S/O Cricket Players!
இந்திய கிரிக்கெட்டில் அதிரடிக்குப் பெயர்போனவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் முந்நூறு ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக முந்நூறு ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரும் அவர்தான். இத்தனை சாதனை புரிந்தவரின் மூத்த மகன் இப்போது தந்தையின் பாதையை அடியொற்றி கிரிக்கெட்டில் அதிரடி காட்டி வருகிறார் என்பதுதான் ஹைலைட்!
 இதனால், மகன் ஆர்யாவீர் சேவாக் அத்தனை செய்திகளிலும் வைரலாகி வருகிறார். தந்தை வீரேந்திர சேவாக்கை விஞ்சிய தனயனாக ஜொலிக்கிறார் ஆர்யாவீர்.
கடந்த 2007ம் ஆண்டு பிறந்த இவர், தந்தையைப் பார்த்து கிரிக்கெட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். இப்போது தந்தையைப் போலவே அதே அதிரடியிலும் பின்னியெடுக்கிறார்.
ஆரம்பத்தில் பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலக்கிய ஆர்யாவீர் கடந்த ஆண்டு தில்லி அண்டர் 19 அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல்தர போட்டியான கூச் பெஹார் டிராஃபியில் மேகாலயா அணிக்கு எதிராக களமிறங்கினார்.
இதில் 309 பந்துகளில் 297 ரன்கள் அடித்து அசத்தினார். சேவாக்கைப் போலவே எந்த அச்சமும் இல்லாமல் 51 பவுண்ட்ரிகளையும், மூன்று சிக்சர்களையும் அசால்ட்டாக அடித்தார் ஆர்யாவீர். பேட்டிங்கில் அத்தனை நேர்த்தியுடன் அவர் விளையாடியது பலரை வியக்கச் செய்தது. இன்னும் 23 ரன்கள் அடித்திருந்தால் சேவாக்கின் அதிகபட்ச 319 ரன்கள் சாதனையை அவர் விஞ்சியிருக்கலாம். ஆனால், அவுட்டாகிப் போனார்.
அப்போதே சேவாக் தன்னுடைய எக்ஸ் தளம் பக்கத்தில், ‘நன்றாக விளையாடினாய். 23 ரன்களில் மிஸ் செய்துவிட்டாய். இந்த ஃபயரை அப்படியே வைத்திரு. அப்பாவின் பல நூறுகள், இருநூறுகள், முந்நூறுகள் சாதனைகளை எல்லாம் முறியடிப்பாய். வாழ்த்துகள்’ என மகனைப் புகழ்ந்து பாராட்டினார்.
இதன்பிறகு அவரின் அதிரடியைப் பார்த்து சமீபத்தில் தில்லி பிரீமியர் லீக் போட்டிக்காக ‘சென்ட்ரல் தில்லி கிங்ஸ்’ அணி அவரை 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதில் முதல்முறையாக களம் கண்ட ஆர்யாவீர் சேவாக் முதல் போட்டியில் 16 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்து ஆரவாரப்படுத்தினார். கடந்த வாரம் நடந்த இறுதிப் போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது. அப்போது சேவாக்கும், ஆர்யாவீரும் மைதானத்தின் பவுண்ட்ரி லைனுக்கு வெளியே பேசிய காட்சிகள் வைரலாகின. இந்நிலையில் விரைவில் ஆர்யாவீர் ஐபிஎல்லில் ஜொலிப்பார் எனக் கணித்துள்ளனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். ஆனால், தந்தை போலவே ஜொலிக்க பலகட்ட பயிற்சிகள் வேண்டும் என்கின்றனர் சில நிபுணர்கள். ஏனெனில், சர்வதேச அளவில் பிரபலமாக வலம் வந்த கிரிக்கெட் வீரர்களின் மகன்கள் பெரிதாக கிரிக்கெட்டில் சோபிக்காமல் போனதை சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரம் இதற்கு விதிவிலக்காக சில கிரிக்கெட் வீரர்களின் மகன்கள் பெரிய அளவில் சோபித்தும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், அவரவர் தொடர்ந்து தக்கவைக்கும் ஃபார்மையும், பெர்ஃபாமன்ஸையும் பொறுத்தே சோபிப்பதும், சோபிக்காமல் இருப்பதும். இதில் உதாரணத்திற்கு சிலர் பற்றி பார்ப்போம்.
கவாஸ்கர் - ரோகன் கவாஸ்கர்
1970களின் தொடக்கத்தில் இருந்து 1980களின் பிற்பகுதி வரை இந்திய கிரிக்கெட் அணியில் கோலோச்சியவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் புரிந்தவர். 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் இருந்தவர்.
இவரின் மகன் ரோகன் கவாஸ்கர். இவர் முதல்தர போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் கலக்கியவர். அப்படியானவர் 2004ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் அறிமுகமானார். ஆனால், மொத்தமே 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதில் ஒரு அரை சதம் உள்பட 151 ரன்கள் மட்டுமே அடித்தார். அதே 2004ம் ஆண்டிலேயே அவரின் கடைசி ஒருநாள் போட்டியும் அமைந்தது. கவாஸ்கர் போல் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும் சிறப்பாகவே செயல்பட்டார்.
யோக்ராஜ் சிங் - யுவராஜ் சிங்
பஞ்சாப்பைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யோக்ராஜ் 1980ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். இதில் ஒரு டெஸ்ட் மற்றும் ஆறு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனால், அவரின் மகனான யுவராஜ் சிங்கோ 2000ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சினார். இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.
தந்தையை விஞ்சிய தனயனாக ஜொலித்தார். இன்றும்கூட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. ரோஜர் பின்னி - ஸ்டூவர்ட் பின்னி
தற்போது இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவராக இருப்பவர் ரோஜர் பின்னி. 1980களில் இந்திய அணியில் கோலோச்சியவர். 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியிலும் இருந்தவர்.
அந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவராகத் திகழ்ந்தார். இவரின் மகன் ஸ்டூவர்ட் பின்னி. ஆல்ரவுண்டராக விளங்கிய இவர் 2014 ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் இந்திய அணிக்கு ஆடினார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்களிலும் சிறப்பாகவே விளங்கினார் ஸ்டூவர்ட் பின்னி. ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெறும் நான்கு ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட் வீழ்த்தி சாதனை வீரராக வலம் வந்தார். பிறகு ஐபிஎல்லில் மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். தந்தையைப் போலவே ஸ்டூவர்ட்டும் ஓரளவு பேசப்பட்டார்.
விஜய் மஞ்ச்ரேக்கர் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
1950களில் இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடியவர் விஜய் மஞ்ச்ரேக்கர். 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதம், 15 அரைசதம் அடித்தவர். இவரின் மகனும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஜொலித்தார்.
1987ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பத்து ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பிடித்தவர் டெஸ்ட் போட்டியில் நான்கு சதமும், ஒன்பது அரைசதமும் அடித்தார். இதேபோல் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் மற்றும் 15 அரைசதமும் அடித்துள்ளார். இன்னும் சிலர்...
இவர்கள் தவிர, 1933ம் ஆண்டிலிருந்து 1955 வரை 22 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடியவர் லாலா அமர்நாத். சுதந்திர இந்தியாவின் முதல் கிரிக்கெட் கேப்டனாக இருந்தவர்.
இவரின் மகன் மொஹிந்தர் அமர்நாத் தந்தையைப் போலவே 1969ம் ஆண்டிலிருந்து 1989ம் ஆண்டு வரை இந்திய அணியில் கோலோச்சினார். ஆனால், இவரின் சகோதரர் சுரிந்தர் அமர்நாத் குறுகிய காலம் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார்.
1974ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்தவர் ஹேமந்த் கனிட்கர். ஓராண்டு மட்டுமே அணியில் இருந்தவர் இரண்டு டெஸ்ட்கள் மட்டுமே ஆடினார். இவரைப் போல இவரின் மகன் ரிஷிகேஷ் கனிட்கரும் மூன்று ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இவரும் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட்கள் மட்டுமே ஆடினார்.
இதேபோல் இந்திய கிரிக்கெட்டில் நிறைய பேர் உள்ளனர். இப்போது வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யாவீர் பற்றிய கணிப்பு போல டெண்டுல்கர் மகன் அர்ஜுன் மீதும் இருந்தது. ஆனால், இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர் ஐபிஎல்லில் எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை. டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால், 25 வயதான அர்ஜுனால் இன்னும் அது முடியவில்லை. இருந்தும் அவர் முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.இதனுடன் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் மகன்கள் இருவரும் இப்போது கிரிக்கெட்டில் கோலோச்சி வருகின்றனர். மூத்த மகன் சமித் டிராவிட் இந்திய அண்டர் 19 அணியில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளார்.
இளைய மகன் அன்வே டிராவிட்டும் மாநில அண்டர் 14 அணிக்காக ஆடி வருகிறார்.இந்தத் தனயர்கள் எல்லோரும் தங்கள் தந்தைகளைப் போலவே இந்திய அணியில் இடம்பிடித்து ஜொலிப்பார்களா என்பது அவர்களின் செயல்திறனைப் பொறுத்தே அமையும்.
ஹரிகுகன்
|