10ம் நூற்றாண்டு கோயில்களை ஆவணப்படுத்தும் பெண் புகைப்படக் கலைஞர்!
புகைப்படக்கலையில் பெரும்பாலும் இயற்கை, வனவிலங்குகள், பறவைகள், காடுகள் என்றே பலரும் பயணிப்பார்கள். வெகுசிலரே அரிதாக சிற்பங்கள், கோயில்கள், பழமை வாய்ந்த கட்டடக் கலைகள், மானுடம் சார்ந்த விஷயங்கள் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாகக் கவனப்படுத்துவார்கள்.  அப்படி அரிதானவராகவும் தனித்துவமிக்க புகைப்படக் கலைஞராகவும் மிளிர்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த திலகவதி. ஏனெனில் தமிழ்நாட்டின் பத்தாம் நூற்றாண்டு கோயில்களை மட்டுமே புகைப்படங்களாக ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் அரிய புகைப்படக் கலைஞர் இவர். 
ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள குடைவரைக் கோயில்கள் அனைத்தையும் தன் கேமரா வழியே ஆவணப்படுத்தி, தமிழக தொல்லியல் துறையின் அளப்பரிய பாராட்டைப் பெற்றவர். இப்போது பத்தாம் நூற்றாண்டு கோயில்களைத் தேடித் தேடித் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.  ‘‘ஆரம்பத்துல டிராவல் போட்டோகிராபிதான் என் விருப்பமாக இருந்தது. ஆனா, குடைவரைக் கோயில்கள் பத்தி எப்போ தெரியவந்ததோ அப்போதே என் எண்ணம் மாறிடுச்சு. எல்லாரையும்போலில்லாமல் புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யலாம்னு நினைச்சேன்.  அப்படி ஆரம்பிச்ச என் பயணம் இப்ப 8, 9, 10ம் நூற்றாண்டுகள்ல கட்டப்பட்ட கோயில்களை ஆவணப்படுத்தும் நீண்ட நெடிய பயணமா மாறியிருக்கு...’’ என உற்சாகம் பொங்கப் பேசுகிறார் 34 வயதே நிரம்பிய திலகவதி. ‘‘சொந்த ஊர் அரக்கோணம். திருமணமாகி ஈரோட்டுல செட்டிலாகிட்டோம். கணவர் ஆறுமுகராஜன் ரயில்வேயில் வேலை செய்றார். ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு பசங்க இருக்காங்க.
18 வயசுலேயே வீட்டுல திருமணம் பண்ணி வச்சிட்டாங்க. என் கணவர்தான் மேற்கொண்டு என்னை எம்ஏ ஆங்கில இலக்கியம் படிக்க வச்சார். என் ஆர்வத்தைக் கேட்டு, புதுசா கேமரா வாங்கித் தந்து, என்னை இப்பவரை ஊக்கப்படுத்திட்டு வர்றதும் அவர்தான்...’’ என்கிற திலகவதிக்கு, சிறு வயதிலேயே புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம்.
‘‘இதுக்குக் காரணம் என் அண்ணன். அவர் இப்ப இல்ல. அவர் முறையாக போட்டோகிராபியை படிச்சவர். அதைப்பத்தி நண்பர்களுடன் நிறைய பேசுவார். அதைக் கேட்டு எனக்கு ஆர்வம் வந்தது. அப்ப நான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். எப்படி புகைப்படம் எடுக்கணும், அதற்கான ஆங்கிள் எப்படி வைக்கணும்னு எல்லாமே அண்ணனிடம் கத்துக்கிட்டேன்.
அந்நேரம் கேமரா செல்போன் வந்தது. அதில் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன். பிறகு, திருமணமாகி ஈரோடு வந்துட்டேன். இங்க கணவர் என் ஆர்வத்தைப் பார்த்துட்டு புதுசாக டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்கித் தந்தார். அப்புறம், நிறைய கோர்ஸ்கள் அட்டெண்ட்பண்ணி போட்டோகிராபியை முழுமையா கத்துக்கிட்டேன்.
என்னுடைய புகைப்படங்களை எல்லாம் முகநூல்ல போடுவேன். முகநூல்தான் எனக்கான மேடையாக இருந்தது. அப்ப பாறை ஓவியங்கள் நோக்கி பயணிக்கும் ஒருத்தர் முகநூலில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.
அதில் இந்தப் பாறை ஓவியம் குடைவரைக் கோயில் பக்கத்துல இருக்குனு போட்டிருந்தார்.அவர் எனக்கு அறிமுகம் இல்லாத நபர். ஆனா, வரலாறு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் அவர்கிட்ட, குடைவரைனு சொல்லியிருக்கீங்களே, அப்படினா என்னனு கேட்டேன்.
அப்பதான் நான் குடைவரை என்ற வார்த்தையையே முதல்முறையாகக் கேள்விப்படுறேன். அவர், அன்றைய மன்னர்கள் பாறைகளைக் குடைந்து கட்டின கோயில்கள்னு விளக்கமாக எடுத்துரைத்தார்.
அவர் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்துச்சு. உடனே அது சம்பந்தமான ஆய்வுல இறங்கினேன். நிறைய வாசிச்சேன். இந்திய தொல்லியல் துறையைத் தொடர்பு கொண்டு பேசினேன். அப்படியாக என் கவனம் குடைவரைக் கோயில்கள் மேல் திரும்புச்சு. நம்ம தமிழ்நாட்டுல 119 குடைவரைக் கோயில்கள் இருக்குது. இதனை மொத்தமாக இதுவரை யாரும் ஆவணப்படுத்தல. தொல்லியல் துறையே 60 குடைவரைக் கோயில்கள் வரைதான் ஆவணப்படுத்தியிருக்காங்க. இதை அவங்களே சொன்னாங்க.
அதனால், நாம் மொத்தமாக ஆவணப்படுத்துவோம்னு களத்துல இறங்கினேன். அப்படியாக ஒன்றரை ஆண்டுகள் என் சொந்த செலவுல தமிழ்நாடு முழுவதும் பயணிச்சேன். திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், திண்டிவனம், மாமல்லபுரம், திருப்பரங்குன்றம், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் குடைவரைக் கோயில்கள் உள்ளன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே 18 கோயில்கள் வரை இருக்குது.
முகநூல்ல இருக்கிற இது சம்பந்தமான தன்னார்வலர்கள் எனக்கு நிறைய வழிகாட்டினாங்க. அப்படியாக நான் 119 குடைவரைக் கோயில்களையும் போட்டோகிராபி பண்ணினேன். இதில் அறுபதுக்கும் மேற்பட்ட கோயில்கள் முற்றுப் பெற்றவை.
மற்றது முற்றுப் பெறாதவை. அப்புறம் எல்லாமே 6, 7, 8ம் நூற்றாண்டு கோயில்கள்.மலையைக் குடைந்து பண்ணியிருக்கிறதால ரொம்ப நுட்பமாக செய்திருக்காங்க. குடைவரைக் கோயில்களின் தாய்நிலம் தமிழ்நாடுதான். இங்க 6ம் நூற்றாண்டில் இருந்தே குடைவரைக் கோயில்கள் இருக்கு.
இதில் முதல் குடைவரை கோயில் விழுப்புரத்துல உள்ள மண்டகப்பட்டுனு சொல்றாங்க. அதேபோல நாகர்கோவில், திருநெல்வேலி அருகே சில கோயில்களும் முதல் கோயிலாக இருக்கலாம்னு குறிப்பிடுறாங்க.
பாண்டியர் கால, பல்லவர் கால குடைவரைக் கோயில்கள்னு இருக்கு. சென்னை, விழுப்புரம் பக்கங்கள்ல பல்லவர்கள் அதிக எண்ணிக்கையில் பண்ணியிருக்காங்க. திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை பக்கங்கள்ல பாண்டியர்களும், முத்தரையர்களும் அதிகம் செய்திருக்காங்க.
நான் 2022ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2024ம் ஆண்டு ஆரம்பம்வரை அனைத்தையும் புகைப்படங்களாக ஆவணப்படுத்தினேன். என்னுடைய எல்லா புகைப்படங்களையும் முகநூலில் பதிவிட்டு அந்தக் குடைவரைக் கோயில் குறித்தும் எழுதினேன். முக்கால்வாசி கோயில்கள் முடிக்கிற தருணத்தில் எனக்கு நிறைய லைம்லைட் கிடைச்சது.
அந்நேரம் இறையன்பு ஐஏஎஸ் சாரை பார்க்கிற வாய்ப்பும் அமைஞ்சது. அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் ஆச்சரியமாகி, ‘இதுவரை இப்படியொரு முன்னெடுப்பை யாரும் செய்யல. நீங்க பண்றீங்க. சிறப்பாக செய்யுங்க’னு பாராட்டினார். அப்படியே தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் சாரை பாருங்கனு சொன்னார்.
அதன்படி தொல்லியல் துறையினர் ஒருநாள் அழைச்சு விவரங்களை எல்லாம் கேட்டாங்க. இதற்குள் நான் எல்லா குடைவரைக் கோயில்களையும் ஆவணப்படுத்தியிருந்தேன். பிறகு தொல்லியல் துறையிலிருந்து 119 குடைவரைக் கோயில்களையும் நான் முடிச்சிருக்கேன்னு சான்றிதழ் தந்தாங்க. அப்போ உதயச்சந்திரன் ஐஏஎஸ் சாரையும் சந்திச்சேன்.
அவரிடம் சில கோரிக்கைகளும் வச்சேன். குடைவரைக் கோயில்கள் பத்தி மக்களுக்குத் தெரியல. எனக்கே நான்கு ஆண்டுகளுக்கு முன்னாடிதான் தெரியும். அதனால் இதனை மக்களுக்குத் தெரியப்படுத்தணும் சார்னு சொன்னேன்.
ஏன்னா பிள்ளையார்பட்டியும் குன்றக்குடியும் குடைவரைக் கோயில்கள்தான். ஆனா, பிள்ளையார்பட்டி கோயிலை யாரும் குடைவரைனு சொல்றதில்ல. அதுக்குக் காரணம் நம்முடைய பேச்சு வழக்கத்தில் குடைவரைனு வரல. அந்தக் காலத்தில் கஷ்டப்பட்டு மன்னர்கள் செய்திருக்காங்க. அது வெளியில் தெரியாமல் இருக்கக்கூடாது.
அதனால், குடைவரைக் கோயிலுக்கென ஒரு நாளை உருவாக்கலாம். டீ டே, காபி டே மாதிரி குடைவரைக் கோயில் டேனு இருந்தால் ஏதாவது ஒரு பத்திரிகையிலோ, டிவியிலோ செய்தி வரும். அது மக்களிடம் பரவலாகப் போய்ச் சேரும். அப்புறம், புத்தகத்தில் குழந்தைகளுக்கு ஒரு சிறிய பாடமாக குடைவரை பத்தி கொண்டு வரணும்.
அப்ப ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகள் படிச்சு தெரிஞ்சுப்பாங்க. அடுத்து எந்தெந்த மாவட்டத்தில் குடைவரைக் கோயில்கள் இருக்குதோ அதனை அந்த மாவட்ட அருங்காட்சியகத்தில் புகைப்படங்களாக வைக்கலாம். இதற்கான புகைப்படங்கள் எல்லாம் நான் தர்றேன் சார்னு சொன்னேன். அவரும் அதற்கு ஓகே சொன்னார்.
இப்ப நான் எடுத்த திருச்சி மலைக்கோட்டை கீழ் குடைவரைக் கோயில் புகைப்படத்தை ஃப்ரேம் பண்ணி எழும்பூரில் உள்ள தமிழக தொல்லியல் துறை அலுவலகத்தில் வச்சிருக்காங்க. இதை எனக்கு அளித்த சான்றிதழிலும் குறிப்பிட்டிருக்காங்க...’’ எனப் பெருமிதமாகச் சொல்கிறவர், பத்தாம் நூற்றாண்டு கோயில்களின் புகைப்படக்கலைக்குள் சென்றார்.
‘‘தொல்லியல் துறையினரிடம் ஒருமுறை பேசிட்டு இருக்கும்போது எதேச்சையாக, ‘இதே மன்னர்கள் 43 ஆயிரம் கோயில்கள் தமிழக நிலப்பரப்பில் கட்டியிருக்காங்க. இதில் பாதிக் கோயில்கள் அழிஞ்சிடுச்சு.
நீங்க குடைவரை செய்ததுபோல் இதை யாராவது செய்து கொடுத்தால் வருங்கால சந்ததியினருக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்’னு சொன்னாங்க. நம்மால் முடிந்ததை நாமே பண்ணுவோமேனு தோணுச்சு. அப்படியாக நான் பத்தாம் நூற்றாண்டு கோயில்களை ஆவணப்படுத்தும் பணிக்குள் இறங்கினேன்.
இதில் பல கோயில்கள் சிதிலமாகிடுச்சு. மீதி 20 ஆயிரம் கோயில்கள் வரை இருக்கலாம். இதற்காக கடந்த மூணு மாசமாக பயணிச்சிட்டு இருக்கேன். முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்துல இருந்து ஆரம்பிச்சேன்.
இதுல புழக்கத்துல இருக்கிற கோயில்களையும் புழக்கத்துல இல்லாத சிதிலமடைந்த கோயில்களையும் புகைப்படங்களாக ஆவணப்படுத்துறேன். திருச்சி மாவட்டத்தில் மட்டுமே முப்பதுக்கும் அதிகமான பத்தாம் நூற்றாண்டு கோயில்கள் இருக்குது. முசிறியிலிருந்து நாமக்கல் போகிற வழியில் ஸ்ரீனிவாசநல்லூர்னு ஒரு கிராமம். அங்க குரங்குநாதர் கோயில்னு இருக்கு. இது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுனு சொல்றாங்க. இந்தக் கோயிலின் உள்ளே இருக்கும் தெய்வம் இதுவரை என்ன சாமினு யாரும் கண்டறியல. இங்க வழிபாடும் கிடையாது. இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் உணர்வுபூர்வமாக இருக்கும்.
அப்புறம் சோழமாதேவியில் ஸ்ரீ கயிலாயமுடையார் கோயில்னு இருக்கு. இது தஞ்சை பெரிய கோயிலுக்கு முன்பே ராஜ ராஜ சோழன் கட்டியது. அடுத்து உறையூர் வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில்... இப்படி பல பத்தாம் நூற்றாண்டு கோயில்கள் திருச்சி மாவட்டத்தில் இருக்குது.
அதேபோல இப்ப உள்ள கோயில்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களுக்கும் பல்வேறு வித்தியாசங்களும் இருக்குது. அப்ப உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றின் நுட்பமும் வேறுவிதம். கண்கள், உடல் நளினம் எல்லாம் ரொம்ப நேர்த்தியாக பண்ணியிருக்காங்க. அப்புறம், கோயில் கோபுரங்களில் பூதங்கள் குட்டிக் குட்டியாக செதுக்கியிருப்பாங்க. அந்தமாதிரி இருந்தால் அது 10ம் நூற்றாண்டு கோயில்கள்னு எளிதாக நாம் கண்டறியலாம். பொதுவாக குடைவரைக் கோயில்கள் மலைகளைக் குடைந்து செய்வதால் சிற்பங்கள் பெரிதாக இருக்கும். ஆனா, நிலப்பரப்பில் அமைக்கப்படும் கோயில்கள் கற்களை வெட்டியெடுத்து வந்து செய்வாங்க. அதனால் சிற்பங்களை சிறிதாகவும் இன்னும் அழகாகவும் செதுக்கியிருப்பாங்க.
இப்ப திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்தாம் நூற்றாண்டு கோயில்களை ஆவணப்படுத்திட்டேன். அடுத்து மதுரை அல்லது திருநெல்வேலிக்கு பயணிக்கலாம்னு இருக்கேன். எப்படியாவது தமிழகத்தில் உள்ள பத்தாம் நூற்றாண்டு கோயில்கள் அனைத்தையும் ஆவணப்படுத்திடணும்னு நினைச்சிருக்கேன். அதுவே என் இலக்கும்கூட...’’ என நம்பிக்கை மிளிர முத்தாய்ப்பாய் சொல்கிறார் திலகவதி.
பேராச்சி கண்ணன்
|