ஆட்டோ ராஜி... இலவச ஆம்புலன்ஸ் சேவை ராஜி!
‘‘இரவில் எப்போது எங்கிருந்தாலும் கூப்பிடுங்கள்... நான் வருவேன்! காசு இல்லையா? பரவாயில்லை. ஏறுங்கள்...’’ என பெண்களுக்கும், ஏழைகளுக்கும் கை கொடுக்கிறார் பி.வி.ராஜி (எ) ராஜி அக்கா.‘ராஜி அக்கா’, ‘ஆட்டோ அக்கா’, ‘ஆட்டோ ராஜி’ என எந்த ஆட்டோ நிறுத்தங்களில் விசாரித்தாலும் அக்காவின் அலைபேசி எண் கிடைக்கும். சிறந்த ஆட்டோ ஓட்டுநர் என காவல்துறையும் முதலமைச்சரும் விருது கொடுத்து கவுரப்படுத்தியிருக்கும் ராஜி அக்காதான் இந்திய அளவில் பிரபல டாக்ஸி ஆப்பில் அதிக ரேட்டிங் பெற்றிருப்பவர்!
 “சொந்த ஊரு பாலக்காடு. அப்பா மிகப்பெரிய வைத்தியர். நல்ல வசதி, நல்ல பெயர், பெரிய குடும்பம் எங்களுடையது. அப்படிப்பட்டவங்க காதலை எப்படி ஏத்துப்பாங்க?
அதேதான், சாதிப் பிரச்னை. அப்படியே கிளம்பி கோவை வந்துட்டோம். என் கணவர் பேரு அசோக்குமார். அவருக்கு உதவியா இருக்குமேனுதான் ஆட்டோ லைசன்ஸ் எடுத்தேன். அதோடு முடிஞ்சது. அப்புறம் டிராவல்ஸ் கம்பெனில அக்கவுன்டன்ட்டா வேலைக்கு சேர்ந்தேன்...’’ புன்னகைக்கும் ராஜி அக்கா, தத்துவத்தில் பிஏ முடித்தவர். டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் படித்தவர். ‘‘கோவைல குண்டு வெடிச்ச நேரம்... எல்லா தொழிலும் இறங்குமுகமாச்சு. கணவருக்கும் பெரிசா சவாரி இல்ல. நான் வேலை பார்த்த டிராவல்ஸ் கம்பெனியும் நஷ்டத்துல போக ஆரம் பிச்சது.
என் பிரதர் ‘சென்னைக்கு வா’னு கூப்பிட்டார். புறப்பட்டு வந்தோம். எல்லா டிராவல்ஸ் நிறுவனத்துலயும் ஏறி இறங்கினேன். எதுவும் சரிப்பட்டு வரலை.அப்பதான் கைல ஆட்டோ லைசன்ஸ் இருக்கறது நினைவுக்கு வந்தது. போதாதா..? ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்! உண்மையை சொல்லணும்னா அன்புனா என்னனு ஆட்டோகாரர்கள்கிட்டதான் கத்துக்கிட்டேன்...’’ நெகிழும் ராஜி அக்கா, சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த நாள் முதலே நள்ளிரவில் வீட்டுக்குச் செல்ல முற்படும் பெண்களை தன் வண்டியில் ஏற்ற ஆரம்பித்திருக்கிறார்.
“லேட் நைட்ல வேலை முடிச்சுட்டு வருவாங்க. நின்னு, ‘ஏறிக்குங்கமா’னு சொல்வேன். ‘இல்லக்கா... பஸ்ஸுக்குதான் காசு இருக்கு’னு சொல்வாங்க. ‘பரவாயில்லை ஏறுங்க. வீடு வரை சும்மாதான் போறேன். தனியா நீங்க போறது ஆபத்து. உங்க வீட்ல எறக்கிடறேன்’னு கூட்டிட்டுப் போவேன்...’’ என்ற ராஜி அக்கா பல பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறார்.
“ஒருமுறை சவாரிக்கு வந்த ஒருத்தர், ‘பொண்ணுங்க யாராவது இருக்காங்களா’னு கேட்டார். ‘சார்... அதெல்லாம் எனக்குத் தெரியாது’னு சொன்னேன். உடனே, ‘அப்ப நீங்க வருவீங்களா’னு கேட்டார். கோபப்படலை... கத்தலை. மவுனமா கூட்டமா இருந்த இடத்துல ஆட்டோவை நிறுத்தி, ‘இந்த மாதிரி என்னை இந்தாள் கூப்பிடறார்’னு மக்கள்கிட்ட சொன்னேன்.
உடனே அவங்க அவரை கண்டிச்சு அனுப்பினாங்க. இப்ப அதுமாதிரி ஆட்களைப் பார்த்தேன்னா கண்டிப்பா அடிப்பேன்! வேலைக்குப் போற பெண்கள்... நைட்ல வேலை பார்க்கிற பெண்கள்னா இளக்காரமா?’’ என்று கேட்கும் ராஜி அக்காவை சவாரிக்கு அழைப்பது எளிது.‘‘கூகுள்ல என் நம்பர் இருக்கு. தவிர பல பெண்கள் என்னைப் பத்தி அவங்க தோழிங்ககிட்ட சொல்லிச் சொல்லி வாய் வழியாகவே என் நம்பர் பலர்கிட்ட இருக்கு.
ரொம்ப லேட் ஆகிடுச்சு... எந்த வண்டியும் கிடைக்கலைனா தாராளமா என்னைக் கூப்பிடலாம். எவ்வளவு தூரமா இருந்தாலும் வந்துடுவேன்.மீட்டர் போட்டுதான் வண்டி ஓட்டறேன். என் நண்பர்கள்கிட்டயும் ‘மீட்டர் போட்டு ஓட்டுங்க’னுதான் சொல்றேன். எல்லா ஆட்டோக்காரர்களும் மீட்டர் போட்டு வண்டி ஓட்டினா கார்ப்பரேட்காரங்க உள்ள வரமாட்டாங்க.
ஆட்டோவில் முதலுதவிப் பெட்டி, சானிட்டரி நாப்கின்கள், பொட்டு, பவுடர், சீப்பு உள்ளிட்டவைகள் எப்போதும் தயாராக இருக்கும். மேலும் பயணிகள் உட்காருகிற சீட் அருகே மொபைல் சார்ஜர் பிளக் இருக்கு...’’ என்னும் ஆட்டோ ராஜி அக்கா இப்போது ஊரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வைத்திருக்கிறார்.‘‘எங்க ஊரில் கீழ் சாதி மற்றும் மேல் சாதி பிரச்னை இன்னமும் நடந்துகிட்டு இருக்கு. மேல் சாதி சுடுகாட்டில் கீழ் சாதி மக்கள் பிணத்தை புதைக்க, எரிக்க விடமாட்டாங்க.
மேல் சாதி தெருவில் பிணத்தை கொண்டு போகவும் அனுமதி கிடையாது. பல கிலோமீட்டர் சுத்திதான் கொண்டு போகணும். அவங்களுக்கு இலவசமா அல்லது கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு ஆம்புலன்ஸ் உதவி செய்கிறோம். ஊரில் போதுமான மருத்துவமனை வசதியில்லை. குறைந்தது 7 கிமீ போகணும். அதனால் அவசர உதவியின் போது அரசு மருத்துவமனைக்கு போறதா இருந்தால் இலவச சேவை, அதுவே தனியார் மருத்துவமனைக்கு எனில் 50% பணம் வாங்கிகிட்டு ஆம்புலன்ஸ் சேவை செய்துட்டு இருக்கோம்.
என் கணவரே ஆம்புலன்ஸ் டிரைவர் என்கிறதால் எங்களுக்கு பெட்ரோலுக்கான தொகை கிடைச்சால் கூட போதும். தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களிடம் மட்டும் 50% தொகை வாங்கறோம். எங்களுடைய சொந்த ஆம்புலன்ஸ்தான். வீட்டு வாசலில்தான் நிறுத்தி இருக்கோம். அதைக்கூட வாசலில் நிறுத்தறதுக்கு பிரச்னை செய்யறாங்க. ‘எழுந்திருக்கும்போது ஆம்புலன்ஸ் முகத்தில் முழிக்கணுமா’ என முணுமுணுக்கறாங்க. அவங்களுக்கு ஒரு அவசரத் தேவை என்றாலே நாங்கதான் நாளைக்கு ஓடி வரணும். கூப்பிடுகிற தூரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் இருக்கே என்கிற நேர்மறை எண்ணம் இல்லை.
அதேபோல் பிணத்தை வைக்கும் ஐஸ் பாக்ஸ் ஆரம்பமே வாடகை ரூபாய் 5000. அதை ரூ.500க்கு கொடுக்கலாம் என வாங்கி வைக்கணும்னு ஆசை. அதற்கான பணமும் கூட கொடுக்க நல்லவர்கள் நிறைய பேர் இருக்காங்க. பணமும் வந்திடுச்சு. ஆனால், அந்த பாக்ஸை வைக்க இடமில்லாமல் வாங்காமலே இருக்கோம். வாடகை வீடு எடுத்து அங்கே ஐஸ் பாக்ஸ்களை வைக்கலாம் என முடிவு செய்தால், ‘வாழ்ற வீட்டில் டெட் பாடி பெட்டி எல்லாம் வைக்கக்கூடாது’ அப்படின்னு சொல்றாங்க.
இன்னமும் எங்க ஊரில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு இறந்தால் வைக்கக்கூடிய ஐஸ் பாக்ஸ் வசதி கூட சாத்தியப்படலை. அந்த அளவுக்கு அவங்க எல்லாரும் ஏழ்மையில் இருக்காங்க.
அதனாலயே வாழ்ந்த சொந்த வீட்டில் இறந்த உடலை கூடுதலா கொஞ்ச நேரம் அவங்களால வைத்திருக்க முடியல. அவங்க மரணமாவது நிறைவா இருக்கணும்னு அதற்கான முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன்...’’ சொல்லும்போதே கண்கள் கலங்குகிறார் ராஜி அக்கா.
அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் அக்கவுன்டன்டாக இருக்கிறார்.‘‘ஆட்டோ ஓட்டினது போதும்னு பையன் சொல்றான். ‘எனக்கு தெம்பு இருக்கற வரை நான் ஆட்டோ ஓட்டுவேன்’னு அவன்கிட்ட சொல்லிட்டேன். அதேபோல் என்னால் முடிந்தால் நிச்சயம் உதவி செய்வேன். நாம கொடுக்கணும்னு நினைச்சாலே போதும். அதற்கான வருமானம் தானாகத் தேடி வரும்...’’ தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் ஆட்டோ ராஜி அக்கா.
செய்தி:ஷாலினி நியூட்டன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|