வரி...வட்டி...கிஸ்தி..! வர்த்தகப் போரை தொடங்குகிறார் டிரம்ப்?
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகி இருக்கும் டொனால்ட் டிரம்ப், தான் பதவியேற்றது முதலே முந்தைய ஆட்சியாளர்களின் நடைமுறைகளை விமர்சிப்பதோடு அண்டை நாடுகளுடன் வர்த்தகம், அயல் உறவு உள்ளிட்டவற்றை தலைகீழாக மாற்றவும் துடிக்கிறார்.  அதன் ஒருபகுதியாக உலக நாடுகள் அமெரிக்காவின் ஏற்றுமதி பொருளுக்கு தமது நாடுகளில் எத்தகைய வரியை விதிக்கின்றனவோ அதே அளவு வரியை அமெரிக்காவும் அந்தந்த நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்பின் மிரட்டலுக்கு அஞ்சாமல் சீனா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் அமெரிக்கா எந்த அளவு வரியை உயர்த்துகிறதோ அதேபோல் அமெரிக்க பொருட்களுக்கு தம் நாட்டில் மேலும் கூடுதல் வரியை விதித்து வருகின்றன. 
டிரம்ப்பின் பரஸ்பர வரியைத் தவிர கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தனியாக 25% வரிவிதிப்பும் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரிவிதிப்பு முறை மூலமும், தனிச்சிறப்பாக தனக்கு பணியாத நாடுகளின் மீது போடப்படும் கூடுதல் வரியையும் சேர்த்தால் ஆண்டுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வரி வசூலாக அமையும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
மோடியின் ஆட்சிக் காலம் முழுவதும் இந்தியாவானது அமெரிக்காவின் நட்பு நாடாகவுமே இருந்து வந்துள்ளது. இந்திய மக்களின் உழைப்பையும், இந்தியாவின் கனிம வளங்களையும், இந்தியாவின் சந்தையையும் பயன்படுத்தி அமெரிக்கா உயர்ந்துதான் வந்துள்ளது. ஆனால், அதை மறுத்து ஏதோ நாம் அமெரிக்கர்களை வஞ்சிப்பதாக வாய்கூசாமல் அவதூறும் செய்கின்றனர்.
உதாரணமாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லிவிட் அளித்துள்ள பேட்டியில், “இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிக நீண்ட காலமாக நமது நாட்டை கொள்ளை அடித்து வருகின்றன. அதன் மூலம் அவர்கள் அமெரிக்க தொழிலாளர்கள் மீதான வெறுப்பை மிகவும் தெளிவாக க் காட்டியுள்ளனர்...” என பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார்.
ஒரு நாடு இன்னொரு நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது வரியை விதிப்பது எப்படி அந்நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் மீதான வெறுப்பாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் பதிலில்லை.
இத்தனைக்கும் அமெரிக்காவின் வரி விதிப்பு தாக்குதலுக்கு எதிராக இந்தியா எதுவும் சொல்லவில்லை; செய்யவில்லை. அத்துடன் அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட மோட்டார் பைக்குகள் மீதான வரி 50% என்று இருந்ததை 40% ஆக்கியது. போர்பன் விஸ்கிக்கு 150% இருந்த வரியை 100% என்று குறைத்தது. அப்படியிருந்தும் இந்தியா மீதான அவதூறை அமெரிக்கா கிளப்பியபடியேதான் இருக்கிறது.
சரி... ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் மீது வரிவிதிப்பு ஏன் அவசியம்?
இன்றைய கார்ப்பரேட் உலகில் ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உலக நாடுகள் சமநிலையில் இல்லை.ஒப்பீட்டு அளவில் முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள்தான் மிக மலிவான விலையில் தமது உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு சந்தையில் குவிக்க முடியும்.
அதே நேரம் பின்தங்கிய தொழில்நுட்பத்தில், குறிப்பாக அதிக மனித உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகமானதாகவே சந்தைக்கு வரும்.அதாவது வளரும் பின்தங்கிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையானது முன்னேறிய நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்களது உற்பத்தி செலவுகளை விட அதிகமானதாக இருக்கும்.
வளரும், பின்தங்கிய ஏழை நாடுகளின் உற்பத்தி பொருட்கள் முன்னேறிய நாடுகளின் உற்பத்தி பொருட்களோடு சந்தையில் போட்டி போட முடியாததாகவும் இருக்கும். இதைச் சமப்படுத்தவே ஒவ்வொரு பின்தங்கிய நாடும் தனது நாட்டுக்குள் குறைவான விலையில் இறக்குமதியாகும் பொருட்களின் மீது வரிகளை போடுகின்றது.
ஒவ்வொரு துறையிலும் குறிப்பாக எந்தப் பொருட்கள் முன்னேறிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி ஆகிறதோ அந்தத் துறையில் அந்தப் பொருட்களின் உற்பத்தியானது அந்த நாட்டின் நுகர்வுச் சந்தையை முழுமையாக ஆக்ரமித்து விடுகிறது. பன்னாட்டு முன்னணி பிராண்டுகளுடன் போட்டி போட முடியாத நிலையில், இறக்குமதி செய்யும் நாட்டின் சொந்த பொருளுற்பத்தி சுயமாக வளர்வதற்கான வளர்ச்சி வாய்ப்பை தடுப்பதாகவும் இவை அமைகின்றன. இப்படியான சூழலில் அனைத்து நாடுகளும் ஒரே சமமான அளவில்தான் வரி போட வேண்டும் என்ற டிரம்பின் முடிவு எந்த வகையிலும் நீதியானதில்லை என்கிறார்கள் உலக பொருளாதார வல்லுனர்கள்.
வீழ்ச்சியுறும் பங்குச் சந்தை!
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான குழப்ப நிலை சர்வதேச வியாபாரம் மற்றும் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கிறது. குறிப்பாக, அதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் வர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்தது. அவரின் 26 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ‘க்ளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ்’ என்ற அமைப்பு கணித்துள்ளது.
இந்தியா மட்டுமல்ல, கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% என வரி விதிப்பு அமலாகிறது. மேலும், ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து டிரம்ப்பின் வரி விதிப்பால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. இதனுடன் உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துகளை இழந்துள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பவர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க். இவருக்கு சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் உள்ளார். இவருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 993 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எலான் மஸ்க்கிற்கு 94 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் வேளாண் துறை, அதிலும் குறிப்பாக மீன் இறக்குமதி துறை, இறைச்சி, பதப்படுத்தப்பட்ட கடல் உணவுத் துறை ஆகியன பாதிக்கப்படும் என்கிறார்கள்.தொழில் துறையில் மருந்துகள் துறை, நகை, எலக்ட்ரானிக் பொருட்கள் துறை பாதிக்கக்கூடும். ரசாயனத் துறை, மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் மெஷினரி துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நாடுகள்
அமெரிக்க பொருட்களுக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விதிக்கப்படும் வரியில் பாதி அளவு வரி விதிப் பை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீதம் பரஸ்பரம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், இங்கிலாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு குறைந்தபட்ச அளவாக 10 சதவீத பரஸ்பர வரியை மட்டுமே டிரம்ப் விதித்துள்ளார்.
இந்த வர்த்தகப் போரால் யாருக்கு லாபம்?
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையின்படி, சீனாவுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன வணிகவரித் துறை அறிவித்துள்ளது. இதுவே வர்த்தகப் போரின் தீவிரத்துக்கு அடித்தளம் இடுவதாக அமைந்துள்ளது.‘சீனாவில் இருந்து அரிய வகை தனிமங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அந்த தனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். இதனால் அமெரிக்காவின் கணினி சிப் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி பாதிக்கப்படும். மேலும், 27 அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அரசின் வரி விதிப்பை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா 34 சதவீத வரியை விதித்திருக்கிறது. அதே அளவு வரியை நாங்களும் விதித்திருக்கிறோம். இந்த புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’ என சீன அரசு தரப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் இந்த அதிரடியால் சீன பொருட்கள், இந்திய சந்தையை நோக்கி திரும்ப வாய்ப்பிருக்கிறது. இந்திய பொருட்களுக்கு 27 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய வைரங்கள், தங்க நகைகள், மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
அதேநேரம் இந்திய ஜவுளி ஏற்றுமதி ஊக்கம் பெறும்.அதாவது, சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.தற்போது வங்கதேச பொருட்களுக்கு 37%, வியட்நாம் பொருட்களுக்கு 46% இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது.
இதன் காரணமாக இரு நாடுகளின் ஜவுளி ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப்படும். அதேநேரம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யப்படும்’ என்கின்றனர்.மொத்தத்தில் உலகம் முழுக்க ஒரு குழப்பம் நிலவுகிறது. குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க அமெரிக்கா தயாராகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
கபிலன்
|