விலங்குகளின் எலும்புகளிலே கலைவண்ணம் கண்டார்!



பெரும்பாலான மக்களின் கைகளுக்கு, ஏதாவது ஒரு விலங்கின் எலும்புகள் கிடைத்தால், உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த எலும்புகளைத் தூர வீசிவிடுவார்கள்.

ஆனால், ஆசிஷ் அல் ரஹ்மானின் கைகளுக்குக் கிடைத்தால், அந்த எலும்புகளை வைத்து அற்புதமான கலைப்பொருளாக மாற்றிவிடுவார். 
அதுதான் அவரது தனித்துவம்.அந்தக் கலைப்பொருட்கள் எலும்புகளைத் தூர வீசுகின்ற மக்களைக் கூட கவர்ந்திழுக்கும்; அதை வாங்குவதற்கும் தூண்டும். அந்தளவுக்கு அனைவரையும் வசீகரிக்கிறது ஆசிஷின் கலைப்பொருட்கள்.

விலங்குகளின் எலும்புகள், மரங்கள், முள்ளம்பன்றியின் முட்கள், ஆடுகளின் கொம்புகள், இறகுகள் மற்றும் தேவையில்லை என்று குப்பையில் வீசப்பட்ட இரும்புப் பொருட்களை வைத்து அழகழகான கலைப்பொருட்களைச் செய்து வருகிறார். 
ஆசிஷின் கலைப்பொருட்கள் உலகெங்கிலும் உள்ள பல வீடுகள், உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள சுவர்களையும், மேசைகளையும் அலங்கரிக்கின்றன.  காஷ்மீரில் விலங்குகளின் எலும்புகளில் கலைப்பொருட்களை வடிவமைக்கும் முதல் கலைஞர் ஆசிஷ்தான்.

யார் இந்த ஆசிஷ் அல் ரஹ்மான்?

காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஸ்ரீநகரில் உள்ள குலாப் பாக் எனும் இடத்தில் பிறந்து, வளர்ந்தவர் ஆசிஷ். விலங்குகள், தாவரங்கள் என இயற்கையின் மீது தீவிரமான காதல் கொண்டவர் இவர். 

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால், கலையின் மீது அவருக்கு ஆர்வம். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, பகுதி நேரமாக 2021ம் வருடம் ‘ஸ்டிக் அண்ட் போன்ஸ்’ என்ற பிராண்டில் கலைப்பொருட்களைத் தயாரித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

விலங்குகளின் எலும்புகள், காடு மற்றும் சாலையின் ஓரங்களில் விழுந்துகிடக்கும் மரத்துண்டுகள்தான் இவரது முக்கிய மூலப்பொருட்கள்.

கடந்த 2024ம் வருடம் வேலையை உதறிவிட்டு, முழுநேர கலைஞனாக மாறிவிட்டார் ஆசிஷ். ஆனால், ஆரம்ப நாட்களில் அவர் உருவாக்கிய கலைப்பொருட்களுக்கு மக்களிடம் சரியான வரவேற்பு இல்லை. 

இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கைத் தொடங்கி, தனது கலைப் பொருட்கள் குறித்தும், அவை உருவாகும் விதம் குறித்தும் வீடியோக்களைப் பதிவு செய்யத் தொடங்கினார். அவையும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே சென்றடைந்தது. அப்போது இன்ஸ்டாகிராமில் ஆசிஷை 8 ஆயிரம்போர் மட்டுமே பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஆசிஷின் வீட்டுக்குப் பின்புறத்தில் ஒரு மரத்துண்டு கிடந்தது. யாரோ அதை அங்கே வேண்டாமென்று வீசியிருந்தனர். அதை எடுத்து வந்து, அழகாக செதுக்கினார். தான் விரும்பிய வடிவத்தில் அந்த மரத்துண்டு வந்ததும், அதில் ஒரு மின்சார விளக்கைப் பொருத்தினார். 

அந்த மரத்துண்டு, அழகான மேசை விளக்காக மாறிவிட்டது. இந்த மேசை விளக்கு செய்முறையை வீடியோவாக்கி, இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். அந்த வீடியோ செம வைரலானது. ஒரே இரவில் அவரது பக்கத்தை 40 ஆயிரம் பேர் பின்தொடர ஆரம்பித்தனர். இப்போது ஆசிஷின் பக்கத்தை 1.34 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

மட்டுமல்ல, ஆசிஷின் புதுவிதமான கலைப்பொருட்கள் இளைஞர்கள் மத்தியில் உந்துதலை ஏற்படுத்தியது. ஆசிஷின் தாக்கத்தில் நூற்றுக்கும் மேலான இளைஞர்கள் தேவையில்லை என்று தூக்கி வீசும் பொருட்களிலிருந்து கலைப்பொருட்களைச் செய்ய ஆரம்பித்திருப்பதுதான் அவருக்கான அங்கீகாரம்.இன்னொரு பக்கம் நல்ல வேலையை விட்டுவிட்டு, கலைப்பொருட்களை உருவாக்குவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள் என நெருங்கிய உறவுகளின் விமர்சனத்துக்கு உள்ளானார்.

தம்பி கலீல் மட்டுமே ஆசிஷின் பக்கம் நின்றார். “நீ தப்பான வழியில் போறாய். ஒன்பது மணியிலிருந்து சாயங்காலம் 5 மணி வரைக்குமான வேலைதான் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு...” என்று ஆசிஷுக்கு ஆலோசனையும் வழங்கிக்கொண்டே இருந்தனர். 

ஆனால், ஆசிஷ் தனது கலைப் பாதையை விட்டு எங்கேயும் நகராமல் சென்றுகொண்டே இருந்தார். “என்னோட அப்பா, அம்மாவுக்கே என் மீது பெரிதாக நம்பிக்கையில்லை. மற்றவர்கள் நான் செய்வதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். மட்டுமல்ல, இதனால் எந்தப் பயனும் இல்லை என்று உதாசீனப்படுத்தினார்கள்.

ஆனால், நான் அலைந்து, திரிந்து விலங்குகளின் எலும்புகளையும், உடைந்து போன மரங்களையும் வீட்டுக்கு எடுத்து வந்து, என் வேலையில் ஈடுபட்டேன். தேவையில்லை என்று மக்கள் கருதும் பொருட்களை மிகுந்த அர்ப்பணிப்போடு கலைப்பொருட்களாக மாற்ற ஆரம்பித்தேன்...” என்கிற ஆசிஷின் கலைச் செயல்பாட்டை இன்று புகழாதவர்களே இல்லை.  மட்டுமல்ல, உலகளவில் ஆசிஷின் கலைப் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர்.

ஆசிஷின் தனித்துவமான கலைப் படைப்புகளை காஷ்மீர் அரசாங்கமும் அங்கீகரித்திருக்கிறது. ஆம்; அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆசிஷின் கலைப்பொருட்களைக் கண்காட்சிக்கு வைக்க காஷ்மீரின் கைவினைப் பொருட்கள் துறையின் இயக்குனர் அனுமதி கொடுத்ததோடு, ஆசிஷை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். இதுவரை ஆசிஷ் உருவாக்கிய 2000க்கும் மேலான கலைப்பொருட்கள் விற்பனையாகியிருக்கின்றன. அவரது கலைப் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

த.சக்திவேல்