சிறுகதை-டீக்கடை பெஞ்சு



எப்போதும் போல் இன்றும் சீனு என்கிற சீனிவாசன் அந்த டீக்கடை பெஞ்சில் தன் நண்பர்களுடன் அமர்ந்து தேநீரை அருந்திக் கொண்டிருந்தான்.வழக்கத்துக்கு மாறாக டீக்கடைக்கு எதிரில் இருந்த மதியின் வீட்டில் தாறுமாறாக கூட்டம் நின்று கொண்டிருந்தது. கூடவே போலீசும்.‘என்ன ஆயிற்று’ என்றான் சீனு நண்பர்களைப் பார்த்து கண் சாடையில்.

‘‘மதியோட அப்பா வாக் போறப்ப பார்க்ல விழுந்திருக்காரு. அதபாத்த ஒருத்தர் மதி அப்பா மொபைலை எடுத்து, ‘மதி என் மகள்’ நம்பருக்கு கூப்பிட்டிருக்கார். பதறி மதி அங்க போயி அப்பாவைக் கூட்டிட்டு வந்திருக்கா. தலைல பலமா அடி. 
நினைவு திரும்பலை...’’ என்றான் சீனுவின்  நண்பன் குமார்.‘‘குடிச்சிருக்காருனு சொல்லு... அதை மட்டும் எதுக்கு எடிட் பண்ணிக்கிட்டு இருக்க..? அது போலீசுக்கு தெரிஞ்சு இத்தனை கலாட்டா...’’ என்ற நண்பன் சீனுவை சமாதானமாகப் பார்த்து தொடர்ந்தான் குமார்.‘‘இல்ல சீனு... நீ உடனே டென்ஷனாகி மதிய பார்க்க போக... அது...’’ இழுத்தான் குமார்.

‘‘இந்த நிலைமையிலும் நான் எப்படி போகாம இருக்க முடியும்?’’ என்ற சீனியின் கையைப் பிடித்து நிறுத்தினான் குமார்.‘‘வேணாம் மச்சி... ஏற்கனவே மதியோட அண்ணனுக்கு உன்ன கண்டா  காண்டு... இந்த சமயத்துல நீ உள்ள நுழைஞ்சா அது அவனுக்கு இன்னும் எரிச்சல் கொடுக்கும்... கொஞ்ச நஞ்சம் நீ மதியை கட்டிக்கலாங்கற நிலைமைல நீயே மண்ணை அள்ளிப் போட்டுக்காத...’’

குமார் சொன்னது என்னவோ சரிதான். மதியின் அண்ணன் மாதவனுக்கு சீனுவை கண்டால் ஆகவே ஆகாது. காரணம் ஒன்றல்ல. முதலில் சீனு பரம்பரை பணக்காரன். அப்பா சம்பாதித்த காசில் வெட்டியாய் உட்கார்ந்து டீக்கடை பெஞ்சில் அரட்டை அடித்துக்கொண்டு, மாதவனின் தங்கை மதிக்காக காத்திருப்பது பிடிக்காது. 

மாதவனின் கணிப்பில் பணக்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள். ஏமாற்றி சம்பாதிப்பவர்கள். பற்றாக்குறைக்கு மாதவனின் அப்பா சீனுவின் அப்பாவிடம் வாங்கிய கடனை திருப்ப காலதாமதமாக சீனுவின் அப்பா பேசிய பேச்சு இன்றும் மாதவனின் காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. இப்படி பல காரணங்கள்.

மதி, சீனுவுக்கே பேசப்பட்டவள். மாதவனின் அம்மா இறக்கும் தருணத்தில் மதி சீனுவுக்குதான் என்று தன் அண்ணனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விட்டாள்.இதை வேறு சீனுவின் அப்பா குத்திக் குத்திக் காண்பித்துக் கொண்டிருப்பார். 

அதுவும் மாதவனுக்கு பிடிப்பதில்லை.சீனு நல்லவன்தான். ஊரில் எங்கு பதற்றம் என்றாலும், யாருக்கு ஆபத்து என்றாலும் முதலில் போய் நிற்பவன் சீனுதான். அதற்கும் மாதவன் ஒரு வியாக்யானம் வைத்திருப்பான். ‘‘அவனுக்கு என்ன வேலையா வெட்டியா? போய் சும்மா சீன் போட்டுட்டு உட்கார்ந்து இருக்கான்...’’ என்பான்.

எல்லாவற்றையும் தாண்டி சீனுவின் இதயத்துக்குள்ளே ஓர் அழகிய, அற்புதமான மனது இருக்கிறது என்பதை ஒருபோதும் மாதவன் ஒப்புக் கொண்டதில்லை.இதையெல்லாம் யோசித்தபடி இருந்தபோது மதி வீட்டில் திடீர் சலசலப்பு.

ஆம்புலன்ஸ் வந்தது. சீனு எழுந்தான்.மதி ஜன்னலருகே வாடிய புஷ்பமாய் தென்பட்டாள். ஒரு புன்னகைக் கீற்று ஒரு நொடியில் மின்னலாய் தோன்றி மறைந்தது. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது மதிக்கும், சீனுவுக்குமே தெரியும்.‘சாப்பிட்டாயா?’ வாயை மட்டும் அசைத்து மதியைப் பார்த்து கேட்டான் சீனு.

‘இல்லை’ என்று உதட்டில் ஜாடை காண்பித்தாள் மதி.அடுத்த நொடி தன் பைக்கை கிளப்பி சரவண பவன் முன் நின்றான் சீனு. பத்தாவது நிமிடம் மதியின் கைகளில் இட்லி பொட்டலம் இருந்தது. நெகிழ்ந்துதான் போனாள் மதி.சீனுவின் ஒவ்வொரு சின்ன அசைவும், அவன் பெண்கள் மேல் வைத்திருக்கிற மதிப்பும், மதியை ஆச்சரியப்படுத்தும். எங்கு வெளியில் அழைத்துப் போனாலும் அவனுக்கே உரித்தான அந்த ஒரு மென்மைத்தன்மை பெண்களைப் பொருத்து அவனிடம் இருக்கும்.

வழியில் யாராவது கஷ்டப்படுவதைப் பார்த்துவிட்டால் இறங்கிச் சென்று அவர்களுக்கு உதவிசெய்துவிட்டுதான் வருவான். தன்னிடம் பணம் இருக்கிறது என்கிற கர்வமே கிடையாது.
அவன் தங்கையின் கல்யாணத்தை அவ்வளவு தடபுடலாக செய்தபோது ஊரே ஆச்சரியப்பட்டது. சீனுவுடைய தந்தை வீட்டை பாகம் பிரிக்கும் போது கூட தன் தம்பிக்கு பிடித்த பாகத்தை கொடுத்து விட்டு தங்கைக்கு இன்னும் வேண்டுமா என்று கேட்டு விட்டு தனக்கென ஒரு வீட்டையும்  நிலங்களையும் வைத்துக் கொண்டவன் சீனு.

மாதவனுக்கு ஏன் அவனைப் பிடிக்கவில்லை என்று மதிக்கு ஆச்சர்யம். ‘‘இல்லை மதி... அவனிடம் ஒரு ஃபெமினிசம் இருக்கு. நடிக்கிறான். அழகனும் இல்லை...’’
‘‘அதனால் என்ன அண்ணா..? மனசுதான் அழகு...’’‘‘மதி விடு... எனக்கு பிடிக்கலை. உனக்கு விருப்பமா? கல்யாணம் செய்துட்டு போ...’’ ‘‘வேண்டா வெறுப்பா சொல்ற. வேண்டாம். மனதார நீ சம்மதிக்கும் வரை அவர் காத்திருப்பார்...’’ ‘‘என்ன மதி..? இட்லி சாப்பிடு. ஆறிடப் போகுது...’’ என்ற சீனுவின் குரலுக்கு குலுங்கி நினைவிலிருந்து வெளி வந்தாள்.

‘‘அண்ணாவைப் பத்தி நினைச்சுட்டேன்...’’‘‘இப்ப அப்பாவ கவனிப்பதைப் பாரு... அப்புறமா நாம இதப் பத்தி பேசிக்கலாம்...’’மதியுடனும் மாதவனுடனும் சீனு இருந்தான். மதியின் அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்து எல்லாம் முடிந்த பின் மாதவன் பதிலுக்கு ஒரே ஒரு புன்னகை பூத்தான். மாதவனின் புன்னகைக்கு சீனுவின் மனதில் சந்தோஷம்.மறுநாள் நண்பர்களுடன் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நேற்று நடந்ததை சொன்னான் சீனு.

‘‘என்னப்பா... கொஞ்சமா பச்சைக் கொடி காட்டற மாதிரி இருக்கு..?’’

‘‘ம்... அப்படித்தான் நினைக்கறேன். அதுக்கு முன்னாடி இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு...’’ ‘‘எங்க..?’’‘‘அடையார் கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல. அங்க ஸ்பான்சர் பண்றேன்னு சொல்லியிருக்கேன்...’’‘‘இந்த தடவை எத்தனை பேருக்கு..?’’‘‘ஒரே ஒரு குழந்தைக்கு. குழந்தையை ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு வர்றப்ப அதனோட அப்பா அம்மா ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. 

அந்தக் குழந்தையைக் காப்பாத்தி அவங்க சொந்தக்காரங்ககிட்ட சேர்க்க வேண்டியது என் பொறுப்பு...’’‘‘ஏண்டா இதெல்லாம் உன் மச்சானுக்கு தெரியவே மாட்டேங்குது..?’’‘‘குமார்... தெரிஞ்சு செய்யறதுக்கு பேரு உதவி இல்ல. அது மனசுலேந்து வரணும். மத்தவங்க பாராட்டணும்னு செய்கிற உதவி எல்லாம் எனக்குப் பிடிக்காது... உங்களுக்கே தெரியும். தெரிஞ்சிட்டு எதுக்கு இப்படி கேக்குறீங்க..?’’

அந்தக் குழந்தைக்கு சிகிச்சை நாளை ஆரம்பம். நடந்தது எல்லாம் சீனுவின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். அந்தத் திருப்பத்தை வெற்றிகரமாக மாற்ற அவன் கொடுத்த விலை மிகவும் அதிகம்.
அந்தக் குழந்தையை சரி செய்து உறவினர்கள் வீட்டில் கொண்டு விட வேண்டும். 

அது மிகப்பெரிய கடமை. யாரும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விடவேண்டும். பிறகு முறைப்படி தத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அரசல் புரசலாக இந்தச் செய்தி மாதவன் காதில் விழ, இதுதான் தருணம் என்று மாதவன் சுத்தமாக அவனுக்கு தன் தங்கையைக் கொடுக்க மறுத்து விட்டான்.

அதோடு தங்கைக்கு வேறு இடம் பார்க்க ஆரம்பித்த பொழுதுதான் அந்த பிரச்னை துவங்கியது. மதி திடீரென மயங்கிவிழ மாதவன் உட்பட எல்லோரும் பதறி  மருத்துவமனையில் சேர்க்க இடியாய் அந்த செய்தி.

மதியின் கருப்பையில் புற்றுநோய்.‘‘லட்சத்துல ஒருத்தருக்கு இந்த மாதிரி கல்யாணம் ஆகாத பெண்களுக்கு வரும். காரண காரியங்களை நம்மால் ஆராய முடியாது. மூணு நாளுக்குள்ள ஆபரேஷன் பண்ணலைன்னா அவங்களோட நிலைமை சீரியஸ் ஆகிடும்...’’ என்ற டாக்டரை பார்த்து மதி கண்களால் ஜாடை காட்டினாள். .
புரிந்து நிறுத்தினார் டாக்டர்.

‘‘அப்ப இவங்களோட திருமண வாழ்க்கை..?’’ மாதவன் பதறினான்.‘‘உங்களுக்கு உயிர் முக்கியமா திருமணம்  முக்கியமா?’’ டாக்டரின் கோபத்தைப் பார்த்த மாதவன், மதியைப் பார்த்தான்.

‘‘மதி... என்னம்மா இப்படி ஆயிடுச்சு..?’’பதில் ஏதும் சொல்ல இயலாமல் அவள் கண்களில் கண்ணீர். ‘‘அண்ணா நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது... எப்படி இனி சீனு முகத்தை பாக்கறதுன்னு தானே?’’‘‘மதி... எதுவும் பேசாத. 

நான் குற்ற உணர்ச்சில செத்துகிட்டு இருக்கேன். இப்ப போய் அவன்கிட்ட என்னோட அனுதாபத்தை சொன்னேன்னா அவன் என்ன நினைப்பான்..?’’‘‘நான் எதுவும் நினைக்க மாட்டேன்...’’குரல் கேட்டு மதியும், மாதவனும் ஒரு சேர திரும்பினார்கள். சீனுவைப் பார்த்ததும் இருவருக்கும் திகைப்பு.

‘‘மாதவன்... உங்களுக்கு என்னை பிடிக்காமல் போகட்டும். அதப்பத்தி நான் எதுவும் சொல்லல. ஆனா, நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. நான் எப்ப வந்து பேசினாலும் ‘மதிய கல்யாணம் பண்ணிக் குடுங்க’னு கேக்குறதுக்குதான் வரேன்னு  நினைக்கறீங்க. அதையும் தாண்டி நிறைய விஷயம் இருக்கு...’’‘‘நான் என்ன சொல்ல வரேன்னா...’’ ‘‘சொல்ல வந்ததை சொல்லிடறேன். நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்ல மாதவன். டீக்கடை பெஞ்ச் எனக்கு ஒரு வரம். 

எனக்கு சின்ன வயசுல படிப்பு வராம போனப்ப இந்த டீ க் கடை பெஞ்சில்தான் சரணடைஞ்சேன். அதுதான் சொந்தங்கள், நண்பர்களை எனக்குக் கொடுத்தது. முக்கியமா மதியோட அன்பு, உங்க குடும்பம். காதல் எல்லாம் அதைத்  தாண்டினது... இப்ப நான் ஒரு குழந்தையை தத்து எடுத்திருக்கேன்னு சொன்னேனே... அது யாரு தெரியுமா..?’’

‘‘...’’‘‘சொல்லாம கொள்ளாம கல்யாணம் செய்துட்டுப் போன உங்க பெரியக்கா குழந்தைதான்...’’ ‘‘என்ன..?’’ அதிர்ந்தான் மாதவன்.‘‘இங்க பாருங்க மாதவன்... நீங்க எப்படியோ... எனக்குத் தெரியாது. ஆனா, எனக்குள்ள இருக்கிற மனசு அன்பினால் கட்டப்பட்டது. பணம் காசு எனக்கு முக்கியமில்ல...’’
‘‘அப்ப... அப்ப எங்க அக்கா கூட நீங்க பேசிட்டுதான் இருந்திருக்கீங்களா சீனு..?’’

‘‘ம்... அதனாலதான் அந்தக் குழந்தைக்கு கேன்சர்னு தெரிய வந்தது... மாதவன்... நம்மளோட பிளான் எல்லாம் எதுவுமே கிடையாது. எல்லாமே கடவுள் போட்ட கணக்குப்படிதான் நடக்கும். உங்க அக்காவோட குழந்தைக்கு இப்படி ஆகும்னு யாராவது நினைச்சாங்களா? உங்க தங்கைக்கு திடீர்னு இப்படி கருப்பையை எடுக்கும் அளவு போகும்னு  யாராவது நினைச்சாங்களா..?’’
‘‘...’’‘‘இப்போ உங்களுக்குள்ள ஒரு கேள்வி எழும். உங்க தங்கையை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கனு.

உங்களுக்கு நானும் மதியும் இன்னொரு அதிர்ச்சி தரப் போறோம்...’’ ‘‘இன்னிக்கு உங்களை நாங்க டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்ததே எங்களோட பிளான்தான்... ஆனா, இந்த மாதிரி பிரச்னை மதிக்கு இருப்பது உண்மை.

இது ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்களுக்குத் தெரியும். பீரியட்ஸ் வந்தப்ப மதி மயக்கம் போட்டு விழுந்தா. நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தப்ப அவங்க செக் பண்ணி பார்த்துட்டு இதைச் சொன்னாங்க...’’  ‘‘இதெல்லாம் தாண்டி காதல் என்பது மனசு சம்பந்தப்பட்டதுனு சொல்ல வரீங்க...

சரியா சீனு..?’’
‘‘ரொம்ப சரியா சொன்னீங்க மாதவன். இப்ப நான் சொல்லப் போற விஷயம் அதிர்ச்சி இல்ல. எதார்த்தங்கள்... எல்லாரும் எதிர்பார்க்கற எதார்த்தங்கள். ரெண்டு நாள் முன்னே இறந்துபோன உங்க அக்காவை உங்க வீட்டுக்கு கொண்டு வரலாம். பாடி மார்ச்சுவரிலதான் இருக்கு...’’ மாதவனின் கண்களில் கண்ணீர். ‘‘அப்படியே செஞ்சுடலாம்...’’‘‘சரி... இப்போ எனக்கு வேண்டியது ஒரு டீ...’’ சொன்ன சீனு, மதியின் வீட்டைவிட்டு வெளியே வந்து டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான்.‘‘மாஸ்டர் ஒரு டீ சூடா... சக்கரை தூக்கலா...’’ என்றான்.

திருமாமகள்