66 ஹீரோயின்களுக்கு பின் தேர்வானவர்!



‘‘சென்னை, வேளச்சேரியில் சில வருடங்களுக்கு முன் என் கண் முன்னே ஒரு சம்பவம் நடந்துச்சு. அது சினிமா போல் என்னுடைய மனtத் திரையில் ஓட ஆரம்பிச்சது. 

அதை அப்படியே முழு சினிமாவுக்கான கதையாக ரெடி பண்ணினால் எப்படியிருக்கும்; பாதிக்கப்பட்டவர் பழிவாங்க நினைத்தால் அதன் விபரீதங்கள் எப்படியிருக்கும்னு தோணுச்சு.
 
அதுதான் அதர்வா, கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன்...’’ என ‘தணல்’ படம் பற்றிப் பேசத் தொடங்கினார் இயக்குநர் ரவீந்திரா மாதவன். இவர் சுசீந்திரன், கொரடலா சிவா (தெலுங்கு) ஆகியோரிடம் சினிமா பயின்றவர்.

‘தணல்’ டைட்டிலுக்கான காரணம் என்ன?

உருவகத்துக்காக இந்த டைட்டில். தணல் என்பது கனிந்த நெருப்பு அல்லது கங்கு. இரும்பு அந்த மாதிரி ஒரு பதநிலைக்கு வரும்போது அதை வெச்சு கேடயமும் செய்யலாம், கத்தியையும் செய்யலாம். அப்படிதான் ஹீரோ, வில்லன் கேரக்டரை சித்தரித்துள்ளேன். 

ஆக்‌ஷன் படத்துல கதை சொல்ல முடியும்னு நினைக்கிறீங்களா?

இது ஆக்‌ஷன் த்ரில்லர். முதலில் என்ன மாதிரி சிச்சுவேஷன்ல கதை துவங்கும்னு சொல்றேன். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு சம்பவம் நடக்கிறது. அதுல சம்பந்தப்பட்ட இரண்டுபேர் வித்தியாசமான இரண்டு கோணங்களில் பயணிக்கிறாங்க. அந்த சிச்சுவேஷன் ஒருத்தனை ஹீரோவாக மாத்துகிறது. இன்னொருவனை வில்லனாக 
மாத்துகிறது. 

இதுல ஆச்சர்யம் என்னவென்றால் வில்லன் இராணுவ வீரனாக இருந்தவன். சிச்சுவேஷன் அவனை வில்லனாக மாத்துகிறது. மீண்டும் அந்த இருவர் சந்திக்கும்போது என்ன நடக்கும் என்பதுதான் கதை. 

முன்னாள் இராணுவ வீரர் பழிவாங்க நினைத்தால் அதன் உச்சக்கட்டம் எந்தளவுக்கு இருக்கும் என்பதையும், அதே மாதிரி ஹீரோ வேலைக்கு சேர்ந்ததுமே இரண்டு வருஷத்துக்கு முன் நடந்த சம்பவத்தை சந்திக்கும்போது வில்லனை ஜெயிச்சு எப்படி ஹீரோவாக மாறுகிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளேன்.

படத்தோட புரிதல் என்னவாக இருக்கும் என்று கேட்டால், மனவேதனைதான் ஒருவரை ஹீரோவாகவும், வில்லனாகவும் மாத்துகிறது. வலியை எப்படி எதிர்கொள்ளுகிறோம் என்பதைப் பொறுத்து அது மாறும். 

தான் அனுபவிச்ச வலியை இன்னொருவர் அனுபவிக்கக்கூடாதுன்னு நினைத்தால் அவர் ஹீரோ. தான் அனுபவிச்ச வலியை அடுத்தவனும் அனுபவிக்கணும்னு நினைத்தால் அவன் வில்லன். இந்த ‘தீம்’லதான் ஹீரோ, வில்லன் இருவருக்கிடையே மோதல் நடக்கிறது.

ஹீரோ தேர்வு எப்படி நடந்துச்சு?

நேர்மையாக சொல்வதாக இருந்தால் இது அதர்வாவுக்கு எழுதிய கதை. அவரிடம்தான் முதலாவதாகவும் முழுவதுமாகவும்  கதை சொன்னேன். 

முதல் சந்திப்பிலேயே ஓகே சொல்லிவிட்டதால் வேறு ஆப்ஷனுக்குப் போகவில்லை. சொந்த காரணங்களுக்காக காவலராக வேலைக்கு சேர்ந்த கதாபாத்திரத்துல வர்றார் அதர்வா. 
மற்றபடி போலீஸ் வேலை என்பது அவருடைய கனவு கிடையாது. அவருக்கு ஒரு வேலை வேணும். அந்த வேலை கிடைத்தால் தனிப்பட்ட பிரச்னைகளை தீர்க்க முடியும். இதுதான் அவர் வேலைக்கான பின்னணி. 

அதர்வா கதாபாத்திரத்தை ஈசியா சொல்வதாக இருந்தால் ‘பாணா காத்தாடி’யில் பார்த்த அதர்வா, சூழ்நிலைகாரணமாக போலீஸானால் எப்படியிருப்பாரோ அது மாதிரிதான் இதுல அவருடைய கேரக்டர் இருக்கும். ஹீரோவாக எந்த இடத்திலும் தெரியமாட்டார். கேரக்டராக மட்டுமே தெரிவார். 

பிறக்கும்போது யாரும் ஹீரோவாக பிறப்பதில்லை. சிச்சுவேஷன்தான் ஒருவரை ஹீரோவாக மாத்தும்னு பெரியவங்க சொல்வாங்க. அதுமாதிரி ஒரு சிச்சுவேஷன்ல ஹீரோவா மாறுவார்.

அதர்வா ப்ரொபஷனல் ஆர்ட்டிஸ்ட். அவரிடமிருந்து எந்த தொந்தரவும் வந்ததில்லை. இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை அழகாக செய்து கொடுப்பார். சொல்லப்போனால் இதைவிட சிக்கலான கதாபாத்திரங்கள் அவர் செய்துள்ளார். அதனால் இந்தப் படத்துக்கு பெரிய முயற்சி தேவைப்படவில்லை. ஸ்பாட்டுக்கு வந்து என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்கிட்டு அதை அழகாக செய்துகொடுப்பார். 

படத்தோட இன்னொரு அட்ராக்‌ஷன் வில்லனாக வரும் அஸ்வின் காகுமனு. அவரை இந்த கோணத்துல யாரும் ஏன் யோசிக்கவில்லைனு தெரியவில்லை. வில்லன் கேரக்டருக்கு அவரை செலக்ட் பண்ணும்போது எல்லோரும் அவர் லவ்வர் பாய் கேரக்டர் பண்ணக்கூடியவர். எப்படி இருப்பார்னு சந்தேகத்தை கிளப்பினார்கள். அஸ்வினுக்கும் அந்த தாட் இருந்துச்சு. 

அவரை கன்வின்ஸ் பண்ணதும் புரிஞ்சுகிட்டார். அவர் பற்றி சொல்வதாக இருந்தால் ஒரு விஷயம் சொல்லணும். முதல் முறை சந்திச்சு கதை சொல்லும்போது அவர் கேரக்டர் எப்படி இருக்கணும்னு சொன்னேன். அதன்பிறகு அவர் படம் முடியும்வரை தன்னுடைய கேரக்டர் பற்றி எந்த சந்தேகமும் கேட்காமல் நடித்துக்கொடுத்தார். அப்படியொரு ஆயத்தத்துடன் வருவார்.

இந்தப் படத்துக்காக அறுபத்தி ஆறு ஹீரோயின்கள் தேடியதாக ஒரு செய்தி வந்துச்சே..?

ஆமா, அப்படியொரு நியூஸ் வந்ததை நானும் கேள்விப்பட்டேன். அது முற்றிலும் தப்பு. எந்த இடத்திலும் நான் அப்படிச் சொல்லவில்லை. இந்தியாவிலேயே அத்தனை ஹீரோயின்கள் இல்லை. 

படப்பிடிப்புக்கு முன் இருபது நாளில் ஹீரோயின் செலக்ட் பண்ணவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அப்போது மூணு பேரிடம் மட்டுமே கால்ஷீட் இருந்துச்சு. அதுல இரண்டு பேரால் நடிக்க முடியாத சூழ்நிலை இருந்துச்சு. 

லாவண்யா திரிபாதி தெலுங்கில் பிசி நடிகை . தமிழுக்கும் பொருத்தமான முகம் என்பதால் அவரையே செலக்ட் பண்ணிட்டோம். அவருடைய சில படங்கள் பார்த்துள்ளேன். அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். சிறந்த நடிகை. இயக்குநர் சொன்னதைவிட பெட்டராக பண்ணக்கூடியவர்.முக்கிய வேடத்துல ஷாரா, ‘இன்ஸ்ட்டாகிராம்’ பிரபலம் தெளஃபிக், அழகம் பெருமாள், போஸ் வெங்கட் வர்றாங்க. எல்லோரும் சம்பளத்துக்காக நடிக்கிறோம் என்பதை மறந்து ஆத்மார்த்தமாக நடித்தார்கள். 

படத்தின் தொண்ணூறு சதவீத படப்பிடிப்பு இரவில் நடந்துச்சு. மாலையில் ஆறு மணிக்கு ஆரம்பிச்சு காலையில் ஆறு மணிக்கு ஷூட் முடியும். முதல் பட இயக்குநர் என்று பார்க்காமல் எல்லோரும் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். 

ஆக்‌ஷன் கதைகளுக்கு டெக்னிக்கல் டீம் முக்கியமாச்சே..? 

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எனக்கு இது முதல் படம். அவர் ஏராளமான படங்கள் செய்தவர். ஸ்பாட்ல அனுபவமில்லாமல் சில விஷயங்கள் நடக்கும்போது என்னை கரெக்ட் பண்ணியிருக்கிறார். அவருடைய சப்போர்ட் எனக்கு பில்லர் மாதிரி. 

படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில் நடந்துச்சு. அனாமிக் கேமராவுல படப்பிடிப்பு நடத்தினோம். அந்த கேமராவுல ஷூட்டிங் நடத்துவது ஈஸி கிடையாது. நாங்கள் நிர்மாணித்த செட்டுக்கு லைட்டிங் பண்ணுவது கஷ்டம். எல்லாத்தையும் சவாலாக எடுத்து செய்தார்.ஜஸ்டின் பிரபாகர் மியூசிக். இரண்டு பாடல்கள். பின்னணி இசை பேர் வாங்கித் தரும். ‘அமரன்’ கலைவாணன் எடிட்டிங் செய்துள்ளார். தயாரிப்பு அன்னை ஃபிலிம்ஸ்.

எஸ்.ராஜா