கேரளத்து தந்தை பெரியாரின் பயோபிக் இது!
‘‘மலையாளிகளும் தமிழர்களும் ஒரு தாய் மக்கள். இது என்னுடைய பார்வை மட்டுமல்ல, வரலாறும் அப்படிதான் கூறுகிறது. நிலப்பரப்பிலும் இவ்விரு மாநிலங்களும் சேர்ந்தே இருந்தன. கலாசாரம், பழக்க வழக்கங்கள், வீரம் என எல்லாமே ஒரு தாய் மக்கள் என்பதை காண்பித்துள்ளன.  இந்தியாவில் சாதிய பாகுபாடு அதிகமா இருந்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இதை எளிதில் மறக்க முடியாது. சுவாமி விவேகானந்தாவும் அந்தக் கொடுமைகளைக் குறித்து பதிவு செய்திருக்கிறார்.  சாதிய அடக்குமுறையால் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்த அடித்தட்டு மக்களுக்காக உரிமைக் குரல் எழுப்ப்பியவர் தோழர் பி.கிருஷ்ணபிள்ளை. கேரளாவில் கம்யூனிசத்தைத் தோற்றுவித்தவர் என்றே சொல்லலாம். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தவர். தமிழ்நாட்டுக்கு பெரியார், அண்ணா எப்படியோ அதுமாதிரி கேரளத்துக்கு பி.கிருஷ்ணபிள்ளை. தேசத்துக்காக வாழ்ந்து இளம் வயதில் பாம்பு கடித்து மரணம் அடைந்தவர்.

சினிமா என்பது பொழுது போக்கு என்பதைத்தாண்டி கலாசாரம், பண்பாடு, தலைவர்களின் தியாகம், மண்ணின் வரலாறு கலந்ததாக இருக்க வேண்டும்.
பல உலக சினிமாக்களில் இதைப் பார்க்க முடியும். அப்படி நம்மைப் பற்றி சொல்ல வேண்டியவை நிறையவே இருக்கு. அந்த முயற்சிதான் ‘வீர வணக்கம்’...’’ மலையாளம் கலந்த தமிழில் நீண்ட விளக்கம் கொடுத்தபடி பேச ஆரம்பித்தார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன். அப்படியென்றால் இது கிருஷ்ணபிள்ளையின் பயோபிக் படமா?
இதுல இரண்டு கதை இருக்கு. சாதிக் கொடுமை அதிகமா நடக்கும் ஊர். அதுல காதல் ஜோடிக்கு பிரச்னை ஏற்படுகிறது. ஊர் மக்களும் சாதிய கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.
அங்குள்ள பெரிய மனிதர் பரத்.
அவர் சாதி, மதம் பார்க்காமல் எல்லோரிடமும் முற்போக்கு சிந்தனையுடன் பழகுகிறார். அப்பாவி மக்களை அரணாக இருந்து பாதுகாக்கிறார். கலக்கத்தில் இருக்கும் அந்த மக்களிடம் தைரியத்தை வரவழைப்பதற்காக சுதந்திரப் போராட்டத் தியாகியான அவருடைய தாத்தாவின் தியாகத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார். நாகர்கோவில் அருகில் உள்ள இடலாக்குடி சிறையில் என்னுடைய தாத்தாவும், அவருடைய நண்பரான தோழர் பி.கிருஷ்ணபிள்ளையும் ஒரே சமயத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்கள். பி.கிருஷ்ணபிள்ளை வாழ்ந்த காலத்தில் அரசியல் களத்தில் ஒன்றாகப் பயணித்த புரட்சிப் பாடகி பி.கே.மேதினி கேரளாவில் இருக்கிறார். அந்த அம்மாவை சந்திக்கும்போது உங்கள் பயம் நீங்கும் என்று ஊர் மக்களை கேரளாவுக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு 97 வயதான அந்த மூதாட்டி 1940களில் தன்னுடைய போராட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிருஷ்ணபிள்ளை எப்படி விடுதலை வாங்கிக் கொடுத்தார் என்பதையும் சொல்கிறார்.
அதைக் கேட்டதும் பரத், அவருடன் வந்த ஊர் மக்கள் தைரியம் அடைகிறார்கள். ஊர் திரும்பும் காதலர்கள் பிரச்னைகளைக் கடந்து எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதை எல்லோரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாகச் சொல்லியுள்ளேன். மீண்டும் சமுத்திரக்கனியுடன் வேலை செய்த அனுபவம் எப்படி?
என்னுடைய முதல் படம் ‘வசந்தத்தின்டே கனல் வழிகள்’. அதில் சமுத்திரக்கனியை நாயகனாக அறிமுகம் செய்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு மலையாளத்திலும் பெருமளவுக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.
எங்கே போனாலும் தோழர்... தோழர்... என கூப்பிட ஆரம்பித்தார்கள். கட்சிப் பாகுபாடு இல்லாமல் பழக ஆரம்பித்தார்கள். பலர் என்னிடம் கிருஷ்ண பிள்ளை பயோபிக் ஏன் பண்ணவில்லை என்று கேட்டார்கள். அதுமட்டுமல்ல, கிருஷ்ண பிள்ளையின் மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அந்தவகையில் இது தமிழ்நாட்டின் கதை என்றும் சொல்லலாம். கிருஷ்ண பிள்ளை வாழ்க்கையில் சொல்ல வேண்டிய அம்சங்கள் நிறையவே உண்டு. எந்நேரமும் காவல் துறை தேடும் நபராக இருந்ததால் சாமியாராக, கோட் சூட் அணிந்த ஆங்கிலேயராக என பல வேஷம் மாறி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். சக்திவாய்ந்த கிருஷ்ண பிள்ளை கேரக்டரில் நடிப்பதற்கு லுக், மேனரிசம் என எல்லாத்துக்கும் சமுத்திரக்கனி சரியான சாய்ஸாக இருந்தார்.
கேரளாவிலும் கிருஷ்ண பிள்ளை பயோபிக் மீது ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், மலையாளத்தில் எடுக்காமல் தமிழில் எடுக்கலாம் என்று முடிவு பண்ணி சமுத்திரக்கனியைத் தொடர்பு கொண்டேன்.
அவரும் ஆர்வத்துடன் நடிக்க வந்தார். கனி சார் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இதுல அவருடைய வேறொரு பரிமாணத்தைப் பார்க்கலாம். வழக்கமாக கனி சார் நிறைய பேசுவார்ன்னு விமர்சனங்கள் வரும். இதுல அவருடைய பேச்சு இடிமுழக்கம் மாதிரி கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கும்.
பரத் தன் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான கேரக்டர்ல வர்றார். மற்ற ஹீரோக்களாக இருந்தால் நோ சொல்லியிருப்பாங்க. இப்போதுள்ள ரொமான்ஸ் இமேஜை மாத்தி அப்பா ரோலில் நடித்தார். அவர் இந்தக் கேரக்டரில் நடிக்க காரணம் அவருடைய ரோல் அந்தளவுக்கு பவர்ஃபுல்.
97 வயதான புரட்சிப் பாடகி பி.கே.மேதினி அம்மா, தேசிய விருது நடிகை சுரபி லட்சுமி, சித்திக், ‘நாடோடிகள்’ பரணி, ரித்தேஷ், அரிஸ்டோ சுரேஷ், ரமேஷ் பிஷாரடி, ஐஸ்விகா, ஆதர்ஷ், சித்தாங்கனா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். இவர்களோடு 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் நடித்துள்ளார்கள்.
5 மியூசிக் டைரக்டர்கள் போதுமா?
கதையின் தேவை அப்படி. எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் இசையில் எல்லா பாடல்களும் மனதை கொள்ளை அடிக்கும்விதமாக வந்துள்ளது. டி.எம்.செளந்தர்ராஜனின் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார்.
கவியரசு, சீனு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். முதலாமவர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பதோடு இந்தியில் சல்மான்கான், ஷாரூக்கான் படங்கள் பண்ணியவர். இரண்டாமவர் மம்மூட்டி, டோவினோ தாமஸ் படங்கள் செய்தவர். இருவரும் சேர்ந்து கேரளா, தமிழ்நாடு அழகை அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பு விசாரத் கிரியேஷன்ஸ். பீரியட் படம் என்பதால் நிறைய இடங்களை ரீகிரியேட் பண்ணினோம்.
சிறப்பு அனுமதியுடன் பல இடங்களில் மேல் மட்ட மின்சாரக் கம்பிகளை படப்பிடிப்புக்காக பூமியில் புதைத்து படமாக்கினோம். ஏராளமான குடிசைப் பகுதிகள், அரண்மனை செட் போட்டோம். எதுவுமே செட் மாதிரி தெரியாது. இந்த உழைப்பு அனைத்தும் ரசிகர்களை உண்மைக்கு அருகில் அழைத்துச் செல்லும்.
உங்களைப் பற்றி சொல்லவில்லையே?
நான் யாரிடமும் சினிமாவை கற்றுக் கொள்ளவில்லை. திரைப்படங்கள்தான் என்னுடைய ஆசான். சிறுவயதிலிருந்து எழுதப் பிடிக்கும். என்னை சுயாதீன இயக்குநர் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். என்னிடம் சொந்தமாக எடிட்டிங், டப்பிங் ஸ்டூடியோ உள்ளது. பல குறும்படங்கள் எடுத்த அனுபவம்தான் எனக்கு சினிமா எடுக்கும் தைரியத்தைக் கொடுத்தது. தமிழ்ப் படம் செய்வதை என்னுடைய கடமையாகப் பார்த்தேன்.
எஸ்.ராஜா
|