கவனமாகக் குடி... நிதானத்துடன் இரு... உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து...
உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் சோபர் கியூரியஸ் இயக்கம்...
‘குடி, குடியைக் கெடுக்கும், மது அருந்துதல் உடல் நலத்திற்குத் தீங்கானது, மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு’ எனகுடிப்பழக்கத்தின் ஆபத்துகள் பற்றிய விளம்பரங்கள் நிறைய பார்த்திருப்போம்.
இருந்தும் குடிப்பழக்கத்திலிருந்து ஒருவர் மீண்டு வருவது என்பது ரொம்பவே சவாலான விஷயம். குடி என்பது பழக்கம் அல்ல,அது ஒரு நோய் என்றே டாக்டர்களும் குறிப்பிடுகின்றனர்.
 இதுமட்டுமல்ல, மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சம் பேர் உலகம் முழுவதும் இறப்பதாக 2019ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. குறிப்பாக இந்த இறப்பு எண்ணிக்கை ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களில் அதிக அளவில் இருப்பதாகச் சொல்கிறது. அதனால்தான் இன்றைய தலைமுறையினர் குடிப்பழக்கத்தின் தீங்கு பற்றி நிறைய விழிப்புணர்வு கொண்டுள்ளனர்.

குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு இளவயது மரணம் என்பது அதிகரித்து வருகிறது. இதயநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் எனப் பல்வேறு நோய்களுக்கு இளம் தலைமுறையினர் ஆட்பட்டு வருகின்றனர்.
இதற்கு மது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இந்நிலையிலேயே இன்றைய ஜென் இசட் தலைமுறையினர், ‘சோபர் கியூரியஸ்’ எனும் கலாசாரம் நோக்கி நகர்ந்து வருகின்றனர். இன்று உலகம் முழுவதிலும், இந்த ‘சோபர் கியூரியஸ்’ இயக்கம் (Sober Curious) ஓர் உற்சாகமான கலாசார ட்ரெண்டாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. அதென்ன சோபர் கியூரியஸ் இயக்கம்?
சோபர் கியூரியஸ் என்ற இந்தச் சொல் இங்கிலாந்தைச் சேர்ந்த லைஃப்ஸ்டைல் எழுத்தாளர் ரூபி வாரிங்டன் எழுதிய ‘சோபர் கியூரியஸ்’ புத்தகத்தின் தலைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த வார்த்தையை உருவாக்கியவர் ரூபிதான்.
அவர் தன் நூலில், மது ஒருவர் வாழ்க்கையில் வகிக்கும் பங்கை பற்றி சிந்திக்கச் சொல்கிறார். நம்முடைய வாழ்க்கை முறை எப்படி மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறார். இதனால் இந்தச் சொல் இளையோர் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் பிரபலமானது. இப்போது ஓர் இயக்கமாக வளர்ந்து வருகிறது.
ஆங்கிலத்தில் ‘சோபர்’ என்றால் நிதானம் என்று அர்த்தம். ‘கியூரியஸ்’ என்பது ஆர்வத்தைக் குறிக்கிறது. அதாவது மனநிறைவாகக் குடித்து நிதானத்துடன் இருப்பது எனச் சொல்லப் படுகிறது.
இப்படி நிதானமாக இருக்கும் போக்கில் ஆர்வத்தை வரவழைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இந்த இயக்கம்.குறிப்பாக இந்த ‘நிதான இயக்கம்’ மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அதிக கவனத்துடன் குடிப்பதை வலியுறுத்துகிறது. குறைவாகக் குடிக்க ஊக்கப்படுத்துகிறது. மது அருந்துவதைக் கட்டுப்படுத்தி உடல் மற்றும் மனநலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளச் சொல்கிறது.
தவிர, கவனமாக இருப்பதன் மூலமாக ஒருகட்டத்தில் குடிப்பழக்கத்தை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்தவோ ஒருவரால் முடியும் என்கிறது. இது அந்தத் தனிநபரைப்
பொறுத்தது. இந்த சோபர் கியூரியஸ் வாழ்க்கைமுறையில் மதுவைத் தவிர்க்க அல்லது குறைக்க பல்வேறு விஷயங்களும் சொல்லப்படுகின்றன.
இதில் மது அருந்துவதை சில காலகட்டங்களுக்கு நிறுத்துதல், வாரத்தில் சில நாட்கள் மது அருந்தாமல் இருத்தல், விருந்து, பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளின்போது குறைவாகக் குடித்தல் அல்லது குடிப்பதைத் தவிர்த்தல், மதுவின் மீது கவனத்தைச் செலுத்தாமல் வேறு வேலைகளைச் செய்வதில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை எடுத்துரைக்கிறது.
இதன்வழியாக பல நோய்களின் அபாயங்களைக் குறைக்கமுடியும் என்கிறது இந்த இயக்கம். உதாணத்திற்கு தொண்டை, வாய், கல்லீரல், குடல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். இதயநோய், பக்கவாதம், கல்லீரல் நோய், கணைய அழற்சி, இரைப்பை, குடல் நோய் உள்ளிட்ட நோய்களின் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்கிறது.
இதனாலேயே இன்றைய இளம் தலைமுறையினர் இந்த ட்ரெண்டை உள்வாங்கி இதற்குள் தங்களைப் புகுத்திக் கொண்டு வருகின்றனர். மனநிறைவுடன் குடித்து மனதையும், உடலையும் ஆரோக்கியமாக பேணும் வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். பலர் மதுவுக்கு பதிலாக மாற்று பானங்களை நோக்கியும் நகர்ந்து வருகின்றனர். மாற்று பானங்கள்...
கடந்த 2010ம் ஆண்டிலிருந்தே உலகெங்கிலும் குடிப்பதை விடுவது அல்லது குறைவாகக் குடிப்பது என்ற கருத்தாக்கம் பரவி வருகிறது. இதனால், நான் -ஆல்கஹாலிக் பானங்கள் ட்ரெண்டாயின.
குறிப்பாக ஆல்கஹால் இல்லாத பீர்கள் வரவேற்பு பெற்றன. தற்போது ஆல்கஹால் இல்லாத ஜின், விஸ்கி, ரம், ஓட்கா உள்ளிட்ட பானங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கான மாற்றாக முன்வைக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவின் முதல் சோபர் விஸ்கி, ஜின், ரம், ஓட்கா உள்ளிட்டவை பயங்கர ட்ரெண்டாகி உள்ளன. இவை ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள ஆல்கஹால் இல்லாத இஞ்சி ஏல், சோடா அல்லது மாக்டெயில் பானங்கள் போல கிடையாது.
இந்த ஆல்கஹால் அல்லாத ஜீரோ-ப்ரூஃப் ஸ்பிரிட்கள், மதுபானங்களின் சுவையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்படுவதுதான் ஹைலைட். இதனால் மதுவை குறைக்க நினைப்பவர்கள் அல்லது மதுப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட நினைப்பவர்கள் இந்த சோபர் பானங்களை விருப்பமாக எடுத்துக் கொள்கின்றனர்.
இளம் தலைமுறையினரோ சோபர் பானங்களையே முதல் சாய்ஸாக வைத்துள்ளனர். இந்த ஜீரோ-ப்ரூஃப் ஆல்கஹால் துளசி, அஸ்வகந்தா, கிரீன் டீ, ஏஞ்சலிகா வேர், அர்ஜுனா மர வேர் உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் சில தாவரவியல் பொருட்களைக் கொண்டு வடிகட்டுதல் முறையில் தயாரிக்கபடுவதாகச் சொல்லப்படுகிறது.
இதன்வழியே மதுவின் சுவையைக் குடிப்பவருக்கு வழங்குகிறது. ஆனால், எந்த உடல் பக்கவிளைவுகளோ அல்லது ஹேங்ஓவரோ இதனால் ஏற்படுவதில்லை. மாறாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேண முடியும் என்கின்றனர். இதனாலேயே சோபர் கியூரியஸ் ட்ரெண்டை நோக்கி உலகம் நகர்ந்து வருகிறது. குறிப்பாக இன்றைய ஜென் இசட் தலைமுறையினர் மது உடல்நலத்திற்குத் தீங்கானது என்பதைப் புரிந்துகொண்டு சோபர் கியூரியஸ் ட்ரெண்டை ஆரத்தழுவி வரவேற்கின்றனர்.
பேராச்சி கண்ணன்
|