Must Watch
 ஒரு ஜாதி ஜாதகம் சமீபத்தில் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘ஒரு ஜாதி ஜாதகம்’. வடக்கு மலபாரைச் சேர்ந்த இளைஞன், ஜெயேஷ். கைரேகை ஜோதிடத்தில் கைதேர்ந்த பெண்ணான சினிதாவைச் சந்திக்கிறான் ஜெயேஷ். அவனுடைய கைரேகையைப் பார்த்துவிட்டு, “வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் நீ இருக்கிறாய்...” என்று சினிதா சொல்கிறாள். அது ஜெயேஷுக்கு வியப்பளிக்கிறது.
இதுபோக ‘நீ இன்னும் நிறைய அவமானங்களைச் சந்திப்பாய். அது இன்னும் உன் வாழ்க்கையை மேலும் பிரச்னைக்குள்ளாக்கும்’ என்றும் சொல்ல, அதிர்ந்து போகிறான் ஜெயேஷ். சினிதா சொல்வதைப் போல ஒவ்வொன்றாக ஜெயேஷின் வாழ்க்கையில் நடக்க ஆரம்பிக்கிறது. அவன் சந்தித்த ஒவ்வொரு இளம் பெண்ணும் பல்வேறு சிக்கல்களை ஜெயேஷின் வாழ்க்கையில் கொண்டு வருகின்றனர்.
ஜோதிடம் சொன்னது உண்மையானதா? ஜோதிடத்தை வென்று ஜெயேஷ் மீண்டு வந்தானா என்பதே மீதிக்கதை.கதையைத் தாண்டி, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் தொடர் சம்பவங்களைக் கோர்வையாக்கி, திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. வித்தியாசமான ரோலில் கலக்கியிருக்கிறார் வினீத் சீனிவாசன். படத்தின் இயக்குநர் மோகனன்.
த லைஃப் லிஸ்ட்
‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் ஆங்கிலப்பட்ம், ‘த லைஃப் லிஸ்ட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிசபெத், சாவின் விளிம்பில் இருக்கிறாள். மகள் அலெக்ஸுக்கு உண்டான கடமையைத் தன்னால் செய்ய முடியாமல் போகுமோ என்ற வருத்தமும் எலிசபெத்தை வாட்டுகிறது.
இந்நிலையில் தனது நிறுவனமான ரோஸ் காஸ்மெட்டிக்ஸில் இனிமேல் வேலை பார்க்க வேண்டாம் என்று அலெக்ஸிடம் சொல்கிறாள். அத்துடன் தனது மருமகளை ரோஸ் காஸ்மெட்டிக்ஸுக்கு தலைமைச் செயல் அதிகாரியாக்குகிறாள். எலிசபெத்தின் ஒவ்வொரு செயலும் அலெக்ஸுக்கு புதிதாக இருக்கிறது. இதுபோக குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நிறுவனத்திலிருந்து 20 சதவீத பங்கு கிடைக்கும் என்று சொல்கிறாள் எலிசபெத்.
ஆனால், அலெக்ஸுக்கு சில டாஸ்க்குகள் இருக்கின்றன. அதை முடித்தால் மட்டுமே குடும்பச் சொத்து கிடைக்கும். அந்த டாஸ்க்குகள் என்ன? அலெக்ஸ் அதை வெற்றிகரமாக செய்து முடித்தாளா என்பதை ரொமான்டிக்கும், காமெடியும் கலந்து சொல்லியிருக்கிறது திரைக்கதை. ஜாலியாக ஒரு பொழுதுபோக்கு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப்படம். இதன் இயக்குநர் ஆடம் ப்ரூக்ஸ்.
முபாசா: த லயன் கிங்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த அனிமேஷன் படம், ‘முபாசா : த லயன் கிங்’. இப்போது ‘ஜியோ ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. காட்டின் ராஜாவாக சிம்பா பதவியேற்ற பிறகு, சிம்பா - நலா தம்பதிக்கு கியாரா என்ற மகள் பிறக்கிறாள். கியாராவிடம் அவளுடைய தாத்தாவான முபாசாவின் கதையைப் பற்றிச் சொல்கிறார் ரபிகி.
முபாசா குட்டிச் சிங்கமாக இருந்தபோதே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அறிமுகமே இல்லாத ஓர் இடத்தை அடைகிறான். அந்த இடத்தில் முபாசாவுக்கு ஆதரவும் கிடைக்கிறது; எதிர்ப்புகளும் கிளம்புகின்றன. அனாதையாகும் முபாசா, எப்படி காட்டுக்கே ராஜாவாக மாறுகிறார் என்பதே மீதிக்கதை.
காட்டுக்குள் சென்று நேரில் விலங்குகளைப் பார்ப்பதைப் போன்ற ஓர் உணர்வைத் தருகிறது இந்தப் படம். அந்த அளவுக்கு தத்ரூபமாக விலங்குகளை அனிமேஷனில் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் கண்டு களிப்பதற்கு உகந்தது இப்படம். இதன் இயக்குநர் பேரி ஜென்கின்ஸ்.
தேவா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்திப்படம், ‘தேவா’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. மும்பை காவல்துறையில் வேலை செய்துவரும் இன்ஸ்பெக்டர், தேவ் ஆம்ரே.
கடும் கோபக்காரனான தேவ், ஒரு விபத்தில் சிக்கி நினைவை இழக்கிறார். விபத்துக்கு முன்பு டிசிபி ஃபர்ஹான் கானுடனான போன் உரையாடலில் இருந்தார் தேவ். முக்கியமான ஒரு கொலைக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட கொலைகாரனைக் கண்டுபிடித்துவிட்டதாக ஃபர்ஹானுடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான் விபத்து நடக்கிறது. கொலையாளி யார் என்று சொல்வதற்கு முன்பே விபத்தில் சிக்குகிறார் தேவ். விபத்தினால் அவருக்கு ஞாபக மறதி ஏற்பட, கொலையாளியை நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.
யார் அந்த கொலைகாரன்? தேவ் ஆம்ரேவுக்கு நினைவு திரும்பியதா?
அந்தக் கொலைக்கும் தேவ் ஆம்ரேவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது திரைக்கதை. சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி, பெரிய ஹிட் அடித்த படம் ‘மும்பை போலீஸ்’. இதன் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்தப் படம். இதன் இயக்குநர் ரோஸன் ஆண்ட்ரூஸ்.
தொகுப்பு: த.சக்திவேல்
|