உயர் கல்வியில் தமிழ்நாடுதான் முன்னணி!
அடித்துச் சொல்கிறது ஜிண்டால் பல்கலைக்கழக அறிக்கை
ஹரியானாவில் உள்ள ‘ஜிண்டால் குளோபல் பல்கழக்கழகம்’ (O.P Jindal Global University) வருடந்தோறும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தி, தனிநபர் வருமானம் எல்லாம் ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சியை எடுத்துக் காட்டாது என்பதால் இந்த பல்கலைக்கழகம் ஒரு மாநிலத்தில் எப்படிப்பட்ட வாய்ப்புகளை அந்த மாநிலம் அந்த மாநில மக்களுக்கு வழங்குகிறது என்று ஆய்வு செய்கிறது. வருமானத்தைவிட வாய்ப்புகளே ஒரு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் என்று நம்புகிறது இந்த பல்கலைக்கழக ஆய்வு.
 இந்த அடிப்படை சரி என்றும் பிரபல நிபுணர்கள் கருதுகிறார்கள். அந்த அடிப்படையில் மாநிலங்களை முன்னணி மாநிலங்கள், சாதனையாளர்கள், மற்றும் முயற்சிக்கும் மாநிலங்கள் என மூன்று வகையாக பட்டியலிடுகிறது. இந்த ஆய்வில் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தரும் தூண்களாக சுமார் ஐந்து தலைப்புகளை அந்தக் கழகம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. அவை:
 1. அடிப்படை வசதிகள்,
2. அடிப்படை சுகாதாரம், 3. கல்வி, 4. சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு, 5. சட்டப் பாதுகாப்பு. இதிலும் ஒவ்வொன்றிலும் சில உப தலைப்புகளில் ஆய்வு செய்கிறது. உதாரணமாக அடிப்படை வசதி என்றால் தூய்மையான குடிநீர், சத்தான உணவு எனும் தலைப்புகளில் எல்லாம் ஆய்வு செய்கிறது. சரி, உயர் கல்வியில் என்ன சொல்கிறது ஜிண்டால் ஆய்வு?
உயர் கல்வி எனும்போது ஒரு மாநிலத்தில் 18 வயதிலிருந்து 23 வயதுள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன, அந்த எண்ணிக்கையில் எத்தனை பேர் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள் என்பது முக்கியமானது. இதைத்தான் ‘மொத்த மாணவர் சேர்க்கை’ (Gross Enrollment Ratio - GER) என்பார்கள். அந்த வகையில் இந்திய அளவில் சராசரி மொத்த மாணவர் சேர்க்கை என்பது 28.4 சதவீதம்.
ஆனால், தமிழ்நாடு கடந்த ஐந்தாண்டுகளில் 47 சதவீத மாணவர் சேர்க்கை எனும் சாதனையில் முன்னணி மாநிலப் பட்டியலில் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் என எடுத்துக்கொண்டால் 39.4 சதவீதம். பழங்குடிகள் என்றால் 43.9 சதவீதம். இது எல்லாமே இந்திய சராசரியை மிஞ்சுவதைவிட பல மாநிலங்களை மண்ணைக் கவ்வவும் வைக்கிறது.
உதாரணமாக பீகாரில் இது 17.1. இராஜஸ்தான் 28.6. ஹரியானா 33.3. தமிழ்நாட்டு மாணவர் சேர்க்கை 47 சதவீதம் என்றால் அதில் பெண்களின் நிலை 46.8 சதவீதம் என்று சொல்கிறது இந்த ஆய்வு. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையோடு கல்வியில் இடைநிற்றல், கல்விக்காக மாநிலம் தன் பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதி, மாணவர் ஆசிரியர் விதிதம் போன்றவற்றிலும் இந்த உயர்கல்வியைப் பற்றி ஆய்வு செய்கிறது இந்த அறிக்கை.
இதில் எல்லாமே வட மாநிலங்களைவிட எவ்வளவோ முன்னேறிய நிலையில் தமிழகம் இருப்பதைப் பார்க்கும்பொதுழுது கல்விக்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமானதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
டி.ரஞ்சித்
|