கேரள கோடீஸ்வரர்கள் பரப்பும் முல்லைப் பெரியாறு பீதி!



முல்லைப் பெரியாறில் தண்ணீருக்கு சமமாக சர்ச்சைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த சர்ச்சைகளை ஊற்றாக வரவழைத்துக் கொண்டவர்கள் பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள். மலையாளிகளின் மனதில் தொடர்ச்சியாக முல்லைப் பெரியாறு குறித்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை விதைத்துக் கொண்டிருப்பவர்கள் அம்மாநிலத்தைச்சேர்ந்த ஒருசிலர்தான்.

இப்போது மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘எம்புரான்’ படத்தின் மூலம் இந்தச் சர்ச்சையை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார்கள்.
இச்சூழலில் முல்லைப் பெரியாற்றின் வரலாற்றை தமிழர்கள் தெரிந்துகொள்வது நல்லது. முன்பே அறிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தி மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.

சிந்து சமவெளி நாகரிகத்தை ஜான் மார்ஷல் எனும் ஒரு பிரித்தானியர் கண்டுபிடித்ததுபோலவே ஒரு பிரித்தானியர்தான் தன் சொந்தப் பணத்தில் இந்த மெகா ப்ராஜெக்டான முல்லைப் பெரியாறு அணைக்கு வித்திட்டவர். அவர் பெயர் பென்னி குக். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழகத்தின் தென்பகுதியைச் சேர்ந்த 5 மாவட்டங்கள் அவர் பெயர் தெரியாமலேயே அவரால் பயனடைகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

முல்லைப் பெரியாறு வரலாறு

1886ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஓர் ஒப்பந்தம் தமிழகத்தை ஆண்ட பிரித்தானியருக்கும், திருவாங்கூரை ஆண்ட திவானுக்குமிடையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்த அணை 999 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு உரிமையானது. 

இந்த 999 நம்பரை வைத்துதான் சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் ‘டேம் 999’ என்ற படம்கூட வந்து சர்ச்சையானது.இந்த ஒப்பந்தத்தின்படி சுமார் 8000 ஏக்கரில் பெரியாறு அணை கட்டப்படுவதற்கான பணி ஆரம்பமானது. அன்று தமிழகத்திலிருந்த மெட்ராஸ் பிரசிடன்சியின் பிரித்தானிய அரசுதான் இந்த அணைக்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், கொஞ்ச நாட்களில் அணைக்கு முழுப் பணம் இல்லை என பிரித்தானிய அரசு கையை விரித்தது. பிறகு பென்னி குக் தன் சொந்த நாட்டுக்குச் சென்று தன் நில உடமைகளை விற்று இந்த அணையைக் கட்டி முடித்தார். 1886ல் போடப்பட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு சுமார் 9 வருடங்கள் கழித்து, அதாவது 1895ம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு என்பது இரண்டு ஆறுகளால் வந்த பெயர். ஒன்று சிறியதான முல்லை ஆறு. மற்றது பேரியாறு. முதல் ஆறு தமிழகத்தை ஊடறுத்துச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருப்பது. மற்றதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தாலும் அது திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டதாக இருந்தது. இந்த இரு அணைகளையும் இணைத்துதான் இந்த அணை முல்லைப் பெரியாறு அணையாக அடையாளம் பெற்றது.

இந்த அணை கட்டப்படுவதற்கு முன் இந்த இரு ஆறுகளிலும் விழும் மழை நீர் வீணாக அரபிக் கடலில்தான் கலக்கும். ஆனால், கிழக்காக செல்லும் இந்த ஆற்று நீரை வடக்காக அணை மூலம் திருப்பினால் பல லட்சம் மக்கள் பலன் பெறுவர் என்பதற்காகத்தான் பென்னி குக் இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தார்.

பிரித்தானியர்களில் பலர் இந்தியாவின் சொத்துக்களை பிரிட்டனுக்கு கொள்ளை அடித்துக் கொண்டுபோன சூழ்நிலையில் சில பிரித்தானியர்கள் இந்திய மக்களுக்கு ஆபத்பாந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கான முதன்மையான சான்றாக இருப்பவர் பென்னி குக்.

முல்லைப் பெரியாறு நீரை வடக்காக அணை மூலம் திருப்பி விடுவதால் அந்த நீர் வைகை ஆற்று மூலம் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு பாய்ந்து செல்கிறது. அதில் முதன்மையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள். 

இந்த நீர் 2.23 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனமாக பாய்கிறது. இத்தோடு இந்த தென் மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. சுமார் 130 வருட பழமையான இந்த அணை இதுவரைக்கும் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாத சூழ்நிலையில் தமிழ்நாடும், கேரளாவும் இதுதொடர்பான வழக்கு வாய்தாக்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளில் முல்லைப் பெரியாறு பாதுகாப்பாகத்தான் உள்ளது என பல முறை தன் தீர்ப்புகளில் சொன்னாலும் கேரளாவின் சில பிரபலங்கள் தொடர்ச்சியாக இந்த அணை குறித்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது. 

இந்தப் பிரச்சனை தொடர்பாகவும், இதில் நேரடியாகவும் ஈடுபட்ட தமிழ்நாடு பொதுப்
பணித் துறையின் முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளரும், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர் சங்கத்தின் இன்னாள் மாநிலப் பொதுச் செயலாளருமான அ.வீரப்பனிடம் இந்த விஷயம் பற்றிக் கேட்டோம்.

‘‘1970களில் இருந்தே கேரளாவுக்கு இந்த முல்லைப் பெரியாறு தொடர்பாக எதிர்ப்பு இருந்தது. உதாரணமாக முல்லைப் பெரியாறுக்கு வரும் தண்ணீரை முழுவதுமாக தங்கள் மாநிலமே பயன்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கேரளா அரசாங்கம் 1976ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையைவிட சுமார் 4 மடங்கு பெரிதான இடுக்கி அணையைக் கட்டியது.

முல்லைப் பெரியாறின் உயரம் 176 அடி. கொள்ளளவும் 15.5 டிஎம்சி. ஒரு டிஎம்சி நீர் என்றால் 2831 கோடி லிட்டர் எனச் சொல்லலாம். ஆனால், இடுக்கி அணையின் உயரம் சுமார் 555 அடி. கொள்ளளவும் 90 டிஎம்சி.

ஆனாலும் இடுக்கி அணைக்கு இவ்வளவு செலவு செய்தும் அதற்கு நீர் வராததைப் பார்த்த கேரள அரசுக்கு தாங்கள் தவறு இழைத்துவிட்டோமே என்ற நினைப்புகூட இல்லாமல் இன்னும் முல்லைப்பெரியாறு அணை பற்றி விரோதமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...’’ என்ற வீரப்பன், ஏன் இடுக்கி அணைக்கு முல்லைப் பெரியாறில் இருந்து நீர் வடியவில்லை என்பதையும் விளக்கினார்.

‘‘முல்லைப் பெரியாறின் மொத்த உயரம் 152 அடி. இந்த 152 அடிக்கு நீர் வந்தாலே 10 டி.எம்.சி நீர்தான் இருக்கும். ஆனால் பொதுவாக இந்த அணையில் 132 அடிதான் நீர் இருக்கும். 132 அடி நீர் என்றால் வெறும் 6 டி.எம்.சி நீர்தான் தேங்கும். 136 அடி நீர் இருந்தால் முல்லைப் பெரியாறு அணையின் 100 அடியில் இருக்கும் சுரங்கம் வழியாகத்தான் நீர் கசிந்து பிற பகுதிகளுக்கு செல்லும். அதுவும் 1 டி.எம்.சி, 2 டி.எம்.சி என்ற அளவில்தான் மிகக் குறைவாகச் செல்லும்.

136 அடிக்கு மேலே போனால்தான் நீரை ஷட்டர் வழியாக திறப்பார்கள். ஷட்டரிலிருந்து திறக்கப்படும் நீர்தான் கீழே வழிந்து இடுக்கி அணைக்கு செல்லும். பெரும் வெள்ளம், மழை என்றால்தான் 136 அடிக்கு மேலே நீர் போகும். 

அப்போதுதான் நீரை ஷட்டரிலிருந்து திறப்பார்கள். இது எல்லாம் தெரியாமல்தான் கேரள அரசியல்வாதிகளும் பொறியாளர்களும் இடுக்கி அணையை அவ்வளவு செலவு செய்து அமைத்தார்கள். இந்தப் பிரச்சனை பிறகுதான் கேரள அரசாங்கத்துக்கே தெரிந்தது.

முல்லைப் பெரியாறு அணையை ஏதோ ஒரு விதத்தில் காலி செய்திடவேண்டும் என்னும் ஒரே ஒரு நோக்கத்தால் மட்டுமே இடுக்கி அணை கட்டப்பட்டதால் முல்லைப் பெரியாறின் பொறியியல் நுணுக்கங்களை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் போனார்கள் என்று சொல்லும் வீரப்பன், இடுக்கி அணை பயன்பெறாமல் போன பிறகு கேரள அரசு என்ன செய்தது என்றும் சொன்னார்.

‘‘1979ம் ஆண்டு தமிழ்நாட்டு முதலமைச்சராக எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார். அப்போது கேரள அரசு தமிழகத்தை நச்சரித்துக்கொண்டே இருந்தது. முதலமைச்சர் எம்ஜிஆரும் தமிநாட்டின் சில மூத்த பொறியாளர்களை பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள கேரளாவுக்கு அனுப்பினார். சென்ற பொறியாளர்களிடம் ஒரு வெற்று பேப்பரைக் காட்டி முல்லைப் பெரியாறில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கமாட்டோம் என்று எழுதி முதலமைச்சரிடம் கையெழுத்து வாங்கிவரும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

பொறியாளர்கள் எம்ஜிஆரிடம் வந்து சொல்ல, அவர் அந்தப் பேப்பரை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். இது பின்னடைவைத் தர கேரள அரசு தங்கள் மாநில பத்திரிகைகள் மூலம் தொடர்ச்சியாக முல்லைப் பெரியாறு அணை பற்றிய தவறான பிரசாரத்தை முடுக்கிவிட்டது. இதில்தான் முல்லைப் பெரியாறு அணை உடைய இருப்பதாகவும் இதனால் கேரளாவைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்களின் உயிர் ஊசலாடுவதாகவும் ஒரு பரப்புரையைச் செய்தது.

முல்லைப் பெரியாறு அணை 152 அடி நீரைக்கூட சேமிக்கக்கூடிய கட்டுமானம் உடையது. இதை உடையாத - விரிசல் விழாத - அளவில் பாதுகாக்க பேரி டேம் எனும் துணை அணை எல்லாம் உள்ளன. ஆனால், 132 அடி நீருக்குள் மட்டுமே அணையை வைத்திருக்கும்படி பெரிய கட்டுக்கதைகளை கேரள அரசு அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தது. 132க்குள்ளே மட்டும் முல்லைப் பெரியாறில் நீர் இருந்தால் இடுக்கி அணைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் போதுமான குடிநீர் கிடைக்காது. குடிநீர் தட்டுப்பாடுகளை நீக்கவும் முடியாது.

இந்தப் பிரச்னையால் கேரளாவும் பயன்படாமல் தமிழ்நாடும் பயன்படாமல் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போனபோதுதான் தமிழ்நாடு சட்டரீதியாக ஆதாரங்களை முன்வைத்து - சமர்ப்பித்து - இந்த விஷயத்தில் ஜெயித்தது...’’ என்று சொல்லும் வீரப்பன் அந்த நீதிமன்றக் கதையையும் விவரித்தார்.‘‘2006களில் கே.டி.தாமஸ் என்ற கேரளக்காரர் ஒன்றிய அரசின் ‘சென்ட்ரல் வாட்டர் கமிஷன்’ துறையின் சேர்மனாக இருந்தார். இந்த கமிஷன்தான் அணைக்கட்டு பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் அமைப்பு.

கே.டி.தாமஸ் இந்த வழக்கில், கேரள அரசு முல்லைப் பெரியாறு உடைந்துவிடும் எனும் ஒரு கதையைச் சொல்லிவருவதால் தமிழக அரசுக்கு ஒரு வழிமுறையைச் சொன்னார்.
அதன்படி முல்லைப் பெரியாறு அணை மேலும் மூன்று கட்டங்களாக பலப்படுத்தப்பட்டது. ஒன்று, இருக்கும் அணையின் 900 அடி நீள சுவரைத் தாங்கும்படி மிக கனத்த தொப்பி போன்ற அமைப்பைக் கட்டுதல். 

இரண்டாவது, இந்த தொப்பி போன்ற அமைப்பு சரியாமல் இருக்க அதை இணைக்கும் பெரிய கான்கிரீட் பில்லர். மூன்றாவதாக, முல்லைப் பெரியாறு இருக்கும் இடத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கேரளா கதைவிட்டு வருவதால் பெரியாறு அணையின் சுவர்களில் இருந்து நிலத்துக்கு அதிர்வுகள் போகும்படியாக துளைகளின் வழியாக செல்லக்கூடியவயர்கள்.

உண்மையில் இதை எல்லாம் தமிழகம் அமைத்த பிறகு பென்னி குக் கட்டியபோது இருந்த அணையைக் காட்டிலும் மூன்று மடங்கு பலமிக்கதாக மாறியது...’’ என்று சொல்லும் வீரப்பன் மேலும் வழக்குகள் தொடர்ந்தது என்கிறார்.‘‘அணை உடைந்துவிடும் எனும் கேரள அரசின் தொடர்ச்சியான பிரசாரத்தால் இந்த வழக்கு உச்சநீதி மன்றத்துக்கு வந்தது. அப்போது ஏ.எஸ்.ஆனந்த் என்பவர் தலைமையில் ஒரு சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு இந்த விஷயம் ஆராயப்பட்டது.

ஏ.எஸ்.ஆனந்த், அணை உடையும் விஷயம் தொடர்பாக சுமார் 14 சோதனைகளை நடத்தினார். இதன் வழியாக அவர் கண்டறிந்தது இதுதான்: ‘முல்லைப் பெரியாறு உடைந்தாலும் வெறும் 6 டிஎம்சி தண்ணீர்தான் வெளியேறும். 

136 அடி இருக்கும் வரைக்கும் உடைந்தால் பிரச்னை இல்லை. ஆனால், 156 அடிக்கு போய் உடைந்தாலும் வெறும் 6 டிஎம்சி தண்ணீர்தான் வெளியேறும். அப்படியே 6 டிஎம்சி தண்ணீர் வெளியேறினாலும் இடுக்கியில் இருக்கும் 90 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில்தான் போய்ச் சேரும்.

மக்களை எல்லாம் அது பாதிக்கப்போவதில்லை...’ என்றார்...’’ என்று சொல்லும் வீரப்பன், இன்றும் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கு வேறு வகையான காரணங்களையும் அடுக்கினார்.

‘‘முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றி கேரளாவின் கொழுத்த பணக்காரர்கள் பலர் ரிசார்ட்டுகளைக் கட்டியிருக்கிறார்கள். இவர்கள்தான் இன்று முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் ரிசாட்ர்டுகள் மூழ்கிவிடும் என்று கேரளாவில் செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.

உண்மையில் ஒன்றிய அரசு அண்மையில் எடுத்த ஒரு நுண்ணறிவு அறிக்கை இந்த ரிசார்ட்டுகள் எல்லாமே சட்டத்துக்கு புறம்பாகக் கட்டப்பட்டது என சொல்லியிருக்கிறது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது கேரள அரசு எதிர்காலத்தில் முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி மேலும் பொய்க் கதைகளைப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது...’’ என்கிறார் வீரப்பன்.

டி.ரஞ்சித்