இந்தியாவின் முதல் பெண் ஃபார்முலா 4 ரேஸர்!
உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு கார் பந்தயம், ஃபார்முலா ஒன். பெரும்பாலும் வெளிநாட்டு வீரர்கள்தான் ஃபார்முலா ஒன்னில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த கார் பந்தயத்துக்குள் நுழைவதற்கான வாயில்தான், ஃபார்முலா 4. பத்து வருடங்களுக்கு முன்பு ஜூனியர் ரேஸர்களுக்காக உருவாக்கப்பட்ட கார் பந்தயம் இது.  சர்வதேச அளவில் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடப்பதில்லை. ஆனால், சர்வதேச கார் பந்தய விதிமுறைகளைப் பின்பற்றி, உள் நாட்டுக்குள் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. நல்ல ரேஸர்களை அடையாளம் காண்பதற்கான போட்டியாகவும் இது கருதப்படுகிறது. 
மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் ஒரு போட்டி, கார் பந்தயம். இந்தியா போன்ற நாடுகளில் சொல்லவே வேண்டாம்.
இந்நிலையில் ஸ்ரியா லோகியா என்ற பெண், ஃபார்முலா 4 கார் பந்தயங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறார். இந்தியாவில் ஃபார்முலா 4 ரேஸில் போட்டியிடும் முதல் பெண் ரேஸர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் ஸ்ரியா. மட்டுமல்ல, இந்தியாவின் இளம் பெண் ஃபார்முலா 4 ரேஸரும் இவரே.
ஆம்; ஸ்ரியாவின் வயது 16 தான். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுந்தர் நகரில் பிறந்து, வளர்ந்தவர், ஸ்ரியா லோகியா. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹோம் ஸ்கூலிங் முறையில், அறிவியலை முதன்மை பாடமாக எடுத்து, 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே நேரத்தில் தனது தீவிர விருப்பமான கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். படிப்பையும், ரேஸையும் சமமாக நிர்வகிக்கிறார். இப்போது ‘ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ்’ அணியின் ரேஸிங் டிரைவராக இருக்கிறார்.
ஒன்பது வயதிலேயே ஸ்போர்ட்ஸ் கார்களின் ஸ்டியரிங்கைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார் ஸ்ரியா. ‘ரோடக்ஸ் மேக்ஸ் இந்தியா கார்ட்டிங் சாம்பியன்ஷிப்’ போட்டிதான் ஸ்ரியா கலந்துகொண்ட முதல் கார் பந்தயம். இதில் நான்காவது இடத்தைப் பிடித்தார். பிறகு பல்வேறு விதமான கார் பந்தயங்களில் பங்கேற்று, முப்பதுக்கும் மேற்பட்ட தடவை முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறார். தவிர, ஏராளமான விருதுகளையும் தன்வசமாக்கியிருக்கிறார்.
ஃபார்முலா ஒன் ரேஸர் ஆக வேண்டும் என்பதுதான் ஸ்ரியாவின் கனவு. கார் ஓட்டும்போது வேகமாகவும், அதே நேரத்தில் துல்லியத்துடனும் செயல்படக்கூடியவர் என்று ரேஸிங் நிபுணர்கள் ஸ்ரியாவைப் பாராட்டுகின்றனர். தொடந்து சிறப்பாகவும், அர்ப்பணிப்புடனும் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார் ஸ்ரியா. இந்த அர்ப்பணிப்புக்கு உண்டான அங்கீகாரங்கள் அவரைத் தேடி வருகின்றன.
ஆம்; இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸில் முக்கிய அங்கம் வகிக்கும் ‘ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு, ‘மோட்டார் ஸ்போர்ட்ஸில் சிறந்த பெண்’ என்ற விருதை வழங்கி, ஸ்ரியாவின் திறமையை அங்கீகரித்துள்ளது.தவிர, மோட்டார் ஸ்போர்ட்ஸில் சிறப்பாக செயல்பட்டு வருவதை அங்கீகரிக்கும் விதமாக, 2022-ம் வருடம் ஸ்ரியாவுக்கு இந்தியக் குழந்தைகளுக்கான உயரிய விருதான ‘பிரதான் மந்த்ரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ கிடைத்தது.
‘‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ரேஸராக விரும்பும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக நிற்கிறார் ஸ்ரியா...’’ என்று ஸ்ரியாவைப் புகழ்கின்றனர். கார் பந்தயம் மட்டுமல்லாமல், மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வமுடையவர் ஸ்ரியா. கூடைப்பந்து, பேட்மின்டன், பிஸ்டல் ஷூட்டிங், சைக்கிளிங் என பன்முக விளையாட்டு ஆளுமையாக வலம் வருகிறார்.
ஃபார்முலா 4 பந்தயத்தை தவிர்த்து, ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா இ, வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் என பல வித போட்டிகளுக்குத் தன் ஆதரவைத் தெரிவிப்பதோடு, அவற்றில் பங்கேற்க தன்னை தயார்படுத்தி யும்வருகிறார்.
த.சக்திவேல்
|