கேரக்டர் ஸ்கெட்ச்தான் கதையை வித்யாசப்படுத்தும்!



The Making Of ‘வீர தீர சூர’னை விளக்குகிறார் இயக்குநர் அருண்குமார்

கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களுக்கு என ஒரு டெம்ப்ளேட் உண்டு. அதற்கேற்பவே எல்லா மொழிகளிலும் ஆக்‌ஷன் கமர்ஷியல் படங்களை மாஸ் ஹீரோக்களை வைத்து இயக்குநர்கள் எடுக்கிறார்கள்.இச்சூழலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சிப் பூ பூப்பது போல் எப்பொழுதாவது ஒரு மாஸ் கமர்ஷியல் படம் வரும். அதன் திரைக்கதை திரையுலகையே புரட்டிப் போடும். 
டிரெண்ட் செட்டராக மாறும்.‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நாயகன்’, ‘பாட்ஷா’ படங்கள் எல்லாம் இதற்கு உதாரணங்கள். அப்படி சமீபத்தில் வெளியான ‘வீர தீர சூரன்’ ஸ்கிரிப்டிலும் கேரக்டர் ஸ்கெட்சிலும் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

எப்படி இது சாத்தியமானது... இயக்குநர் எஸ்யு.அருண்குமார் இப்படியொரு திரைக்கதைக்காக எந்தளவு மெனக்கெட்டார்... விபரம் அறிய அவரை சந்தித்தோம். ‘‘இயல்பா கதை சொல்வதுதான் எனக்குப் பிடிக்கும். இன்னைக்கு இருக்கற டிரெண்ட், இப்ப நடக்குற சம்பவத்தை அடிப்படையாக வைத்து எப்பவுமே நான் கதை எழுத மாட்டேன்.  
அதனால்தான் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இப்படி எந்த டிஜிட்டல் உலகத்திலும் நான் கிடையாது...’’ இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தரா என துவக்கத்திலேயே நமக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் இயக்குநர் எஸ்யு.அருண்குமார்.

‘வீரதீர சூரன்’... இந்த தலைப்பு எங்கே எப்படி உருவானது?

கதை எழுதி முடித்தபிறகு ரொம்ப நாள் தலைப்புக்காகதான் யோசிச்சுகிட்டே இருந்தேன். முதலில் விக்ரம் சாருடைய பெயர் காளி என்கிற பெயரை தலைப்பா வைக்கலாம்னு முடிவு செய்தேன். பிறகுதான் அது ஏற்கனவே பயன்படுத்தியாச்சுன்னு தெரிஞ்சது. அப்பறம் இந்த ‘வீர தீர சூரன்’ தலைப்பு வச்சோம்.

இந்தக் கதைக்கான இன்ஸ்பிரேஷன் எது?

ஓர் இரவில் நடக்கும் கதை. அடுத்து உயிருக்கான போராட்டம். இந்த இரண்டையும் மையமாக வைத்துதான் ஒரு கதை உருவாக்கணும்னு ஆரம்பிச்சேன். தொடர்ந்து நமக்கு நடக்கிற பிரச்னைக்குள் மூணாவதாக ஒருத்தனை கூட்டிட்டு வந்தால் என்ன ஆகும்? ஒருவேளை பிரச்னை அவனைச் சூழத் துவங்கினா அவனைக் காப்பாத்திக்க அவன் என்ன செய்வான்? இந்தக் கேள்விகள் எல்லாம் சேர்ந்துதான் இந்தப் படத்தின் கதை.

பாகம் 2 முதலில்  வெளியிட்டால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எப்போது உங்களுக்கு வந்தது?

இந்தப் படத்தை தனியாக விட்டாலே மக்கள் புரிஞ்சிக்கிற மாதிரிதான் நான் கதை உருவாக்கி இருந்தேன். விக்ரம் சார்தான் இரண்டு பாகங்கள் அதில் முதலில் இரண்டாவது பாகம் என்கிற ஆலோசனை கொடுத்தார். 

அப்போதான் இந்தக் கதையை பெரிதாக்கி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஆழமான பின்னணி சேர்த்தேன்.‘சேதுபதி’ திரைப்படம் கமர்ஷியல்தான்... ஆனாலும் அந்த போலீஸ் ஆபீஸர் கதாபாத்திரத்திலேயே ஏராளமான லேயர்களை பார்க்க முடியும்... உங்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச் பத்தி சொல்லுங்க..?

நேற்று பிறந்த குழந்தை கூட வெறும் குழந்தையாக இல்லாம மகன், பேரன், மாணவன், நண்பன், உறவுக்காரன் இப்படி பல லேயர்களாதான் ஒரு மனிதன் இருப்பான். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏராளமான பொறுப்பு இருக்கு. 

ஒவ்வொரு பொறுப்பும் ஒரு குணம் அல்லது ஒரு தனி கேரக்டர். ஒரு அத்தை பையனா இருக்கணும்னா கூட அது ஒரு தனி கேரக்டர்தான். இந்த லேயர்களை நான் அதிகம் மனுஷங்களுக்குள்ள படிப்பேன். அப்படித்தான் என்னுடைய கேரக்டரும் இருக்கும்.

உதாரணத்துக்கு துஷாரா கேரக்டரை எடுத்துக்கிட்டா ஆரம்பத்தில் ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளுக்கு தாய் இவ்வளவுதான் அறிமுகம் கொடுத்திருப்பேன். போகப் போக அவங்க கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமா விரிவாக்கி ஒரு கட்டத்தில் துஷாராவுக்கு இரண்டாவது கல்யாணமா என்கிற கேள்விக்குறிவுடன் அந்த கேரக்டருக்கு கமா வெச்சிருப்பேன்.
அது போலதான் விக்ரம் சார், எஸ்.ஜே.சூர்யா சார், சுராஜ் சார் இப்படி எல்லோருக்குமே ஒரு பின்னணி கதை இருக்கும்.

சினிமா இயல்பையும் தாண்டிய எதார்த்த படமாக்கல் எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது..?

நான் வளர்ந்த சூழல் அப்படி. மதுரை பரவைதான் எனக்கு சொந்த ஊர். வேலை, வேலை முடிந்தவுடன் வீடு... அங்கே குடும்பம், சொந்த பந்தம் இப்படி நேருக்கு நேர் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்து பேசுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  

அதே சமயம் கூப்பிட ஒரு போன், அனுப்ப மெசேஜ் இருக்கு. அது போதும்னு நினைக்கிறேன். வேற எந்த பாரமும் நான் எடுத்துக்க விரும்பலை.உங்கள் படங்களில் பெரும்பாலும் புதுமுகங்களே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்...

 எப்படி அந்தத் திறமையை வாங்குகிறீர்கள்?

கதைக்கு தேர்வு செய்யும் போதே இயல்பாகவே நடிக்கக்கூடிய நடிகர்களைத்தான் தேர்வு செய்வேன். மெயின் கதாபாத்திரமா பெர்ஃபாமன்சை சரியா கொடுக்கக்கூடிய நடிகர்களை அந்தந்த கேரக்டருக்கு தேர்வு செய்து பொருத்திட்டாலே பாதிவேலை முடிஞ்சிடும். 

தொடர்ந்து அடுத்த லெவலில் இருக்கற கேரக்டர்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டு நடிகர்கள் தேர்வு செய்யணும். சில நிமிடங்கள் வந்தால் கூட அவங்க கேரக்டர் மனதில் நிற்கணும்னு நினைப்பேன்.

இப்ப வரையிலும் ‘சித்தா’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் பேசப்படுது. காரணம், என்னதான் நான் விளக்கமா எழுதி இருந்தாலும் அந்த நடிகர் மெனக்கெட்டதால்தான்.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா சார் கேரக்டர் ஒரு சாதாரண ஏரியா இன்ஸ்பெக்டர் அல்லது ஓர் உயர் அதிகாரி அவ்வளவுதான். கதையிலும் பெரிதா கொடூரமான தாக்குதலோ அல்லது பன்ச்சோ எதுவும் இருக்காது.

ஆனால், அவருடைய பாடி லாங்குவேஜ், அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் இப்படியான கேள்விகளை உருவாக்குற விதமா அவர் நடிப்பை கொடுத்த காரணம்தான் அந்த கேரக்டர் மேல நமக்கு ஒருவித பயமும், கேள்விகளும் படம் முழுக்க இருந்துகிட்டே இருக்க காரணம்.

படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நடிப்புக்காகவே தனி வொர்க் ஷாப் நடத்துறதுண்டு. அதிலேயே எனக்கு என்ன தேவை... இந்தக் கதைக்கு என்ன தேவை என்பதை புரிய வச்சிடுவேன்.
அதேபோல் இயல்பா நடிக்கக்கூடிய புதுமுகங்கள்கிட்ட ரொம்ப சுலபமா வேலை வாங்கிடலாம். அவங்களுக்கு சினிமா பற்றி எந்த ஐடியாவும் இருக்காது. சொல்வதைக் கேட்டு அப்படியே நடிப்பாங்க.

இந்தக் கதையை எப்படி வித்தியாசமான திரைக்கதையாக மாற்றினீங்க?

புத்தகங்கள்... எந்தப் புத்தகங்களையும் வெறும் கதையாக படிக்க மாட்டேன். அந்த எழுத்தாளரின் குணத்தையும் அவருடைய வாழ்வியலையும் சேர்த்துதான் படிப்பேன்.
எந்தக் கதை எழுதினாலும் எப்பவோ யாரோ அதை ஒரு சினிமாவா எடுத்திருப்பாங்க. 

நாம சொல்கிற அத்தனை கதைக் கும் அதற்கு ஒப்பிடக்கூடிய இன்னொரு கதை ஏற்கனவே இருக்கும்.முதல் படம் இயக்க ஆரம்பிச்சதிலிருந்து எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சினிமா வேலை மட்டும்தான். ஒருவேளை உணவு டெலிவரி, போஸ்ட்மேன் மாதிரியான வேலைகள் பார்த்திருந்தால் கூட எனக்கு நிறைய கதைகள் கிடைச்சிருக்கும்.

நமக்கு இருக்கிற இந்தக் களத்தில் ஒரு கதை சொல்லணும். ஆனால், அந்தக் கதை சொல்லும் விதத்தில் மத்த கதையிலிருந்து வேறுபடணும். இதை அடிப்படையாக வெச்சு கதை எழுத ஆரம்பிப்பேன். இதற்கு பெரிய பலமா இருப்பது புத்தகங்கள்தான். புத்தகங்களில் உள்ள கேரக்டர்களுக்கு ஆழமான பின்னணி நிலவரம் இருக்கும். அப்படிதான் நானும் ஒரு கேரக்டரை டிசைன் செய்றேன்.

என்னைப் பொருத்தவரை ஒரு கதையை கதாபாத்திரங்களின் அடிப்படையில் சொன்னால் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். அதேபோல எப்பேர்ப்பட்ட மனிதரா இருந்தாலும் அவருக்குள்ள ஒரு கிரே ஷேட் இருக்கும். இங்க நல்லவன் கெட்டவன்னு யாருமில்லை. எல்லாமே ஷேட்ஸ்தான். இதை மைண்ட்ல வைச்சு கேரக்டரை டிசைன் பண்ணி, டிராவல் பண்ணினா கதையும் திரைக்கதையும் கிடைக்கும். அது வித்தியாசமா ஃப்ரெஷ் ஆகவும் இருக்கும்.

நம்மையே எடுத்துப்போம்... கொரோனா காலத்தில் யோசிக்காம பத்து பாக்கெட் நூடுல்ஸ் வாங்கிப் போட்டிருப்போம். ரெண்டு பாக்கெட் அடுத்தவனுக்குத் தேவைப்படுமேனு கூட யோசிக்கலை. ஆபத்துன்னு வந்தா முதலில் நம் உயிர், பிறகு நம் குடும்பம், இதற்குதான் ஒரு மனுஷன் முக்கியத்துவம் கொடுப்பான். சமூகத்தில் ஹீரோ, வில்லன் இது எல்லாமே இதன் அடிப்படையிலேதான் உருவாகுது.

இரவு நேர கதை சொல்லல்... ஆனால், எங்கேயும் இரவு குழப்பவில்லை... எப்படி?

அதற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்குதான் நன்றி சொல்லணும். ஒரு திரைப்படம் முதலில் கண்ணுக்கு விருந்தா இருக்கணும். காதையும் , கண்களையும் ஒரு காட்சி இடைஞ்சல் செய்தா அது மூளையை இடைஞ்சல் செய்யும். என்னுடைய காட்சி அமைப்பு பார்வையாளர்கள் மூளையை இடைஞ்சல் செய்யக்கூடாது. 

அது பேய் படமானாலும் சரி. எனக்கு லைட்டிங் அறிவு கிடையாது. இந்தக் காட்சி இப்படி இருக்கணும்... இதைப் பார்க்கும் பொழுது இவ்வளவு துல்லியமா இருக்கணும்னு மட்டும்தான் தேனி ஈஸ்வர் சாருக்கு விளக்கினேன். இதற்கு ஏற்ப லைட்டிங், டோன் செட் செய்தார்.

அதேபோல மொத்த படத்தையும் எடுத்துட்டு எடிட்டர்கிட்ட கொடுக்க மாட்டேன். போதுமான அளவு எடிட் செய்து ஒரு கதையா உருவாக்கின பிறகுதான் எடிட்டிங் டேபிளுக்கு கொண்டு போவேன்.

இதுல இன்னும் ஷார்ப் கட் கொடுத்து எடிட்டிங் அறிவுடன் மேற்கொண்டு அழகு சேர்த்தார் எடிட்டர் பிரசன்னா ஜிகே. காட்சிகளுக்கு இவ்வளவு யோசிக்கும் போது இசையைப் பற்றி சொல்லாம இருக்க முடியுமா! கதைக்கு மேலும் உயிர் கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ். அவருடைய பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு இன்னொரு கேரக்டரா அமைஞ்சது.

விக்ரம் எனும் நடிகன் பற்றி சொல்லுங்க..?

ஒரு காட்சி... போலீஸ் ஸ்டேஷனுக்குள் வெறும் ட்ரவுசருடன் விக்ரம் சார் நடந்து வருகிற மாதிரி எழுதி இருப்பேன். வேற நடிகரா இருந்தா இப்படி ஒரு காட்சியை யோசிச்சிருக்க மாட்டேன். விக்ரம் சார் என்பதால்... அவர் நடிப்பு மேல் நம்பிக்கை இருந்ததால்... இந்தக் காட்சியை உருவாக்கினேன்.

மனிதர் கொஞ்சம் கூட யோசிக்காம அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தார். இவ்வளவு படத்துக்கு பிறகும் கூட தன்னை நிரூபிக்க ஓடிக்கிட்டே இருக்கும் நடிகர் அவர். அவரால்தான் இந்தப் படம் ரெண்டு பாகங்களா மாறி இன்னைக்கு மிகப்பெரும் வரவேற்பு அடைஞ்சிருக்கு.

எதிர்காலத்தில் ரிலீசாகப் போகும் முதல் பாகத்தில் என்ன சர்ப்ரைஸ் வைச்சிருக்கீங்க..?

முதலில் சில நாட்கள் ரெஸ்ட். பிறகுதான் அடுத்த பாக வேலைகள். அடுத்த பாகத்தில் துஷாரா கேரக்டரும், திலீப் கேரக்டரும் விரிவா, முக்கியத்துவமா இருக்கும். அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும். 

என் தம்பிதான் வெங்கட் கேரக்டர் செய்திருப்பார். அவரும் என்னைப் போல்தான். வேலை முடிஞ்சா நாங்க ரெண்டு பேரும் குடும்பத்துடன் ஐக்கியம் ஆகிடுவோம். டிரெண்ட் தெரிஞ்சுக்க என்னுடைய அசிஸ்டெண்ட் டைரக்டர் குழு இருக்கு. இது போதும்.

ஷாலினி நியூட்டன்