மாரத்தானில் பெண்களும் பங்கேற்க இவர்தான் காரணம்!
எழுத்தாளர், மாரத்தான் வீராங்கனை, தொலைக்காட்சி வர்ணனையாளர் என பன்முகங்கொண்ட ஆளுமை, காத்தரின் வர்ஜீனியா ஸ்விட்சர். அமெரிக்காவில் 1897லிருந்து ஒவ்வொரு வருடமும் பாஸ்டன் மாரத்தான் போட்டி நடந்து வருகிறது. ஆண்கள் மட்டுமே அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட போட்டியாளர்களாக பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொண்டனர்.  1967ம் வருடம் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் பெண் போட்டியாளராக பாஸ்டன் மாரத்தானில் கலந்துகொண்டார் காத்தரின். அவர் மாரத்தானில் ஓடிக்கொண்டிருக்கும் போது, போட்டியை நடத்திய மேனேஜர் ஜாக் செம்பல் என்பவர் காத்தரினைத் தாக்கினார். இந்தச் சம்பவம் அப்போது அமெரிக்கா முழுவதும் முக்கிய செய்தியானது.  காத்தரினின் உடையில் மாட்டப்பட்டிருந்த அடையாள எண்ணையும் பறிக்க முயன்றார். மட்டுமல்ல, போட்டியிலிருந்தும் அவரை நீக்கினார். இதற்கெல்லாம் ஒரே காரணம், காத்தரின் ஒரு பெண் என்பதுதான். எல்லா தடைகளையும் மீறி, போட்டியை முழுமையாக ஓடி முடித்தார் காத்தரின். இந்தப் போட்டிக்குப் பிறகு அமெரிக்காவின் துறைசார்பற்றவர்களுக்கான தடகளச் சங்கம் மாரத்தானில் ஆண்களுடன் பெண்கள் போட்டிபோடக் கூடாது என்று தடை விதித்தது.
 இன்னொரு பக்கம் காத்தரின் ஆரம்பித்து வைத்த புரட்சித் தீ, நாலாப்பக்கமும் பரவ ஆரம்பித்தது. பாஸ்டன் மாரத்தான் போட்டியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
ஆம்; 1972ம் வருடம் பெண்களுக்கென்று தனியாக பாஸ்டன் மாரத்தான் போட்டி உருவாக்கப்பட்டது.
இதில் அதிகாரபூர்வமாக பெண்கள் பதிவு செய்து கலந்துகொண்டனர். இன்று பெண்கள் எந்தவித தடையுமின்றி தடகளப்போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்றால் அதற்கு மூல காரணங்களில் ஒருவர், காத்தரின். அவருடைய கதை பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் உந்துதல் தரக்கூடிய ஒன்று.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த ஜெர்மனியின் நகரமான ஆம்பர்க்கில், 1947ம் வருடம் பிறந்தார், காத்தரின். இவருடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் மேஜராக இருந்தார்.
1949ம் வருடம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது, காத்தரினின் குடும்பம்.
ஆங்கில இலக்கியத்திலும், பத்திரிகைத்துறையிலும் பட்டப்படிப்பை முடித்த காத்தரினுக்கு, ஓட்டப்பந்தயத்தின் மீது பெருங்காதல். அதனால் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே ஆர்னி பிரிக்ஸ் என்பவரிடம் ஓட்டப் பயிற்சி எடுத்துக்கொண்டார். மாரத்தானில் ஓட வேண்டும் என்பது காத்தரினின் விருப்பம். ‘‘பயிற்சியின் போது மாரத்தான் ஓட்டப்பந்தய தூரத்தை நீ கடந்துவிட்டால், நானே உன்னை பாஸ்டன் மாரத்தானுக்கு அழைத்துச் செல்கிறேன்...’’ என்று காத்தரினிடம் வாக்குறுதி கொடுத்தார் ஆர்னி. பயிற்சியில் மாரத்தானின் தூரத்தைக் கடந்து, தன்னால் ஓட முடியும் என்பதை நிரூபித்தார். அதிகாரபூர்வமாக பதிவு செய்த பிறகே, பாஸ்டன் மாரத்தானில் ஓட வேண்டும் என்பது காத்தரினின் விருப்பம். அதற்கு முன் எந்தப் பெண்ணும் அப்படிச் செய்ததில்லை.
1966ம் வருடம் பாபி கிப் என்ற பெண் பாஸ்டன் மாரத்தானில் ஓடினார். ஆனால், அவர் அதிகாரபூர்வமாக பதிவு செய்யாத போட்டியாளர். ‘‘26 மைல் தூரத்துக்கு ஓடும் அளவுக்கு பெண்களிடம் உடல் வலிமையில்லை...’’ போன்ற விமர்சனங்களைத் தகர்த்து ஓடினார். அப்போது பாஸ்டன் மாரத்தானில் ஓடியவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மட்டுமே பந்தய தூரத்தைக் கடந்தனர். அதில் ஒருவர், பாபி.
1967ம் வருடம் பந்தயத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, தனது பெயரை அதிகார பூர்வமாக பதிவு செய்துவிட்டு பாஸ்டன் மாரத்தானில் கலந்து கொண்டார் காத்தரின். மாரத்தானில் ஓடுவதற்குத் தனக்கு முழு உடல் தகுதியும் இருக்கிறது என்பதை நிரூபிக்க ஃபிட்னஸ் சான்றிதழையும் சமர்ப்பித்தார்.
பாஸ்டன் மாரத்தானில், 261 என்ற அடையாள எண்ணுடன் (Bib Number) கலந்துகொண்டார். காத்தரினின் தந்தை தனது முழு ஆதரவையும் கொடுத்தார். பந்தயம் ஆரம்பிக்கும்போது நிறைய பேர் காத்தரினை உற்சாகப்படுத்தும்விதமாக ஆதரவுக்குரலை எழுப்பினார்கள். பயிற்சியாளர் ஆர்னி மற்றும் காதலன் டாம் மில்லருடன் சேர்ந்து காத்தரினும் ஓடினார்.
தலையை மூடியபடி ஹூடி ஸ்வட் ஷர்ட் அணிந்துகொண்டு ஓடியதால், காத்தரினை மற்றவர்களால் ஆணா, பெண்ணா என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
சில மைல் தூரம் ஓடியபிறகு, அவரது தலையை மூடியிருந்த ஹூடி கீழே விலகியதால், அதிகாரபூர்வமாக ஒரு பெண் பாஸ்டன் மாரத்தானில் ஓடுகிறார் என்ற தகவல் தீயாகப் பரவியது.
உடனே போட்டியை நடத்துபவரான ஜாக், இடையில் புகுந்து காத்தரினைத் தாக்கி, அவரிடமிருந்த அடையாள எண்ணைப் பிடுங்க முயற்சித்தார். ஆர்னியும், டாமும் காத்தரினுக்கு ஆதரவாக நிற்க, அவர்களையும் தாக்கினார் ஜாக். இதைப் புகைப்படக்காரர்கள் கச்சிதமாகப் படம் பிடித்துவிட்டனர்.
இந்தப் பிரச்னைகளைத் தாண்டி, பந்தய தூரத்தை 4 மணி, 20 நிமிடங்களில் கடந்தார் காத்தரின். அவர் மீதான தாக்குதல் அடுத்த நாள் சர்வதேச அளவில் முக்கிய செய்தியானது.
இதற்குப் பிறகு மாரத்தானில் பங்கேற்க பெண்களுக்கும் உரிமையிருக்கிறது என்று போராட்டக் குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக 1972ம் வருடம் பாஸ்டன் மாரத்தானில் பெண்களுக்கென்று தனிப்பிரிவு உருவானது. இதில் அதிகாரபூர்வமாக பதிவு செய்த பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
‘‘ஒருவேளை நான் பந்தயத்திலிருந்து விலகியிருந்தால், பெண்ணால் 26 மைல் தூரத்துக்கு ஓட முடியாது என்று ஆண்கள் சொல்வது உண்மையாகிவிடும். நான் விலகியிருந்தால், வீண் விளம்பரத்துக்காக ஓடுகிறேன் என்றும் மற்றவர்கள் சொல்லக்கூடும். நான் விலகியிருந்தால், இது பெண் இனத்துக்கே விளையாட்டுத்துறையில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். நான் விலகியிருந்தால், ஜாக் மற்றும் அவரைப் போன்றவர்கள் வெற்றி பெற்றவர்களாகி விடுவார்கள்.
பெண்களால் மாரத்தானில் ஓட முடியாது என்ற நம்பிக்கைகொண்ட காலத்தின் தயாரிப்புதான் ஜாக். இந்த நம்பிக்கையைத் தகர்க்க வேண்டும் என்று முடிவு செய்துதான் ஓடினேன்.
உண்மையில் ஜாக் என்னைத் தாக்கியதை நான் நேர்மறையாக எடுத்துக்கொண்டேன். அதுதான் தொடர்ந்து ஓட வேண்டும் என்ற வெறியை எனக்குள் செலுத்தியது.
சில நேரங்களில் மோசமான சம்பவங்கள்தான் உங்களின் வாழ்க்கையில் சிறந்த சம்பவங்களாக மாறும்...’’ என்கிற காத்தரின், 1974ல் நடந்த நியூயார்க் சிட்டி மாரத்தானில் வெற்றி பெற்றார். 1975ம் வருடம் பாஸ்டன் மாரத்தான் பந்தய தூரத்தை 2 மணி, 51 நிமிடங்களில் கடந்தார்.
அவரால் பெண்கள் பல்வேறுவிதமான ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டன. காத்தரினை கௌரவிக்கும் விதமாக பாஸ்டனின் தடகளச் சங்கம் 261 என்ற அடையாள எண்ணை மற்றவர்களுக்குத் தரப்போவதில்லை என்று முடிவு செய்தது.
இதுபோக பல விருதுகள் காத்தரினை தேடிவந்தன. கடந்த 2017ம் வருடம், தனது 70வது வயதில், அவமதிப்புக்கு உள்ளான பாஸ்டன் மாரத்தானில், 261 என்ற அதே அடையாள எண்ணுடன் ஓடினார் காத்தரின். அவருடன் சேர்ந்து 13,700 பெண்களும் பந்தயத்தில் ஓடினார்கள் என்பதுதான் காத்தரினின் வெற்றி.
த.சக்திவேல்
|