தமிழகத்தில் தகதகக்கும் தங்கம்..!
தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சமீபத்தில் இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளது பொதுமக்கள், முதலீட்டாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் எனப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  சமீபத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் 175வது ஆண்டு விழா நடந்தது. அப்போது பேசிய அதன் இயக்குனர், திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவித்தார்.  அத்துடன் பேட்டரி தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழகத்தின் பூமிக்கு அடியில் அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து இன்னும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அதன் அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் தங்கம் மற்றும் லித்தியம் தமிழகத்தில் இருக்கும் விஷயம் பளபளவென மின்னத் தொடங்கியுள்ளது.
 *தங்கமும், இந்தியாவும்...
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது 64 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த விலையேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
இதில் ஒரு முக்கியக் காரணம், ஆபரணமாக அதிக அளவில் தங்கம் தேவைப்படுவதுதான். குறிப்பாக மக்கள்தொகை அதிகமுள்ள நம் இந்தியாவில் தங்கம் முக்கியமான ஓர் ஆபரணம். அதுவும் பண்டிகைக் காலங்கள், விசேஷதினங்கள் வந்தது என்றால் இதன் டிமாண்ட் இன்னும் அதிகமாகும். இதனால், விலையும் ஏற்றமாகும்.
கடந்த ஆண்டு உலக கோல்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவில் செல்வச் செழிப்பின் அடையாளங்களில் ஒன்றாக தங்கம் விளங்குகிறது. இந்திய பெண்கள் சுமார் 24 ஆயிரம் டன் தங்கத்தை ஆபரணங்கள் வடிவில் வைத்துள்ளனர். இது ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தைவிட மிக அதிகமாகும்.
உலகில் அதிகம் தங்கம் வைத்துள்ள முதல் ஐந்து நாடுகளின் தங்கத்தைவிடவும் அதிகமாகும். அதாவது அமெரிக்கா 8 ஆயிரம் டன் தங்கமும், ஜெர்மனி 3,300 டன்னும், இத்தாலி 2,450 டன்னும், பிரான்ஸ் 2,400 டன்னும், ரஷ்யா 1,900 டன்னும் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40 சதவீதம் தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்களிடம் 6,720 டன் தங்கம் உள்ளது. இது இந்தியாவின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவில் 28 சதவீதமாகும்...’’ எனக் குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்தே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எந்தளவுக்கு தங்கத்தின் பயன்பாடு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதுதவிர, தங்கத்தின் வழியே ஒரு நாட்டின் பொருளாதாரம் மதிப்பிடப்படுவதால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதனால், தங்கத்திற்கு டிமாண்ட் உருவாகி தினமும் விலை ஏற்றத்தைச் சந்திக்கிறது. ஆனால், இன்றுவரை தங்கத்திற்கு மாற்று உலோகமும் இல்லை.
தங்கத்திற்கு அடுத்ததாக வெள்ளி மட்டுமே இருக்கிறது. இதற்கிடையில் இப்போது பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய தங்கம் இன்னும் சில ஆண்டுகள் வரையே வெட்டியெடுக்க முடியும் என்றும் தெரிவித்து வருகின்றனர் நிபுணர்கள். இந்நிலையில்தான் தங்கம் இருக்கும் செய்தி முக்கியத்துவமாகிறது.
பொதுவாக இந்தியாவில் ஏழெட்டு இடங்களில் தங்கம் கிடைக்கின்றன. அதில் முதலாவதாக இருப்பது நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கோலார் கோல்டு ஃபீல்ட்ஸ்தான். ‘கேஜிஎஃப்’ படத்திற்குப் பிறகு இந்தக் கோலார் தங்க வயல்கள் பரவலாக கவனம் பெற்றது.இந்த கோலார் தங்க வயல்கள் இந்தியாவின் பழமையான மற்றும் ஆழமான தங்கச் சுரங்கத்திற்கு பிரபலமானது.
கடந்த 1880ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. இதன் வளர்ச்சியால் அதிகப்படியான உழைப்பு தேவைப்பட தமிழகத்திலிருந்து மக்கள் அதிக அளவில் சென்று கோலாரில் குடியேறினர். இந்தச் சுரங்கங்கள் அதன் வாழ்நாளில் சுமார் 900 டன் தங்கத்தை உற்பத்தி செய்தன. இது 2001ம் ஆண்டு மூடப்பட்டது.
இதற்கு அடுத்ததாக கர்நாடக அரசுக்குச் சொந்தமான ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மிக முக்கியமான தங்கச் சுரங்கங்களில் இதுவும் ஒன்று. இதிலிருந்து ஆண்டுக்கு 1.8 டன் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. இதன்பிறகு மூன்றாவதாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன.
இதனை கடந்த 2020ம் ஆண்டுதான் இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்தது. ஆரம்பத்தில் இதில் 3 ஆயிரம் டன் தங்க இருப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டதும் பரபரப்பாகி பலரின் கவனத்தைப் பெற்றது சோன்பத்ரா. பின்னர் 3 ஆயிரம் டன் தங்கத் தாதுவிலிருந்து 160 டன் தங்கத்தை மட்டுமே கொண்டு வரமுடியும் என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெளிவுபடுச்த்தியது.
இதற்கடுத்து நான்காவதாக கர்நாடகாவின் கோவா எல்லை அருகே இருக்கும் கனஞ்சூர் சுரங்கங்கள் சொல்லப்படுகின்றன. இதிலிருந்து 1.5 டன் தங்கம் வெட்டியெடுக்கப்படும்படி இருந்தது. ஆனால், இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லை. ஏனெனில், 2021ம் ஆண்டு ஒன்றிய அரசு இதன் சுரங்கக் குத்தகையை நிராகரித்தது.
ஐந்தாவதாக இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கமான ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஜோன்னாகிரி தங்கச் சுரங்கம் குறிப்பிடப்படுகிறது. இதனை டெக்கான் கோல்டு மைன்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இதிலிருந்து ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்தான் இந்தச் சுரங்கம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதன்பிறகு ஆந்திராவிலுள்ள ராமகிரி தங்கச்சுரங்கமும், ஜார்க்கண்ட்டில் உள்ள லாவா தங்கச் சுரங்கமும் உள்ளன. இருந்தும் இந்தியா ஆண்டுதோறும் 800 மெட்ரிக் டன், அதாவது சுமார் 8 லட்சம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்கிறது. காரணம் டிமாணட்.இதனாலேயே இந்தியாவில் தங்கம் கிடைக்கும் இடங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாகவே தமிழகத்தில் நடந்தது.
*லித்தியம்...
இதனுடன் கூடவே லித்தியம் அதிகம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறது இந்திய புவியியல் ஆய்வு மையம். இந்த உலோகம் பேட்டரி பயன்பாட்டில் முக்கியத்துவமான ஒன்று. எலக்ட்ரிக் வண்டிகளுக்கு இந்த பேட்டரிகள் முக்கியமானதாக உள்ளன. அத்துடன் மாற்று எரிசக்தியிலும் பயன்படுகிறது. தவிர பாதுகாப்புத் துறை, வேளாண்துறை, மருத்துவத் துறை, ஹை-டெக் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் எனப் பல இடங்களில் லித்தியத்தின் பயன்பாடு உள்ளது.
அப்படியாகத்தான் கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா மாவட்டத்தில் இந்தியாவின் முதல் லித்தியம் சுரங்கங்கள் திறக்கப்பட்டன. ஏற்கனவே 2023ல் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன்கள் இருப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
உலகிலேயே இது அதிக கையிருப்பு எனச் சொல்லப்பட்டது. ஆனால், நிதி நிலைமைகாரணமாக இதில் பெரிதாக ஆர்வம் காட்டப்படவில்லை என்கின்றன தகவல்கள். இந்நிலையில்தான் லித்தியம் குறித்தான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. அப்படியாகவே தமிழகத்தின் சில இடங்களில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தங்கமும், லித்தியமும் தமிழகத்தின் பூமிக்கு அடியில் இருப்பது கண்டறியப்பட்டாலும், அது வெட்டியெடுப்பதற்கான அனுமதிகள் கிடைத்தால் அது எப்படி மேற்கொள்ளப்படும் என்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஏனெனில், கோலார் தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்ட காரணங்களில் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பேராச்சி கண்ணன்
|