66 வயதில் இயற்கை முறையில் 10வது குழந்தை!
நோ... நோ... நோ... காதில் பூ சுற்றவில்லை. நிஜம்... சத்தியம்... உண்மை...ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது 66வது வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அலெக்சாண்ட்ரா ஹில்டெப்ராண்ட் என்ற 66 வயது பெண்மணி, பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970களின் இறுதியில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளைப் பெற்றார். இப்பொழுது 50 வயதைக் கடந்த பிறகும் குழந்தைகளைப் பெற்று வருகிறார்.
எந்தக் குழந்தையும் சுகப் பிரசவத்தில் பிறக்கவில்லை. அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு இப்பொழுது 46 வயதாகி விட்டது. 9வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது.
இந்நிலையில்,அலெக்சாண்ட்ரா தனது 66வது வயதில் 10வது குழந்தையை கடந்த மார்ச் 19ம் தேதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என பெயரிட்டுள்ளார். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ஒருவேளை செயற்கை முறையில் கருத்தரிக்கிறாரா?
இல்லை. இயற்கை வழியில்தான் இம்முறையும் இவர் கருத்தரித்திருக்கிறார்.இதுகுறித்து அலெக்சாண்ட்ரா கூறும்போது, “சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். தினமும் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்கிறேன். இரண்டு மணி நேரம் ஓடுகிறேன். புகை மற்றும் மதுப் பழக்கம் இல்லை. கருத்தடை சாதனங்களை என் வாழ்நாளில் பயன்படுத்தியதே இல்லை...” என்றார்.
அலெக்சாண்ட்ரா ஹில்டெப்ராண்ட் இவ்வளவு அதிக வயதில் குழந்தை பெற்றுக்கொண்டது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2023ம் ஆண்டு உகாண்டாவைச் சேர்ந்த சபினா நமுக்வாயா என்ற பெண்மணி, தன் 70வது வயதில் இரட்டை குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சபினா நமுக்வாயா, ஐவிஎப் மூலம்தான் டிவின்ஸை பெற்றார்.ஸோ, இயற்கை முறையில் கருத்தரித்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுள்ள அலெக்சாண்ட்ரா ஹில்டெப்ராண்ட், வைரல் பெண்மணியாக வலம் வருகிறார்!
காம்ஸ் பாப்பா
|