வருவேன்... பழைய RGV ஆக திரும்ப வருவேன்!
ராம் கோபால் வர்மா... இந்தப் பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் இந்திய சினிமா ஆர்ப்பரிக்கும். இந்தி ‘சர்கார்’, ‘சர்கார் ராஜ்’, ‘சர்கார் 3’ என பொலிடிக்கல் ட்ரையாலஜி, ‘சத்யா’, ‘கம்பெனி’, ‘டி’ என கேங்ஸ்டர் படங்களால் இந்திய சினிமாவை அதிர வைத்த மாஸ் இயக்குநர். இன்று அப்படியே தலைகீழ். பி கிரேட் படங்கள், அதீத கவர்ச்சி, தினமொரு கருத்து, அதன் மூலம் இணைய கலகம் என மனிதர் வேறு ஒரு நபராக மாறிவிட்டார்.
 என்னாச்சு..?
Zone out... இதுதான் சரியான வார்த்தையா இருக்கும்னு நினைக்கிறேன். என்னுடைய பாதையில் இருந்து விலகி வேற ஸோனுக்கு போயிட்டேன். ஆனா, திரும்ப வரணும். அதுக்குதான் அடுத்தடுத்து சில கதைகள் எழுதிட்டு இருக்கேன். மேலும் இந்த ‘சாரி’ (Saree) படம் கூட நான் கதை கொடுத்து கிரி கிருஷ்ண கமல் இயக்கியிருக்கார். கதை, தயாரிப்பு மட்டும்தான் என்னுடைய பார்ட்.
 ‘சாரி’... எதனால் இந்தப் பெயர்?
பெண்களுக்கு எதிரா இந்தியாவில் என்ன குற்றம் நடந்தாலும் முதலில் கை காட்டுறது அவங்க உடையைத்தான். உண்மையில் உடைக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்திய கலாசாரத்தின் அடையாளமா சொல்லப்படுகிற புடவைதான் இருக்கும் அத்தனை உடைகளைக் காட்டிலும் கவர்ச்சியான உடை. ஆனா, அதை உடுத்தினால் நாங்கள் கையெடுத்து கும்பிடுவோம் அப்படின்னு போலி நாடகம் ஆடறாங்க.
 இந்த முகத்தை கிழிக்கணும்னு நினைச்சுதான் இந்தக் கதையை எழுதினேன்.புடவை மட்டுமல்ல... பெண்களைத்தானே இந்திய கலாசாரத்தின் அடையாளமாக சொல்கிறார்கள்?அது மாறணும். உன்னுடைய குடும்ப கவுரவத்தையும், கலாசார கற்பிதங்களையும் ஏன் இன்னொரு பாலினத்தின் மேல் புகுத்தி அவர்களை நீ சொல்லும் அல்லது நீ எழுதிய கட்டுப்பாடுகளுக்கு ஏத்த மாதிரி வாழணும்னு நினைக்கிற?
 எந்த ஜீவராசிகளிலும் இல்லாத பழக்கம் இது. ஒருவேளை ஒரு பொண்ணு அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாழ நினைச்சா அவள் குணத்தின் மேல கேள்வி கேட்கிறது... இதெல்லாம் எப்படி, எங்கே ஆரம்பிச்சது என்கிறது கூட தெரியல. மோசமான மிருகம் மனிதன்தான். உங்கள் படங்களிலேயே நீங்கள் பெண்களை போகப் பொருளாக அல்லது காமத்தின் அடையாளமாகத் தானே காட்டுறீங்க?
 பெண்களின் அழகு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. திரையில், நேரில், அவளை எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் அதற்குச் சிறப்பு சேர்க்கணும் என்கிறதுதான் என்னுடைய எண்ணம். பெண்ணின் அழகு அவளை இடையூறு செய்யாமல் ரசிக்க, கொண்டாட மட்டுமே. டீசிங், வன்முறை, தாக்குதல்... இதற்கெல்லாம் கிடையாது. அவளுக்கு நட்பு ரீதியா கை குலுக்கக் கூட அவள் அனுமதி தேவை.திரையில் அத்தனை கவர்ச்சியும் காட்டி பிறகு கருத்து சொல்லும் போது அது எடுபடுமா?
 இப்படிக் கேள்விகள் கேட்டு கதை எழுத ஆரம்பிச்சா வாரத்துக்கு ஒரு படம் கூட வராது. இதுதான் ஸ்ட்ரக்சர்ன்னு இங்கே மார்க்கெட் உருவாக்கப்பட்டிருக்கு. அதைத் தாண்டி நாம புதிதா செய்யும்போது அதில் அதிகபட்சம் புரட்சி இருக்கும். ஆனால், வருமானம் இருக்காது. நிச்சயம் இந்த நிலை மாறும் பொழுது கதை மாந்தர்களும் மாறிடுவாங்க. என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.
‘சாரி’ படம் எதைப்பற்றி பேசப்போகிறது?
டிஜிட்டல் ஸ்டாக்கிங்... இன்னைக்கு ரொம்ப சுலபமா பெண்களை ஸ்டாக்கிங் செய்யறாங்க. அதுக்கு மிகப்பெரிய பிளாட்ஃபார்மா சோசியல் மீடியாக்கள் மாறி இருக்கு. ஒரு மெசேஜ் போதும் ஒரு பொண்ண குழப்பறதுக்கு.
அதைத்தான் இந்தப் படம் பேசும். ஒரு பொண்ணு டிஜிட்டலில் ஆக்டிவ், ஆனால், வெறும் புடவை கட்டிய புகைப்படங்கள், ரீல்ஸ்தான் அந்தப் பொண்ணு பதிவேற்றுவா. ஆனாலும் அவளுக்கு டிஜிட்டலிலேயே ஸ்டாக்கிங், தேவையில்லாத பிரச்னைகள் ஒரு சைக்கோ மூலமாக வந்து சேருது. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் விளைவுகளும்தான் படம். டிஜிட்டலில் பெண்கள், தானாக முன்வந்து ஸ்கின் ஷோ காட்டும் நிலையை எப்படி பார்க்கிறீங்க?
அதில் நாம் கமெண்ட் செய்ய முடியாது. அதன் மூலமா பலன்கள் இருக்கிறதாலும் நாம் கொடுக்கிறதாலும்தான் அவங்களும் அதை பயன்படுத்துகிறார்கள்.அதேபோல ஒரு பொண்ணு கவர்ச்சியா உடை உடுத்தறா என்கிறதுக்காக அவளை குணத்தின் அடிப்படையில் எடை போடுவதும் தப்பு.
இப்படி உடை அணிந்தால் யார் கூப்பிட்டாலும் வருவா என்கிற அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு உடை... அவரவர் வசதிக்கு ஏற்ப அது மாறிக்கிட்டே இருக்கும். நம்மூரில் துப்பட்டா இல்லை என்றாலே அது கவர்ச்சி. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பிகினியே கவர்ச்சி கிடையாது. பார்வை மாறினால் எல்லாம் மாறும். என்ன கருத்து அல்லது தீர்வு கொடுக்கப் போகிறது ‘சாரி’ படம்?
தீர்வு ஒண்ணுதான். யாரையும் சுலபமா நம்பாதே. ரொம்ப சீக்கிரம் ரிலேஷன்ஷிப்புக்குள்ள போவதையும் தவிர்க்கணும். ஒரு பெண்ணை ரசிக்க, விரும்ப எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவள் அனுமதி இல்லாமல் அவளை நெருங்க நினைக்கறது தவறு. அதிலும் வன்முறை, தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் இதெல்லாம் ரொம்பவே பெரிய தவறு. இதைத்தான் இந்தப் படம் பேசும் .
சமூகத் தீர்வாக என்ன செய்தால் இதெல்லாம் மாறும் என நினைக்கிறீங்க?
தண்டனைகள் தீவிரமாகணும். இந்தியாவில் நடந்த கொடூரமான வன்கொடுமை வழக்குகள் அத்தனையும் எடுத்து பாருங்க... எதிலுமே பெண்களுடைய ஆடை கவர்ச்சியாகவோ அல்லது கண்களை உறுத்தும் விதமாகவோ இருந்திருக்காது. ஆண்கள் செய்கிற தப்புக்கு ஒரு காரணம் வேணும், சுலபமா பாதிக்கப்பட்டவங்களையே குற்றம் சொல்லணும், அதற்கு ஒரு கருவிதான் உடை.
மேலும் போதை பழக்கம் பெருகிடுச்சு. சின்னச் சின்ன பசங்க கைகளில் கூட கஞ்சா உள்ளிட்ட போதைகளைப் பார்க்கமுடியுது. எல்லாத்துக்கும் கடுமையான சட்டமும் தண்டனையும்தான் தேவை. அதையும் இந்தக் கதையில் நான் சொல்லி இருக்கேன்.
பழைய ராம் கோபால் வர்மாவை எப்போது பார்க்கப் போகிறோம்?
அதற்கு ஒரே பதில் ‘சிண்டிகேட்’ படம். இந்தியாவை ஆட்டிப் படச்சுக்கிட்டு இருக்கிற சிஸ்டத்தை கேள்வி கேட்கக்கூடிய படமா அந்தப் படம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் என்னுடைய ஜோனரில் இதுவரை இல்லாமல் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் ஹாரர் ப டவேலைகளும் போயிட்டு இருக்கு. கூடிய சீக்கிரம் அந்த பழைய RGVயை பார்ப்பீங்க.
ஷாலினி நியூட்டன்
|