Must Watch
 வுல்ஃப் மேன் ஒரு வித்தியாசமான திகில் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘ஹாட் ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கிறது ‘வுல்ஃப் மேன்’ எனும் ஆங்கிலப்படம்.எழுத்தாளரான பிளேக் தனது மனைவி சார்லட் மற்றும் மகள் ஜிஞ்சருடன், சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். கோபம்தான் பிளேக்குக்கு எதிரி. கோபம் காரணமாக அடிக்கடி வீட்டில் பிரச்னை ஏற்படுகிறது.
விடுமுறையைக் கழிப்பதற்காக, தான் குழந்தைப்பருவத்தில் வாழ்ந்த வீட்டுக்குச் செல்கிறார் பிளேக். வீட்டுக்குச் செல்லும் வழியில் டெரேக் என்பவரைச் சந்திக்கிறார். சூரியன் மறைவதற்குள் வீட்டுக்குச் செல்லும் வழியைக் காண்பிக்கிறார் டெரேக். வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு வழியில் வித்தியாசமான ஒரு பிராணி பிளேக்கை பயமுறுத்த, சாலையை விட்டு வேறு வழியில் செல்கிறார் பிளேக்.
அந்த பிராணி பிளேக்கின் கைகளில் கீறலை உண்டாக்கி, டெரேக்கை கொன்றுவிட, சூடுபிடிக்கிறது திகில் திரைக்கதை. வழக்கமான ஹாலிவுட் மசாலாவையே வேறொரு பாணியில் சுவாரஸ்யமாகத் தந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை திகில் உணர்வைத் தக்க வைத்திருப்பது படத்தின் பலம். இப்படத்தின் இயக்குநர் லே வானெல். சிக்கந்தர்
சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்திப் படம், ‘சிக்கந்தர்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்க கிடைக்கிறது. ராஜ்கோட்டிலேயே செல்வாக்கான ஓர் ஆள், சஞ்சய். மக்கள் அவரை ‘சிக்கந்தர்’ என்று அன்புடன் அழைக்கின்றனர்.
ஒரு விமானத்தில் மந்திரியின் மகன் அர்ஜுன் பயணித்துக்கொண்டிருக்கிறான். அந்த விமானத்தில் முன்னாள் ஆபாசப் பட நடிகை மோனிகாவும் பயணிக்கிறார். இப்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, குடும்பத்தைக் கவனித்து வருகிறார். மோனிகாவைத் தன் ஆசைக்கு இணங்க அழைக்கிறான் அர்ஜுன். அந்த விமானத்தில் சஞ்சய்யும் பயணிக்கிறார். அர்ஜுனை அடித்து, மோனிகாவிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார் சஞ்சய். தன் மகனை அடித்துவிட்டான் என்று சஞ்சய்யை கைது செய்யுமபடி இன்ஸ்பெக்டரிடம் மந்திரி சொல்ல, சூடுபிடிக்கிறது ஆக்ஷன் திரைக்கதை. லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஜாலியாக ஒரு ஆக்ஷன் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படம் இது. ஆக்ஷன் காட்சிகளிலும், சிக்கந்தராக நடிப்பிலும் கலக்கி இருக்கிறார், சல்மான் கான். படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ வொர்க்கிங் மேன்
ஆக்ஷன், திரில்லர் படப்பிரியர்களுக்காக ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது, ‘ஏ வொர்க்கிங் மேன்’. இந்த ஆங்கிலப்படம் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. ஒரு காலத்தில் கமாண்டோவாக இருந்தவர், லேவன். இப்போது கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். மகள் மேரி, மாமனாருடன் வசித்து வருகிறாள். மகளைப் பார்க்கக்கூட லேவனை அவரது மாமனார் அனுமதிப்பதில்லை.
லேவனுக்கு ஜோவின் குடும்பத்தினருடன் நெருக்கமான நட்பு இருக்கிறது. ஜோவின் மகள் ஜென்னி, தனது தோழமைகளுடன் வெளியில் செல்கிறாள். அப்போது ரஷ்ய கும்பல் ஒன்று ஜென்னியைக் கடத்தி விடுகிறது.
மகள் காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் தெரிவிக்கிறார் ஜோ. காவல்துறையினரால் யார் கடத்தியிருப்பார்கள் என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் லேவனின் உதவியை நாடுகிறார் ஜோ. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்கும் லேவன் தன் நண்பருக்கு உதவினாரா என்பதே ஆக்ஷன் திரைக்கதை. இப்படத்தின் இயக்குநர் டேவிட் ஏயர். ஹிட்: த தேர்ட் கேஸ்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘ஹிட்: த தேர்ட் கேஸ்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இதற்கு முன்பு வெளியான, ‘ஹிட்: த ஃபர்ஸ்ட் கேஸ்’, ‘ஹிட்: த செகண்ட் கேஸ்’ ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையிலேயே ரவுடி போல வலம் வரும் ஓர் அதிகாரி, அர்ஜுன் சர்கார். ஆள் இல்லாத ஓர் இடத்தில் ஒருவனைத் தலைகீழாகத் தொங்கவிடுகிறார் அர்ஜுன். பிறகு அவனது நரம்பை அறுத்து கொலை செய்கிறார். இதையெல்லாம் ஒரு வீடியோவாக பதிவு செய்கிறார். அவரே அந்த கொலை வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறார். கொல்லப்பட்டவனின் உடலில் சில உறுப்புகளைக் காணவில்லை என்பது தெரிய வருகிறது. இதே மாதிரி இன்னொருவனையும் கொலை செய்து வீடியோவாக்குகிறார். காவல்துறை அதிகாரியான அர்ஜுன் ஏன் சீரியல் கில்லர் போல தொடர்ந்து ஒரே மாதிரி கொலை செய்கிறார்? கொலை செய்ததை எதற்காக வீடியோவாக்குகிறார் என்பதற்கு பதில் தருகிறது மீதிக்கதை. படத்தின் இயக்குநர் சைலேஷ் கொலானு.
தொகுப்பு: த.சக்திவேல்
|