தேர்தல் தில்லுமுல்லு அரங்கேறத்தான் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு நடக்கிறதா?



இந்த விவாதம்தான் கடந்த சில நாட்களாக அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் சமூகவியல் ஆய்வாளர்கள் இடையிலும் அரங்கேறி வருகிறது.காரணம், கடந்த மார்ச் 18ம் தேதி, இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்ததுதான். 
தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான கூட்டத்தில், உள்துறை செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் செயலாளர் மற்றும் ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி அடங்கிய உயர்மட்டக் குழு பங்கேற்றது. இக்கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு முன்பே கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் அட்டையை சமர்ப்பித்தால் மட்டுமே இணைப்பு மேற்கொள்ளப்படும் எனக் கூறுகிறது.

ஆனால், 2023ம் ஆண்டு தேர்தல் ஆணையம், தேர்தல் பட்டியலை இறுதி செய்யும் பணியில் கிட்டத்தட்ட 66.23 கோடி ஆதார் அட்டைகளை பதிவேற்றம் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது. இவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தகவல்களை அளித்தவர்களா என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகிறார்கள். 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரும் முன்பே வங்கிகள் ஆதாரை வங்கி கணக்குகளுடன் கட்டாயமாக இணைத்ததைப் போலவே, தேர்தல் ஆணையமும் இதைக் கட்டாய நடவடிக்கை மூலம் நிறைவேற்றும் என்கிறார்கள்.

ஆனால், இந்த இணைப்பை எளிதாக்கும் வகையிலான சட்டம் 2021ல் இயற்றப்பட்ட போது அரசியலமைப்பு நடத்தைக் குழு (CCG) சார்பாக முன்னாள் மூத்த அரசு அதிகாரிகள் 104 பேர் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை வெளியானது. இப்பொழுது அந்த அறிக்கை மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

இந்த 104 பேரில் பெரும்பாலானோர் வாக்காளர் பதிவு மற்றும் தேர்தல்களை நடத்துவதில் நேரடி அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பின்னணி கொண்ட 104 பேரும் இதை ஒரு ‘ஆபத்தான நடவடிக்கை’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தும் நடவடிக்கையானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் மாநிலங்களால் தவறாகப் பயன்படுத்தப் படக்கூடும் என்றபடி பல காரணங்களை அவ்வறிக்கை அடுக்குகிறது.

1. வாக்காளர் அடையாள அட்டை என்பது குடியுரிமையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனால், ஆதார் அட்டையானது குடியுரிமைக்கான சான்று இல்லாமலே அடையாளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. 2016ம் ஆண்டு ஆதார் சட்டத்தின் பிரிவு (9) குடியுரிமை, வயது, முகவரி, பாலினம் போன்றவற்றுக்கான சான்றாக ஆதாரை பயன்படுத்தக் கூடாது எனத் தெளிவாகக் கூறுகிறது.

2. ஆதாரை மட்டுமே சான்றாக பயன்படுத்தினால் குடிமக்கள் அல்லாதவர்களும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட வாய்ப்பு உண்டு. ஆதாருக்கு ஏற்கனவே உள்ள ஆவணங்கள் தேவைப்படும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டைகள் தேர்தல் பணி அதிகாரிகளால் வீடுகளுக்கே வந்து நேரடியாக சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

வாக்காளர் அட்டைகளுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் தேர்தல் அதிகாரிகளால் நேரடி சரிபார்ப்பு நடக்காத நிலையில், அவர்கள் வசிக்காத தொகுதிகளில் வாக்காளர்களை பதிவு செய்ய முடியும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்க முடியும்.

3. அரசாங்கம் தனது அதிகாரத்தின் மூலம் ஆதார் எண்ணை தெரிவிப்பதற்கான விதிகளை ஏற்படுத்தலாம். இத்தகைய விதிகளுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. எனவே, வாக்காளர் சேர்க்கைக்கு ஆதார் எண்ணை வழங்குவதை ஒரு முன் நிபந்தனையாக மாற்றும் ஒரு விதியை எளிதில் அறிமுகப்படுத்த முடியும். இதன்மூலம் தேர்தல் பதிவு அதிகாரியிடம் தங்கள் ஆதார் விவரங்களை வழங்காமல் இருக்கும் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து பெரிய அளவில் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

4. அரசின் பொது விநியோகத் திட்டம் (ரேஷன்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (100 நாள் வேலை) போன்றவற்றின் பதிவேடுகளை ஆதார் தரவு தளத்தை பயன்படுத்தி முறைப்படுத்த முயற்சித்ததில் இதுவரை கிடைத்த அனுபவம் கசப்பானதாகவே உள்ளது. பல பயனாளிகளின் பெயர்கள் எந்த முன் அறிவிப்புமின்றி தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பலரது உரிமைகள் பறிக்கப்பட்டன.

5. வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைப்பது, வாக்காளர்களை அடையாளம் காணவும், அவர்களை குறி வைக்கவும் உதவும். இந்த அட்டைகள் பிறகு மொபைல் எண்களுடன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

நமது நாட்டில் வலுவான தரவுப் பாதுகாப்பு சட்டம் இல்லாத நிலையில், வாக்காளர்களின் விவரங்களை சட்டவிரோதமாக சேகரித்து, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும், புதிதாக சேர்க்கவும் என அனைத்து தில்லுமுல்லுகளும் நடக்கும்.

6. தரவுப் பாதுகாப்பு மசோதாவை (Data Protection bill) உருவாக்கிய நிபுணர் குழுவின் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா, ஆதாருடன் வாக்காளர் அட்டைகளை இணைப்பதை ‘மிக ஆபத்தான செயல்’ என கண்டித்தார். அந்த செயலைத்தான் தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்துகிறது.

7. இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள படிவம் 6 b-யில் ஆதார் எண்ணைக் கொடுக்க விருப்பமில்லை என்பதற்கான தேர்வே இல்லை. ஆதார் எண்ணை தெரிவிக்கவும் அல்லது ஆதார் அட்டை இல்லாததால் தெரிவிக்க முடியவில்லை என்ற இரண்டு அம்சங்கள்தான் உள்ளன.மலிவான விலைக்கு விற்பனையாகும் மக்களின் தரவுகள்!ஜனவரி 2018ல் ‘த ட்ரிபியூன்’ பத்திரிகை ஆதார் விவரங்கள் எவ்வளவு மலிவாக பொது வெளியில் கிடைக்கின்றன என்ற மாபெரும் முறைகேட்டை அம்பலப்படுத்தியது.

ரூ.500 கொடுத்தால் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட 100 கோடி ஆதார் அட்டைகளின் விபரங்களைப் பெற முடிந்தது. அடுத்து 300 ரூபாய் கொடுத்தவுடன் ஆதார் அட்டையை பிரிண்ட் செய்து எடுத்துக் கொள்ளும் மென்பொருளையும் அந்த ஏஜென்ட் கொடுத்துள்ளார்.மக்களின் தனிப்பட்ட அந்தரங்க விபரங்கள் ஒருபுறம் சந்தையில் விற்கப்படும் நிலையில், ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பது பெரிய அளவிலான வாக்குரிமை இழப்புக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.

இதேபோன்ற இணைப்புத் திட்டத்தை செயல்படுத்திய பிறகுதான், தெலுங்கானாவில் பலர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்கிறார்கள்.சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரா, தில்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களிலும் லட்சக் கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தன.

ஒரே எண்ணுடன் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதையும் அம்பலப்படுத்தினர்.இவற்றையெல்லாம் சரி செய்யத்தான் ஆதார் இணைப்பு அவசியமாகிறது என தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆதாரை அறிமுகப்படுத்தியபோது அது சட்டவிரோதமானது எனக் கூறி பல்வேறு இடதுசாரி அமைப்புகள் அதைக் கடுமையாக எதிர்த்தன.

நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதாரைப் பயன்படுத்தப் போவதாக முதலில் அறிவித்தனர். பிறகு பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, மின் இணைப்பு, மொபைல் எண், சமையல் கேஸ் என ஒவ்வொன்றாக இணைக்க வைத்து இப்போது தேர்தல் அடையாள அட்டையையும் இணைக்கச் சொல்கின்றனர்.

ஆதாரை வங்கிக் கணக்குகளுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது, தமிழகத்தின் தேவ சகாயம் உள்ளிட்ட சிலர் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இப்படி இணைப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது.

வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பது அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் குடிமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பறிக்கக் கூடும். எனவே, இது அரசியலமைப்புக்கு இரட்டிப்பு விரோதமானது எனக் கூறலாம். இது இந்தியாவின் தேர்தல் முறையில் எஞ்சி இருக்கும் ஜனநாயக உரிமையையும் முடிவுக்குக் கொண்டு வரும்.

தேர்தல் ஆணையத்தையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் வைத்து விளையாடியதன் மூலம்தான் மூன்றாவது முறையாக மோடி ஆட்சி கட்டிலில் அமர முடிந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இச்சூழலில் இப்படியொரு நிகழ்வு அரங்கேறுகிறது.

ஜான்சி