பெருநாரைகளைக் காத்த தேவி!
டைம் இதழ் தந்த அங்கீகாரம் இது
சமீபத்தில் அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகையால் 2025ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த பெண்மணிகள் பட்டியலில் இடம்பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் அசாமைச் சேர்ந்த பூர்ணிமா தேவி பர்மன்.  பெருநாரை இனத்தை அழிவிலிருந்து பாதுகாத்தமைக்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்து வைரலாகிவிட்டார் பூர்ணிமா தேவி பர்மன். தற்போது அவர் செய்த மற்றும் செய்து வருகின்ற பணிகளும், செயல்திட்டங்களும் பலரையும் பாராட்ட வைத்துள்ளன.  அதுமட்டுமல்ல. ஏற்கனவே இந்திய அரசு வழங்கும் பெண்களுக்கான மிக உயரிய சிவில் விருதான, ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதினையும் 2017ம் ஆண்டே பெற்றவர் பூர்ணிமா தேவி பர்மன். இப்போது உலக அங்கீகாரம் அவருக்கு மற்றொரு மகுடம்.
 யார் இந்த பூர்ணிமா தேவி பர்மன்?
ஒரு காலத்தில் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட ஓர் இனம் பெருநாரை. இதனை ஆங்கிலத்தில், ‘Greater adjutant’ என்பார்கள்.
ஆனால், இன்றோ மூன்றே மூன்று பகுதிகளில்தான் அதன் இனப்பெருக்க வாழ்விடங்களே உள்ளன. இதில் இரண்டு பகுதிகள் இந்தியாவினுள்ளும், ஒன்று கம்போடியாவிலும் இருக்கின்றன.
இந்தியாவில் அசாம் மற்றும் பீகாரின் பாகல்பூரிலுள்ள ஒரு சிறிய இடத்திலும் இந்த பெருநாரைகளின் இனப்பெருக்க வாழ்விடங்கள் உள்ளன.
இதனால் அழிவின் விளிம்பில் சென்ற இந்த பெருநாரை இனத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் காக்கும் தேவியாக வந்துசேர்ந்தார் பூர்ணிமா தேவி பர்மன். அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் பிறந்தவர் பூர்ணிமா. சிறுவயதில் இருந்தே இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதற்குக் காரணம், அவரின் பாட்டி. அசாமின் பலாஷ்பரி நகரிலுள்ள தன் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தார் பூர்ணிமா.
இயற்கையின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டிருந்த அவரின் பாட்டி, சிறு வயதில் பூர்ணிமாவிற்கு நிறைய கதைகளைச் சொல்லி வளர்த்துள்ளார். அதில் மரங்கள்தான் ராஜாக்கள். பறவைகளும், நாரைகளும், பூச்சிகளும் அங்கு வசிக்கும் குடிமக்கள். பாட்டி கற்றுத் தந்த அந்த இயற்கை ஆர்வத்தால், விலங்கியலில் மாஸ்டர் டிகிரி முடித்தார் பூர்ணிமா. இதிலும் குறிப்பாக சூழலியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் கோர்ஸை சிறப்புப் பிரிவாக எடுத்துப் படித்தார்.
அப்போது பேராசிரியர்கள் அவரை பறவை பார்த்தல் நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அழிந்துவரும் இனங்கள் பற்றிய விவாதங்களை மேற்கொண்டுள்ளனர். அப்படியாகத்தான் பெருநாரை பூர்ணிமாவின் கவனத்திற்குள் நுழைந்தது. இந்நிலையில் பூர்ணிமா தனது பிஹெச்.டி பட்ட ஆய்வாக அழிவின் விளிம்பிலுள்ள பெருநாரையை எடுத்தார். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
அது 2007ம் ஆண்டு. பூர்ணிமா வசித்து வந்த பகுதியிலேயே பெருநாரைகளின் வாழ்விட மரம் ஒன்று வெட்டப்படுவதாக அவருக்கு அழைப்பு வந்தது. ஸ்பாட்டிற்குச் சென்றவருக்கு பேரதிர்ச்சி. ஒருவர் அந்த மரத்தை கோடரி கொண்டு வேகமாக வெட்டிக் கொண்டிருந்தார். இதை பூர்ணிமா தட்டிக் கேட்க அவரோ, ‘இந்த நாரை ஒரு கெட்ட சகுனம் உள்ள பறவை. அத்துடன் பூச்சி, நோய் பரப்பும் தன்மையைக் கொண்டது’ என்றுள்ளார். இந்நிலையில் மரம் வெட்டியவருக்கு ஆதரவாகப் பலரும் குவிந்துள்ளனர்.
இதனால் ஏதும் செய்யமுடியாது திணறிய பூர்ணிமா, மேற்கொண்டு எதையும் பேசாமல் அங்கிருந்து அமைதியாக நகர்ந்துவிட்டார். ஆனால், இங்கிருந்துதான் அவர் பெருநாரை இனத்தைக் காக்க வேண்டுமென தீர்மானித்தார்.
‘ஹர்கிலா ஆர்மி’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.அசாமில் பெருநாரைக்கு ஹர்கிலா என்று பெயர். இதற்கு எலும்பு விழுங்கும் உயிரினம் என்று அர்த்தம். இவை குப்பை மேடுகளுக்கு அருகே காணப்படுவதால் இந்தப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர் அசாமிய மக்கள்.
இந்த ஹர்கிலா ஆர்மியில் வனவிலங்குகளையும் இயற்கையையும் காக்க நினைக்கும் அர்ப்பணிப்புள்ள பெண்களை இணைத்தார். பெருநாரையைக் காக்கும் பெண்களாலான இந்த ராணுவப் படையை அடிமட்டத்திலிருந்து வளர்த்தெடுத்தார்.
இவர்கள் வழியே பெருநாரை பற்றிய தப்பான எண்ணங்களை மக்களிடையே மாற்றினார்.அதைக் காக்க வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அவை குப்பை மேடுகளில் வாழ்வதால்தான் அவற்றை தவறான எண்ணத்துடன் அணுகுகின்றனர் என்பதை உணர்ந்து அதன் வாழ்விடங்களைச் சுத்தப்படுத்தினார்.
ஆரம்பத்தில் கிண்டலும் கேலியும் செய்தவர்கள் பிறகு மெல்ல மெல்ல புரிந்துெகாள்ளத் தொடங்கினர். தொடர்ந்து நிறைய விழிப்புணர்வுகள் செய்து பெருநாரையைப் பரவலாகக் கொண்டு சேர்த்தார். இன்று பூர்ணிமாவின் ஆர்மியில் 20 ஆயிரம் பெண்கள் உள்ளனர். அவரின் நெட்வொர்க் என்பது அசாமில் மட்டுமல்ல.
இந்தியா, கம்போடியா முழுவதிலும் இருக்கின்றன.ஆரம்பத்தில் இப்பகுதியில் 450 பெருநாரைகள் எஞ்சியிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 1800க்கும் அதிகமாக உயர்ந்தது. இதற்கு பூர்ணிமா மற்றும் அவரின் ஆர்மியே காரணம்.
சமீபத்தில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றிய வகைப்பாடு அமைப்பு, அழிந்து வருபவை என வகைப்படுத்தியிருந்த பெருநாரை இனத்தை, இப்போது ‘அச்சுறுத்தலுக்கு அருகில்’ என்ற வகைப்பாட்டிற்குள் மாற்றியுள்ளது. இந்த அளப்பரிய பணியைச் செய்தவர் பூர்ணிமா. அதனாலேயே அவரை, ‘நாரை சகோதரி’ என பலரும் அன்புடன் அழைக்கின்றனர்.
இதற்காக பூர்ணிமா பல்வேறு உலக அங்கீகாரங்களும், விருதுகளும் பெற்றுள்ளார். ஐநாவின் சுற்றுச்சூழலுக்கான உயரிய, ‘சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்’ விருது 2022ம் ஆண்டு வாங்கினார். கடந்த 2024ம் ஆண்டு கிரீன் ஆஸ்கார் என வர்ணிக்கப்படும் ‘விட்லி கோல்டு அவார்டை’யும் பல்லுயிர் பாதுகாப்பிற்காகப் பெற்றார். இப்போது டைம் இதழ் அவரை அங்கீகரித்துள்ளது.
இன்று பூர்ணிமா, ஹர்கிலா ஆர்மியிலுள்ள பெண்களால் நெய்யப்பட்ட பெருநாரை உருவங்களுடன் கூடிய பாரம்பரிய உடையையும், சால்வையையுமே அணிந்துகொள்கிறார். இதனை விற்பனைக்கும் வைத்து ஆர்மியிலுள்ள பெண்களின் வருமானத்திற்கும் வழிகோலுகிறார். இதுதவிர, புதிய பெருநாரை குஞ்சுகளுக்குப் பிறந்தநாள் என்றால் அதனை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்கிறார்.
‘இந்தப் பெருநாரைகள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு ப குதி’ என உரக்கச் சொல்லும் பூர்ணிமா, தற்போது ஹர்கிலா கற்றல் மையம் வழியாக பெருநாரை குறித்தும் இயற்கையைப் பாதுகாக்கும் அவசியம் பற்றியும் குழந்தைகளுக்குப் போதித்து வருகிறார்.
பேராச்சி கண்ணன்
|