஜா முகம்... ரித்திக்கின் இமைகள் பறக்கும் தட்டான்கள். கோவையில் இவ்விரு பொக்கிஷங்களையும் பணத்துக்காகக் கடத்தி இரண்டு கொடிய மிருகங்கள் துன்புறுத்திக் கொன்ற சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. சென்னையிலும் இதுபோன்ற இரண்டு பரபர கடத்தல்கள். சமீபகாலமாக குழந்தைக் கடத்தல்கள் அதிகரித்துள்ளன. பள்ளிக்குச் செல்லும் குழந்தை பத்திரமாக வீடு திரும்பும்வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருக்க நேர்கிறது. சம்பவம் நடந்தவுடன் ஏற்படும் சமூகக் கோபம் சில நாட்களில் வடிந்து போகிறது. குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க என்னதான் வழி?

‘‘குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, பாலியல் வன்முறை என பல அடக்குமுறைகள் தவறே இல்லை என்ற கண்ணோட்டத்தில்தான் செய்யப்படுகின்றன. குழந்தைகள் உரிமை, அவர்கள் மீதான மீறல்கள் குறித்த தெளிவான பார்வை அவசியம். பல தவறுகள் சகஜம் என்ற நிலையிலேயே வழக்கில் உள்ளன. நாம் நம்புகின்ற நெருங்கிய உறவினர்களால் குழந்தைகள் தவறாகக் கையாளப்படுவது அதிகமாக உள்ளது. குழந்தைகள் தனக்கு நேர்ந்த இம்சைகளைச் சொல்லும்போது காது கொடுத்துக் கேட்டு கண்காணிக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. விழிப்புணர்வு இருந்தால் குற்றங்கள் நடப்பதை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்’’ என்கிறார் குழந்தைகள் மேம்பாட்டுக்காகச் செயல்படும் ‘எய்ட் இந்தியா’ பாலாஜி சம்பத். ‘‘கல்வி தனியார்மயமாக்கப் பட்ட பின் டிரைவர்களாலும், டியூஷன் இடங்களிலும் குழந்தைகள் கொடுமைக்கு ஆளாவது அதிகரித்திருக்கிறது. பணம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் உள்ள இடைவெளி குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. இதைத் தடுக்க அறிவு பூர்வமான தேடல்களும் தீர்வுகளும் அவசியம்’’ என்கிறார் கல்வியாளர் சாலை செல்வம்.
 
‘‘குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது பெரும்பாலும் இளைய சமுதாயம். ஓரளவு படித்தவர்களே இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவது கவனிக்கவேண்டிய ஒன்று. இளைஞர் சக்தி மிகமோசமான பாதையில் செல்வதற்கான அடையாளமே இதுபோன்ற சம்பவங்கள். இதை ஒரு குற்ற நடவடிக்கையாக மட்டுமே பார்க்காமல், சமூகப் பிரச்னையாகவும் பார்க்க வேண்டும். ஓரளவு பாதுகாப்போடு வாழும் மேல் நடுத்தரவர்க்கக் குழந்தைகளுக்கே இந்த நிலை என்றால், பாதுகாப்பு, உரிமை, பாலியல் வன்முறை போன்ற விஷயங்களைப் பற்றி எதுவுமே தெரியாத குழந்தைகளின் நிலை? இளைய சமூகத்தை நல்ல வழிக்கு மாற்ற வேண்டியது அவசரத்தேவை’’ என்கிறார் ‘க்ரை’ அமைப்பின் குழந்தைகள் பாராளுமன்றப் பொறுப்பாளர் கல்பனா. ‘‘குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் எக்காலத்திலும் உண்டு. அறிமுகம் இல்லாத நபர்களிடம் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்று சொல்லித் தருகிறோம். ஆனால், இதுபோன்ற குற்றங்களை குழந்தைகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களே செய்கின்றனர். கொடுமைக்கு உள்ளாகும் குழந்தை, ரகசியமான, கேவலமான விஷயம் என்று இதைப் பார்ப்பதால், வெளியில் சொல்வதில்லை.
 
குழந்தைகளின் உறுப்புகளை அறிமுகப்படுத்தி அதன் தனிப்பட்ட பெயர்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். சுத்தம், சுகாதாரக் காரணங்களுக்காகத் தவிர வேறு யாரும் உடலைத் தொடக்கூடாது என்பதையும் உணர வைக்கவேண்டும். பெரியவர்களுக்குக் கீழ்ப்படியும் பழக்கத்தைத்தான் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறோம். அதனால் பெரியவர்கள் தவறு செய்யும்போது அதை எதிர்க்கத் தெரிவதில்லை. தனக்குப் பிடிக்காத ஒன்று நடக்கும்போது உடனே மறுக்கவும், அந்த இடத்தை விட்டு விலகவும், தனக்கு நேர்ந்ததைச் சொல்லவும், குற்றம் செய்தவரை அடையாளம் காட்டவும் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது அவசியம்.  சில உண்மைகளை வெளிப்படையாகப் பேசவும், கொடுமைகளைத் தடுக்கவும் பெற்றோரில் தொடங்கி சமூகத்தில் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை அக்கறையுடன் அணுக வேண்டும்’’ என்கிறார் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைத் தடுப்புப்பணியில் உள்ள ‘துளிர்’ திட்ட மேலாளர் நான்சி. குற்றம் செய்பவர்கள் சட்டத்தைப் பார்த்துப் பயப்படுவதாக இருந்தால் பாதி தவறுகள் நடக்கவே வாய்ப்பில்லை. குற்றங்களுக்கு உடனடித் தண்டனை வழங்கினால் தடுக்க முடியுமா?‘‘சட்டங்களை நடைமுறைப்
படுத்துவதில் உள்ள சிக்கல்கள்,

குற்றங்களைத் தடுப்பதற்கான காவலர் பற்றாக்குறை, போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை, நீதிபதிகள் பற்றாக்குறை... இப்படி தண்டனைகளை நிறைவேற்ற தாமதம் ஆவதற்கான காரணங்களை சரிப்படுத்த வேண்டும்.
இன்னொரு பக்கம் நுகர்வுக் கலாசாரத்தின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் ஆடம்பர வாழ்வை விரும்பும் நிலை. அதற்காக குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம். இந்த இரண்டும் குழந்தை கடத்தல், கொலை விஷயத்தில் பெரிய சக்தியாக செயல்பட்டுள்ளன. பப், டிஸ்கோதே, நைட் அவுட் உள்ளிட்ட புதிய கலாசாரங்களால் செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஒழுக்கம், நேர்மை போன்ற விஷயங்கள் அழிந்து வருகிறது. ‘தண்ணியடிச்சா எந்தத் தப்பையும் செய்யலாம்’ என்ற தைரியம் தவறு என புரிய வேண்டும். மனமாற்றத்தின் மூலம் மட்டுமே இக்குற்றங்களைத் தடுக்க முடியும்’’ என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

ஸ்ரீதேவி