டேனியல் பாலாஜியின் கடைசிப் படம்!
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி படமாக வெளிவரவுள்ளது ‘ஆர்பிஎம்’. பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார். பிரபல மலையாள இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ளார்.  இவர் கலாபவன்மணி, ரசூல் பூக்குட்டி போன்றவர்களை வைத்து படம் செய்தவர். ‘‘வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் என்னை சினிமா இயக்குநராக மாற்றியது. கதைதான் என்னுடைய படங்களுக்கான கதாநாயகனை தேர்வு செய்கிறது. அதை டேனியல் பாலாஜி நடித்துள்ள ‘ஆர்பிஎம்’மிலும் பார்க்க முடியும்...’’ பொறுமையாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் பிரசாத் பிரபாகர். அது என்ன ‘ஆர்பிஎம்’?
என்ஜின் திறமையை ரெவலுஷன் பெர் மினிட்ன்னு சொல்வார்கள். அதாவது ஒரு நிமிடத்தில் சுற்றும் சுழற்சியைத்தான் ஆர்பிஎம்ன்னு சொல்வார்கள். குறிப்பிட்ட தூரத்தை அடைவதற்கு சைக்கிள், மோட்டார் பைக் என எந்த வகை வாகனத்தை தேர்வு செய்கிறோமோ அதைப் பொறுத்துதான் இலக்கை அடையமுடியும்.  வாழ்க்கையும் அதுமாதிரிதான். வாழ்க்கையில் எவ்வகை நோக்கத்தை தேர்வு செய்கிறோமோ அதுதான் நம்முடைய சக்தியாக இருக்கும். வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைய நினைக்கிறவர் அதற்கேற்ப இயங்கிக் கொண்டிருப்பார். குறுகிய இடத்தை அடைந்தால் போதும் என்று நினைக்கிறவர் அதற்கேற்ப இயங்கிக் கொண்டிருப்பார். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. பெரு நகரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் சொந்தபந்தங்களுடன் வாழ்வதில்லை. அவர்கள் இடம் மாறிச் செல்லும்போது தங்கள் வீட்டுப் பொருட்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனங்களைத்தான் சார்ந்துள்ளார்கள். வீடு மாறுவதில் முக்கிய இடம் பிடித்துள்ள பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் பற்றிய கதைதான் இது.
பொதுவாக ஒருவர் தன் வீட்டில் முன்பின் அறிமுகம் இல்லாதவரை அனுமதிக்கமாட்டார். அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களின் பழக்க வழக்கத்தைப் பொறுத்துதான் வரவேற்பறை, சமையலறை, பெட்ரூம் என எதுவரை அனுமதிக்கலாம் என்ற வரையறை வைத்திருப்போம்.
ஆனால், பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் அப்படி அல்ல. வீட்டுக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு எந்த அனுமதியும் தேவைப்படாது. வீடு காலி செய்யும்போது பீரோ, லாக்கர்ஸ் என மொத்தமும் அவர்கள் கன்ட்ரோலில் இருக்கும். அப்படி வருகிறவர்களில் கிரிமினல் இருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தோட ஐடியா.
அதுமட்டுமல்ல, ரெட் மார்க்கெட்டின் நெட் ஒர்க் பற்றியும் சொல்லியுள்ளோம். அண்டை நாடான சீனாவில் உறுப்பு மாற்று சிகிச்சை சட்டத்துக்கு புறம்பாக நடப்பதாக பல ஆதாரங்கள் உண்டு. அங்கு வருஷத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை நடப்பதாக பல தரவுகள் உள்ளன.
நம் நாட்டைப் பொறுத்தவரை சராசரியாக ஒரு நாளில் 300 பெண்கள் காணாமல் போவதாக போலீஸ் ரிக்கார்ட் உள்ளது. கடத்தல்காரர்கள் கடத்தப்பட்ட பெண்களின் கரு முட்டையைத் திருடி செயற்கை கருத்தரிப்பு மையங்களில் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள்.
இந்த நெட்ஒர்க்கை ரெட் மார்க்கெட் என்று அழைக்கிறார்கள். அப்படி இந்தக் கதையில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் கும்பலிடம் ஒரு பெண் எப்படி சிக்குகிறார்; அந்தப் பெண்னை காவல்துறை எப்படி மீட்கிறது; ரெட் மார்க்கெட் கும்பலுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.
டேனியல் பாலாஜி இதுல ஹீரோவா, வில்லனா?
இரண்டுமே இல்லை. என் பார்வையில் கதைதான் ஹீரோ. மலையாளத்தில் திருச்சூர் பூரம் விழாவை மையமா வெச்சு ‘த சவுண்ட் ஸ்டோரி’ என்ற படம் செய்தேன். அதில் கண் பார்வை இல்லாதவருக்கு அந்த விழாவை செவி வழியாக உணரச் செய்ய வேண்டும். அந்தப் படத்துக்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜினியர் என்பதோடு அவரே நடித்தார். அதற்காக ரசூல் பூக்குட்டியை ஹீரோவா சொல்ல முடியாது.
அந்தவகையில் என் படங்களில் கதைதான் ஹீரோவுக்கான இடத்தைப் பிடித்திருக்கும். என்னைப்பொறுத்தவரை நடிகர் என்பவர் கதாபாத்திரத்துக்கு வடிவம் கொடுப்பவர். அப்படி ராம் கதாபாத்திரத்துக்கு டேனியல் பாலாஜி.ராம் கேரக்டரில் நடிக்க என்னுடைய முதல் சாய்ஸாக அவர் மட்டுமே இருந்தார்.
அவரிடம் கதை சொல்லும்போது ‘என்னிடம் ஏன் கதை சொல்ல வந்தீங்க’ என்று கேட்டார். ‘உங்க குரலுக்காகவும், எக்ஸ்பிரஷனுக்காகவும் வரவில்லை. சிரிச்சும் சிரிக்காமலும் உங்களிடம் ஒருவித மெளனப் பார்வை வெளிப்படும். அதுதான் இந்தக் கதைக்கு தேவைப்பட்டுச்சு’ என்றேன். அவருடைய பெர்ஃபாமன்ஸ் எல்லோருக்கும் தெரியும். அண்டர்ப்ளே ஆக்டிங்ல பிச்சு உதறக்கூடியவர். ஆனாலும் என்னிடம் சஜஷன் கேட்பார். காட்சி எங்கு ஆரம்பிக்கிறது, எங்கே முடியப் போகிறது என்று கதாபாத்திரத்தின் தன்மையைக் கேட்டுத் தெரிஞ்சு அவருடைய ஸ்டைலில் பண்ணுவார்.அவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம். ‘எனக்கு நடிக்கத் தெரியும். அதுக்கு நீங்க சம்பளம் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு என்ன வேணுமோ அதைத் தருவது என் டூட்டி’ன்னு சொல்வார்.
அவர் என்னிடம் சொன்ன வார்த்தை இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கு. ‘சீக்கிரம் படம் எடுத்து முடிங்க சார். இதுதான் என்னுடைய கடைசிப் படம். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆன்மீகத்துல முழுமையாக இறங்கப் போறேன்’னு சொன்னார்.
இந்தப் படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் கோயில் கட்டியதாக சொன்னவர், கும்பாபிஷேகத்துக்கு அழைப்பும் கொடுத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் அவரை வெச்சு எடுக்க நினைத்தேன். ஆனால், அவர் இப்போது இல்லை என்று நினைக்கும்போது மனசு தவிக்கும். தினமும் அவர் ஆத்மா என்னைப் பார்த்துப்பேசுவதுபோல் இருக்கும். கோவை சரளா, இளவரசன், தேவதர்ஷினி, ‘போர்த்தொழில்’ சுனில் சுகதா, ஒய்.ஜி.மகேந்திரன், கல்பனா ராகவேந்தர், தயா பிரசாத், ஈஸ்வர் கிருஷ்ணா, வெப் சீரிஸ் புகழ் சாருகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.பாடல்கள் எப்படி வந்துள்ளது?
பிரமாதமாக வந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்த செபஸ்டின் ரோசரியோ இசையமைத்துள்ளார். பாடல்களை தாமரை, மோகன் ராஜன் எழுதியுள்ளார்கள். சித் ராம் பாடிய பாடல் மெய்சிலிர்க்க வைக்குமளவுக்கு அருமையாக வந்துள்ளது. இங்கிலீஷ் ஆல்பம் பாடலை கல்பனா ராகவேந்தர் எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். அநியன் சித்ரசாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பாளர் கல்பனா மேடம் மிகச்சிறந்த பாடகி மட்டுமல்ல, சினிமாவில் அவர் ஆல் ரவுண்டர். கதை சொன்னபோது ஆர்வத்துடன் தயாரிக்க முன்வந்தார். சோனி பிக்சர்ஸ் இந்தியாவில் மிகக் குறைவாக படங்களை வெளியிட்டுள்ளது. ‘அமரன்’ படத்துக்குப் பிறகு எங்கள் படத்தை வெளியிடுகிறார்கள். அதுவே படத்தின் தரமாக சொல்லலாம். டேனியல் பாலாஜியின் கடைசி படத்தைக் காண ரசிகர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
எஸ்.ராஜா
|