கழிப்பறையை வீடாக மாற்றிய பெண்!



சீனாவைச் சேர்ந்த இளம் பெண் யாங்கைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். ஹுனான் மாகாணத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார் யாங். அவரது வயது 18. 
மாதச் சம்பளமாக இந்திய மதிப்பில் 34,570 ரூபாயை வாங்குகிறார். அவர் வேலை செய்து வரும் கடைக்கு அருகில், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வாடகையில் வீடுகள் இல்லை. சம்பளத்தின் பெரும்பகுதியை வாடகைக்குக் கொடுக்கும் நிலையில் யாங் இல்லை.

இதுகுறித்து தனது முதலாளியிடம் பேசியிருக்கிறார் யாங். கடையிலே தங்கிக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார் முதலாளி. கடையின் கதவை மூடி, திறக்கும்போது பிரச்னையிருப்பதால் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் யாங். ஆனால், கடைக்குள்ளேயே ஒரு கழிப்பறை இருக்கிறது. அதில் தங்கிக்கொள்வதாக யாங் சொல்ல, முதலாளியும் ஒப்புக்கொண்டார்.

பகல் நேரங்களில் அந்தக் கழிப்பறை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். இரவில் அது யாங்கின் வீடாக மாறிவிடும். ஆமாம்; தூங்குவது, சமைப்பது, துணிகளைத் துவைப்பது, பொருட்களை வைப்பது என சகலத்தையும் அந்தக் கழிப்பறைக்குள்ளேயே செய்கிறார். இதற்காக மாத வாடகையாக 545 ரூபாய் கொடுக்கிறார்.

த.சக்திவேல்