‘உனக்கு என்ன பிரச்னை’னு மோகன்லால் கேட்டார்!



பான் இந்தியா இயக்குநர்கள் விரும்பி தேடும் டப்பிங் டைரக்டராக பேர் வாங்கியவர் ஆர்.பி.பாலா. சமீபத்தில் வெளியான ‘எம்புரான்’ படத்துக்கும் இவர்தான் டப்பிங் டைரக்டர். ‘புலிமுருகன்’, ‘லூசிஃபர்’, ‘மரக்காயர்’, ‘ஜனகணமன’, ‘நேரு’, ‘ஆடுஜீவிதம்’, ‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘வருஷங்களுக்கு சேஷம்’ என இவருடைய பட லிஸ்ட் நீள்கிறது.

‘எம்புரான்’ தமிழ் பேசியது எப்படி?

‘எம்புரான்’ பட விழாவில் பிருத்விராஜ் சார் பேசும்போது உங்களுக்கு தமிழ் தெரிந்தால் தயவு செய்து தமிழில் படம் பாருங்கள். அந்தளவுக்கு ஆர்.பி.பாலா உழைப்பை கொடுத்துள்ளார் என்று சொன்னார். இதை எனது வேலைக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன்.
பிருத்விராஜ் எப்படியென்றால் திறமை இருந்தால் மட்டுமே அவர் பக்கத்தில் நிற்க முடியும். இல்லைன்னா அவரோடு ஒர்க் பண்ண முடியாது. ‘லூசிஃபர்’ பண்ணும்போது எனக்கும் அவருக்குமான இடைவெளி அதிகம்.

‘லூசிஃபர்’ தமிழ் டப்பிங் வெர்ஷனை பார்க்கமாட்டேன் என்று இருந்தவர் என்னுடைய வேலையைப் பார்த்துவிட்டு மஞ்சு வாரியர் மேடத்தை முதன் முதலாக தமிழில் டப்பிங் பேச வைத்தார்.பெரிய நட்சத்திரங்களிடம் வேலை செய்யும்போது அழுத்தம் இருக்குமா?

வேலையில் தயக்கமிருந்தால்தான் கஷ்டமோ, அழுத்தமோ இருக்கும். எனக்கு வேலை தெரியும் என்பதால் என் தொழிலைப் பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை. வேலை தெரியாதவர்கள்தான் எதாவது கேள்வி கேட்டுவிடுவார்களோ என்று பயப்படுவார்கள்.நான் நெனைச்ச மாதிரி ஆர்ட்டிஸ்ட் டப்பிங் பண்ணவில்லை என்றால் பல டேக் எடுக்கவும் தயங்கமாட்டேன். அதனால் நான் கொடுமைப்படுத்துவதாகக் கூட சொல்வாங்க.

டப்பிங்ல மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் என்று அவர்களை பெரிய நட்சத்திரங்களாக பார்க்கமாட்டேன். வழக்கமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை எப்படி பார்ப்பேனோ அது மாதிரிதான் அவர்களையும் பார்ப்பேன்.மோகன்லால் சாரிடம் பல டேக் கேட்டிருக்கிறேன். நமக்காகத்தான் பண்ணுகிறார் என்று அவரும் பிரமாதமா ஒத்துழைப்பு கொடுப்பார். மஞ்சு சேச்சியும் அப்படித்தான். அவர் நாகர்கோவில்காரர் என்பதால் தமிழ் தெரியும்.

‘பாலா சார் உங்களுக்கு ஓகே வா, நான் பேசுற தமிழ் எப்படியிருக்கு’ன்னு அபிப்பிராயம் கேட்பாங்க. எங்கேயாவது மலையாளம் கலந்திருந்தால் இன்னொரு டேக் கேட்பேன். அவரும் தயங்காம கேளுங்கனு சொல்வார்.மோகன்லால் சார் பற்றி சொல்வதாக இருந்தால் ‘புலி முருகன்’ல அவருடன் எப்படி வேலை செய்யப் போகிறோம்ன்னு பயந்திருக்கிறேன். அவருடன் எப்போதும் பெரிய டீம் உடன் இருப்பாங்க. அவர்கள் ‘தமிழ்நாட்டில் ரஜினி மாதிரி இங்கு லால் சார்... கவனமாக வேலை பாருங்க’ன்னு சொல்லுவாங்க.

நான் முதல் காட்சிக்கே ஏழெட்டு டேக் கேட்க ஆரம்பித்தேன். டைரக்‌ஷன் டீம் என்ன நெனைச்சுட்டிருக்கீங்கன்னு கேட்டார்கள். சாருக்கு தமிழ் வரவில்லை என்றால் நான் என்ன பண்ண முடியும் என்று கேட்டேன்.மோகன்லால் சார் என்னை அழைச்சு என்ன பிரச்னை என்று கேட்டார். சார் எனக்கு தமிழ் வேணும்ன்னு சொன்னேன். 

‘பாலா, மலையாளம் கலந்து நான் பேசினாதான் மோகன்லால் பேசியிருக்கிறார்ன்னு நினைப்பாங்க. நான் தமிழ் நல்லா பேசினா என்னை மாதிரி யாரோ மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டை வெச்சு டப்பிங் பேசியிருக்காங்கன்னு நினைப்பாங்க. உனக்கு மோகன்லால் வாய்ஸ் வேணுமா, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் வாய்ஸ் வேணுமா’ன்னு கேட்டார்.

‘சார் உங்க வாய்ஸும் வேணும். அதோடு தமிழும் வேணும்’னு சொன்னதும் வேற லெவலில் பேச ஆரம்பித்தார். இப்போது மோகன்லால் சார் தமிழில் பிஎச்.டி முடிச்ச மாதிரி பேசறார். ‘புலிமுருகன்’ படத்திலிருந்து ‘எம்புரான்’ வரை அவருடைய  எல்லா படங்களிலும் நான்தான் டப்பிங் டைரக்டர்.

மோகன்லால் சாருடன் வேலை செய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கும். முதல்நாள் ஸ்கூலுக்குப் போகும் மாணவன் போல் பேப்பர் பேனா என்று சின்சியராக வருவார். அவர் அனுபவத்துக்கு இடது கையில் டீல் பண்ணலாம். அவருக்கு எப்போதும் நான் ஹெட் மாஸ்டர் மாதிரி.

வாய்ஸ் ரூம்ல இருந்து என்னை எட்டிப் பார்த்துட்டே இருப்பார். ‘பாலா சாருக்கு ஓகே வா’ன்னு என்னுடைய ரிப்ளைக்காக காத்திருப்பார். ஒரே டேக்ல ஓகேன்னு சொல்லும்போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்.‘சார் இந்த ரியாக்‌ஷன் ஓகே சொன்னதுக்காகவா, உங்களை விட்டுவிட்டதற்காகவா’ன்னு கேட்டால் ‘இரண்டுக்கும்தான்’ன்னு உற்சாகமா பதில் சொல்வார். வேலை முடியும் போது நம்மையும் அறியாமல் பிரியப் போகிறோம் என்ற கவலை ஒட்டிக்கொள்ளும். அந்தளவுக்கு என்னையும் டப்பிங் டீமையும் கேர் எடுத்து கவனிச்சுக்குவார்.

டப்பிங் படங்களின் அடிப்படை வேலை என்ன?

96லிருந்து ஃபீல்டுல இருக்கிறேன். பெரிய ரைட்டர்களிடம் வேலை பார்த்துள்ளேன். டப்பிங் படம் என்று வரும்போது பஞ்ச் டயலாக் போடுறேன், அழகுபடுத்துறேன்னு படத்தை கொலை பண்ணக்கூடாது. 

ஒரிஜினல் எசன்ஸ்சை எடுத்துக்கொண்டு நம் ஆடியன்சுக்கு ஏத்தமாதிரி கொடுக்கணும். டப்பிங் படத்துல முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் லிப் சிங். நான் ஒர்க் பண்ற படங்களைப் பார்க்கும்போது தமிழ்ப்படம் மாதிரி தெரியும். மலையாளமாக இருந்தாலும் சரி, தெலுங்குப் படமாக இருந்தாலும் சரி, லிப் சிங் கரெக்ட்டா இருக்கணும்.

மலையாளத்துல கேரக்டர்களை பேர் சொல்லி அழைப்பாங்க. நம் மொழியில் அதை வேற மாதிரி பண்ணணும். மொழி அழகும் கெடக்கூடாது. கன்டன்ட்டும் மாறக்கூடாது. கடைசியாக, அதுல ஜீவன் இருக்கணும். என் படங்களில் மாடுலேஷன் வரும்வரை ஆர்ட்டிஸ்ட்டை விடமாட்டேன்.

100 டேக் கூட போவேன். எங்கிட்ட வரும்போது ஆர்ட்டிஸ்ட் பயந்து, பயந்துதான் வருவாங்க. 10 டேக்ல முடிச்சுட்டேன் என்றால் அது அவர்களுக்கு சந்தோஷம். கத்தி கொடுத்தா என்ன குத்தக் கூட செய்வாங்க. அவ்வளவு கோபம் என்மேல இருக்கும். ஆனால், தியேட்டரில் ரிசல்ட்டை பார்க்கும்போது போன் பண்ணி பாராட்டுவாங்க.

அடுத்து, கன்டன்ட் பற்றி ஸ்டடி பண்ணுவேன். ஒரிஜினல் டயலாக் போடாமல் ஃப்ரீடம் எடுத்து பண்ணுவேன். ‘எம்புரான்’ல விவசாயி பற்றி ஒரு டயலாக் வரும். அதை ‘களை எடுக்கும்போது சில கறை படத்தான் செய்யும்’ன்னு மாத்தியிருப்பேன். வில்லனை சந்திக்கும் காட்சியில் டோவினோவிடம் சுராஜ் வெஞ்சரமூடு, ‘நான் உங்களுக்கு இந்தி சொல்லித்தர்றேன்னு இந்திக்காரன் வந்தான். 

சொகுசா இடம் கிடைச்சதும் நம் ஆளை தள்ளிட்டு போயிட்டான். அண்ணன்னு கூப்பிட்டு எனக்கு ஆப்பு வெச்சுடமாட்டீயே’ என்று டயலாக் பேசுவார். இது மலையாளத்தில் கிடையாது. தமிழில் நான் சேர்த்தேன். ‘லூசிஃபர்’ல கறுப்புக் கொடி காட்டியிருப்பாங்க. தமிழில் சிவப்புக் கொடிதான் வரும்ன்னு பெரிய விவாதத்துக்குப் பிறகு மாத்தினேன்.

டப்பிங் படங்களுக்கான முக்கியத்துவம் எப்படி உள்ளது?

100க்கும் மேல் படம் பண்ணியிருக்கிறேன். எந்தப் படமாக இருந்தாலும் கன்டன்ட் வேணும். ‘புலிமுருகன்’, ‘லூசிஃபர்’, ‘எம்புரான்‘ போன்ற படங்கள் பேசப்பட அதுவே காரணம்.
பான் இந்தியா ஃபார்மூலா

வந்தபிறகு டப்பிங் ஸ்டைல் மாறியுள்ளதா?

சமீபத்துல ஏழெட்டு படம் வேண்டாம்னு சொன்னேன். ஏனெனில் நான் கேட்ட டைம் தரவில்லை. உடனே வேணும்னு கேட்டாங்க. ஆரம்பத்துல இருந்து இதுதான் நடக்குது. அவசர அவசரமா பண்ண படம் என்றால் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. அப்போது ‘ஆடுஜிவிதம்’ ஒர்க்ல இருந்தேன். 

தயாரிப்பாளர் விரும்பிக் கேட்டதால் இரவு, பகல் பார்க்காமல் நான்கு மொழிகளுக்கும் சேர்த்து வேலை பார்த்தேன். முன்பு யார் டப்பிங் பண்ணுகிறார்கள் என்று தெரியாது. இப்போது மீடியா வெளிச்சம் அதிகம் என்பதால் யார் டப்பிங் டைரக்டர் எனுமளவுக்கு கவனிக்கிறார்கள்.
ஓர் ஆய்வில் நான், மதன் கார்க்கி உட்பட மூன்று பேர் பெஸ்ட் பான் இந்திய டப்பிங் டைரக்டர்ஸ் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அது பெரிய
அங்கீகாரம்.

இயக்குநர் பாலாவாகவும் உங்களைப் பார்க்க முடிகிறதே?

பிழைப்புக்காக சென்னை வந்தவர்களில் நானும் ஒருவன். டப்பிங் என்னை வாழ வைத்தது. அனுபவம் என்னை டைரக்டராக மாற்றியது. டைரக்டராக என்னுடைய முதல் படம் பரத் நடிச்ச ‘லவ்’. இப்போது கலையரசன் நடிக்கும் ‘கொலை சேவல்’ மற்றும் நவீன் சந்திரா நடிக்கும் படம் இயக்கியுள்ளேன். மோகன்லால் படம் இயக்குவீர்களா என்று கேட்கிறார்கள். காலம்தான் அதற்கு பதில் சொல்லணும்.

எஸ்.ராஜா