53 வயதில் ஓட ஆரம்பித்தார்... 92 வயதில் உலகையே மிரள வைக்கிறார் இந்த வீராங்கனை!
பொதுவாக ஓட்டப்பந்தயம் மாதிரியான விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்கள். பெரும்பாலும் முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள்ளேயே ஓய்வை அறிவித்துவிடுவார்கள். உலகப்புகழ் பெற்ற ஓட்டப்பந்த வீரரான உசேன் போல்ட் கூட 31 வயதிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வுக்குப் பிறகு அவர்கள் நட்பு ரீதியாக நடக்கும் ஓட்டப்பந்தயங்களில் கூட பெரிதாகக் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர், எம்மா மரியா மசேங்கா. 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும்போது கூட ஓட்டப்பந்தயங்களில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். இப்போது எம்மாவுக்கு வயது 92.‘‘ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்வதற்கும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன்.
ஆரோக்கியம்தான் வயதான காலத்திலும் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறது. அதாவது, யாருடைய உதவியும் இல்லாமல் இளம் வயதினரைப் போல நடமாடுவதற்கும், மனத் தெளிவுடன் இருப்பதற்கும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்...’’ என்கிற எம்மா, இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர்; வேதியியல் துறையில் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பெரும்பாலானவர்கள் 90 வயதில் நடப்பதற்கே மற்றவர்களின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்போது, இருபது வயதானவரைப் போல ஓடுகிறார் எம்மா. இந்த உலகில் 90 வயதில் இவ்வளவு வேகமாக ஓடக்கூடிய ஒரே பெண் எம்மாவாகத்தான் இருக்கும்.
ஆம்; கடந்த 2024ம் வருடம், 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. சர்வதேச அளவில் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 51.47 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தார் எம்மா.‘‘போட்டியில் நிறைய பேர் கலந்துகொள்ளவில்லை. அதனால் முதல் இடத்தை சுலபமாகப் பிடிக்க முடிந்தது...’’ என்று போட்டி முடிந்த பிறகான நேர்காணலில் சொன்னார் எம்மா.
ஆனால், 91 வயதில், 51.47 நொடிகளில் 200 மீட்டர் தூரத்தை கடந்த எம்மாவின் பாதங்களும், ஆரோக்கியமும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தன. ஓர் இளம் தடகள வீரரைப் போல எப்படி வயதான பெண்மணியால் இயங்க முடிகிறது என்ற ஆய்வில் இறங்கினார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.சில நாட்களுக்கு முன்பு இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சிக்குழு ஒன்று, எம்மாவைச் சந்தித்தது.
வயதாகும்போது உடல் திறன் எப்படி மாற்றமடைகிறது, 90 வயதிலும் 20 வயதைப் போல எப்படி ஓட முடிகிறது என்பது குறித்த ஆராய்ச்சிக்கு உதவும்படி எம்மாவிடம் கேட்டுக்கொண்டது அந்த ஆராய்ச்சிக் குழு. எம்மாவும் ஆராய்ச்சிக்கு முழு மனதுடன் சம்மதித்தார்.
முதல் ஆராய்ச்சியாக எம்மா சைக்கிளிங் செல்லும் போதும், முழங்கால் உடற்பயிற்சிகளைச் செய்யும்போதும் அவரது உடல் எப்படி இயங்குகிறது என்று பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவுகளில் அவரது உடல் இளம் வயதினரைப் போல இயங்குகிறது என்று தெரிய வந்தது. அடுத்து எம்மாவின் தொடைப்பகுதியில் இருக்கும் தசையை எடுத்து பயாப்ஸி சோதனை செய்தனர். மட்டுமல்ல, எம்மாவுடைய திசுக்களை ஆராய்ந்ததில், அவருடைய இதய ஆரோக்கியம் வெகு சிறப்பாக இருப்பதைக் காட்டியது. அதாவது, அவரது 90 வயதான உடல், 40 வயதுக்குரிய பெண்கள் மாதிரி ஆக்சிஜனைப் பம்ப் செய்கிறது என்பதைக் கண்டு பிடித்தனர்.
தொடைப்பகுதியின் பயாஸ்பி சோதனை முடிவில் அவருடைய தசைப்பகுதியும் இளம் வயது பெண்களைவிட, கூடுதல் சக்தியுடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. எம்மாவின் தசை இயக்கம் 20 வயதுடையவர்களின் தசை இயக்கத்துக்கு இணையானது என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் 90 வயதுகளிலும் எம்மாவால் மிக வேகமாக ஓட முடிகிறது.
‘‘எம்மாவின் வாழ்க்கை முறை அல்லது மரபியல் காரணத்தினாலோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அவரது உடலை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்கலாம். அவரது மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும், தசைகளுக்கும் இடையிலான தொடர்புகள் இன்னமும் ஆரோக்கியமாக உள்ளன...’’ என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கிறிஸ் சாண்ட்பெர்க்.
பதின்பருவத்திலேயே ஓட்டப்பந்தய வீராங்கனையாக அறியப்பட்டவர், எம்மா. ஓட்டப்பந்தய வீராங்கனையாக வேண்டும் என்பதுதான் அவரது கனவு.
ஆனால், இருபது வயதிலேயே எம்மாவுக்குத் திருமணமாகிவிட்டது. அதனால் ஓட்டப்பந்தயத்தை விட்டு விலக வேண்டிய சூழல். இருந்தாலும் ஓட்டப்பந்தயத்தின் மீதான காதல் அவருக்குக் குறையவே இல்லை.
முப்பது வருடங்கள் கழித்து, அதாவது, தனது 53 வயதில் மீண்டும் ஓடத் தொடங்கினார் எம்மா. தனது முன்னாள் குழுவினருடன் இணைந்து ஓடுவதற்காக பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, போட்டியில் கலந்துகொண்டார்.
இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறார். ‘‘திருமணத்துக்கு முன்பு எந்த ஒரு நாளையும் முழுவதுமாக வீட்டுக்குள்ளேயே நான் கழித்தது இல்லை. ஓட்டப்பந்தயம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியது அதுதான். திருமணத்துக்குப் பிறகு என் வாழ்க்கை மாறிப்போனது. நிறைய நாட்களை வீட்டுக்குள்ளேயே கழித்தேன். இனிமேலும் அப்படியிருக்க முடியாது என்று ஓட வந்துவிட்டேன்...’’ என்கிற எம்மா, தனது உடல் ஆரோக்கியத்துக்காக உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார். பாஸ்தா அல்லது அரிசி சோறுடன் சேர்ந்த அவிச்ச முட்டை, மீன், மாட்டுக்கறிதான் அவருடைய முக்கியமான உணவு.
தவிர, இடைவிடாத உடற்பயிற்சி முதிய வயதிலும் ஆரோக்கியமான உடலைத் தக்க வைப்பதற்குப் பேருதவி செய்வதாகச் சொல்கிறார் எம்மா. மட்டுமல்ல; 70 வயதுக்கு மேலான பல ஓட்டப்பந்தய வீரர்கள் எல்லாம் தாமதமாகத்தான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
அதனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்க வயது ஒருபோதும் பிரச்னையில்லை என்கின்றனர் அந்த ஆராய்ச்சியாளர்கள். எம்மா கூட 40 வயதுக்கு மேல்தான் உடற்பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார். ஆனால், இடைவிடாமல் தொடர்ச்சியாக உடற்பயிற்சியைச் செய்ததுதான் அவரது ஆரோக்கியத்தின் ரகசியம்.
த.சக்திவேல்
|