சிம்பொனி ராஜா!
இளையராஜா தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றியுள்ளார். சிம்பொனி இயற்றுவது பெரிய சாதனை என்கிற அளவில் அதைப் புரிந்து வைத்திருக்கிறோமே தவிர ‘சிம்பொனி என்றால் என்ன?’ என்பதைக் குறித்த அடிப்படைப் புரிதல் நமக்கு இல்லை.  சிம்பொனி என்பதை ‘இசைப்பொழிவின் ஒத்திசைவு’ என வரையறுக்கலாம். பல்வேறு இசைக்கருவிகளின் வழியாகச் சாத்தியப்படுகிற உச்சபட்ச ஒத்திசைவை (Harmony) அடைதல். ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில், பதினாறாம் நூற்றாண்டிலேயே சிம்பொனிக்கான அடிப்படை விதிகள் உருவாகிவிட்டன.  சிம்பொனி இசைக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ‘Three Movement’ கட்டமைப்பே பின்பற்றப்பட்டது. முதல் மூவ்மெண்ட்டில் இன்னதெனச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாத உணர்ச்சிகளைச் சீரான முறையில் இசையாக அடுக்கிச் செல்வார்கள். இது சற்றே abstract தன்மையுடன் பண் அமைக்கப்பட்டிருக்கும்.  இரண்டாவது மூவ்மெண்ட்டில் தாள லயத்தின் ஒருங்கமைதி கூடியிருக்கும். முதல் பகுதியின் விளக்கவுரை மாதிரியும் அமையலாம். இந்தப் பகுதியில் அவ்விசையின் நோக்கத்தை, அது கிளர்த்த விரும்புகிற உணர்ச்சிகளை நம்மால் பகுத்து அறிய முடியும். இறுதி மூவ்மெண்ட் மிகவும் சுருக்கமானது. ஒரு விடைபெறுதல் போல. இன்றைக்கு இயற்றப்படுகிற சிம்பொனியின் வடிவம் பதினெட்டாம் நூற்றாண்டில் மெருகேற்றப்பட்டது. மூன்றிலிருந்து four movements ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது.
 சீர்மை (Symmetry), சமநிலை தவறாமை (Balance), நோக்கத்திலிருந்து வழுவாதிருத்தல் (Discipline), இயைந்து ஒழுகுதல் (Temperament) ஆகியவை இதன் அடிப்படைகள். நாட்டுக்கேற்ப இதிலேயே பல வகைகள் உள்ளன. வியன்னாவில் இசைக்கப்படும் சிம்பொனியின் தொனியும் அடர்த்தியும் ஃபிரான்சில் அரங்கேற்றப்படும் சிம்பொனியுடன் வேறுபடலாம். ஒருவரின் மேதைமையைப் பொறுத்து இதன் வரம்புக்குள் சில அத்துமீறல்களும் தாவல்களும் நிகழ்த்தப்படலாம்.
எடுத்துக்காட்டுக்கு, சிம்பொனிக்குள்ளேயே ஒரு முரணியக்கத்தை (Counterpoint) அக்கலைஞர் உருவாக்கி வைத்திருப்பார். இதன் வழியாகக் கட்டற்ற உணர்ச்சிகளின் மோதலை ஏற்படுத்தி, செறிவான இசையனுபவத்தை அவரால் வழங்க முடியும். மேலும் பல உள்ளடுக்குகள் மிகுந்த அர்த்தத் தளங்களுக்கு சிம்பொனியை நகர்த்த முடியும்.
முதல் மூவ்மெண்ட் sonata formஇல் அமைந்திருக்கும். இதில்தான் சிம்பொனியின் உரிப்பொருள் (Theme) அறிமுகப்படுத்தப்படுகிறது. பெரும் புயற்காற்று வந்து நம்மை வாரிச் சுருட்டுவதைப்போல, ஆற்றல் மிகுந்த இசை ஆலாபனை இங்கேயே தொடங்கிவிடும். இதை tonic என்றும் dominant என்றும் பிரித்திருக்கிறார்கள். ஒருபக்கம் இசைக் கருவிகளின் ஓசைநயம் பெருகி, இரைச்சலை நெருங்கக்கூடிய அளவில் சப்தம் கூடிக்கொண்டே இருக்கும். இதற்கு நிகராக, மெலோடியும் ஊடாடி ஒருவிதமான contrast தன்மையை வழங்கும். நாடகீயமான உணர்ச்சிகர அனுபவத்துக்கு நம்மைத் தயார்படுத்துவதே முதல் மூவ்மெண்ட்டின் நோக்கம். என்ன மாதிரியான உணர்வலைகளுக்குள் நம்மை இழுத்துச்செல்ல இசையமைப்பாளர் கருதுகிறாரோ அதற்கான வாசலை இது திறந்து வைக்கும்.
அதற்கடுத்து, development section. முன்னர் சிதறல்களாக வெளிப்பட்ட சிம்பொனியின் கருவைக் கூண்டுக்குள் ஒருங்கிணைத்து, அதனை ஒத்திசைவுக்குள் கட்டுக்கோப்பாக நிறுத்தி, கரைகளை மீறாத வெள்ளம் போல வளைந்தும் நெளிந்தும் சீறியும் ஆர்ப்பரித்தும் மடைமாற்றுவது. இதற்குப் பிறகே சிம்பொனி இசையில் ‘tension’ கூடத் தொடங்கும். பெரும் பிரவாகம் கட்டற்றுப் பாயும்.
ஒரு நாவலாசிரியர் சிக்கலான முடிச்சை அவிழ்ப்பதைப்போல, அறுவை சிகிச்சை நிபுணர் கச்சிதமாக மூளைக்கட்டியை அகற்றுவதைப்போல, அலையலையாகத் தாக்கும் உணர்ச்சியின் மையத்தில் நம்மை நிறுத்தும் இடம்.
கடைசியாக, recapitulation. சொனாட்டா வடிவின் நிறைவுப் பகுதி இது. மெதுவான டெம்போவில் தீம் இசையின் அடிநாதத்தையும் அது உருவாக்க விரும்பிய மன அவசங்களையும் உளவியல் பரிமாணத்தையும் சுட்டிக்காட்டி, சிம்பொனியின் எல்லையற்ற சாத்தியங்களை உணர்த்திவிட்டு அடங்குவது. முன்பு உருவான பதற்றத்தைத் தணித்து, அலங்காரங்களை உதிர்த்து, ஆழமான அமைதிக்குள் நம்மை இருத்தி, புள்ளொலிகளின் ஏகாந்தத்தை உணரச்செய்வது.
முதல் மூவ்மெண்ட்டின் பெருவெடிப்புக்குப் பிறகு, தத்தித் தத்தி நடை பழகுவதைப் போன்ற மெல்லிய அசைவுகளால் ஆனது இரண்டாவது மூவ்மெண்ட். புலரியின் முதல் பொன்னொளி போல மனத்தை லேசாக்குவது.
இதன் gentleness காரணமாக, தனது இசைப்பொழிவின் குணாதிசயங்களைப் பகுப்பாய்வு (introspection) செய்து அசைபோடும் தன்மை இதில் உண்டு. பின்பு மெல்ல மெல்லத் தந்தி மீட்டல்களின் சுறுசுறுப்பு அதிகரித்து, நடன ஒத்திசைவின் துள்ளலுக்கு நம்மை ஆட்படுத்தும். முதல் மூவ்மெண்ட்டைச் செங்குத்தான மலையேற்றம் என்றால் இரண்டாவதை ஆசுவாசத்துக்கான இடைவெளி எனலாம். மூன்றாவது மூவ்மெண்ட்டை triple meter என்கிறார்கள். 1 - 2 - 3, 1 - 2 - 3 என நடனத் தப்படிகள் போன்ற லயத்தில் ஒலிக்கும். நான்கு மூவ்மெண்ட்டுகளில் இதுவே குறுகிய கால அவகாசத்தில் நிகழ்ந்து முடிவது. மிதமான வேகத்தில் சீராக முன்னகர்ந்தபடி இருக்கும். Sine wave போன்ற எதிர்பார்க்கக்கூடிய ஏற்ற இறக்கங்களுடன் துரிதமாகச் செயல்படும். ஆர்ப்பாட்டத்துக்கும் அமைதிக்கும் இடைப்பட்ட மகிழ்ச்சியில் நம்மால் திளைக்க முடியும்.
நான்காவது மூவ்மெண்ட் தனது இறுதி உத்வேகத்தை எட்டுவது. ஆர்க்கெஸ்ட்ராவின் முழு ஆற்றலும் ஒன்று திரண்டு ஆனந்தக் கூத்தாடி முடியும் தருணம். எரிமலை பொங்குவதைப் போலப் பெரும் உற்சாகப் பீறிடல் எழுந்து தாண்டவமாடும். முதல் மூவ்மெண்ட்டில் இசைக்கப்பட்ட சொனாட்டாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில், அதன் தலைகீழாக்கம் போல, இணை இசைக்கோப்புகள் முரண்டு பிடித்து ஒலிக்கும் வாய்ப்புகள் உண்டு.
சிம்பொனி என்பது வாழ்க்கையைப் போலவே ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் என்பதைக் குறிப்புணர்த்தி வாண வேடிக்கை காட்டுவார்கள். இதற்கு ‘rondo form’ எனப் பெயர். இதன் முடிவில் எஞ்சுவது இனிய பதற்றமோ தியான அமைதியோ அல்ல. நிறைவான தருணங்களுக்கு நன்றி செலுத்துவதைப் போன்ற கொண்டாட்டக் கையசைப்பு மட்டுமே.
பல்வேறு வகையான கட்டுக்கடங்காத உணர்வுப் பரிமாற்றங்களுக்குள் நம்மை இழுத்துச்செல்வதே சிம்பொனி. ஓர் இசைக் காவியம். அதை இயற்றுவது என்பது அசாத்தியமான பணிதான். அதனைச் சாதித்து நமக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கும் ராஜாவுக்கு வாழ்த்துகள். சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கோகுல் பிரசாத்
பல இசை வடிவங்களைக் கடந்து நிற்கும் படியாக சிம்பொனி இசையின் சவால்கள் என்னென்ன?
சிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை தேவை.
இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.
அடுத்த சவால் சிம்பொனியின் கட்டமைப்பில் உள்ளது. காவியம் , நாடகம் போன்றவற்றில் நிகழும் கடலலை போன்ற ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சி குவியும் நாடக தருணங்கள் சிம்பொனியிலும் உண்டு.
பொதுவாக சிம்பொனி இசைக்கருவிகள் மட்டுமே கொண்டு இசைக்கப்படும். ஓபரா (இசை நாடகம்) போல் பாடகர்கள் கிடையாது. அதனால் இசை நுட்பங்கள் வழியே மையக் கருவின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.
கதாபாத்திரங்களின் உணர்வுகளை மோதவிடும் நாடகம் போல, வாத்தியக்கருவியின் இசை பல தளங்களில் ஒன்றோடு ஒன்று மோதி விரிவடைந்து கொண்டே இருக்கும். ரசிகர்களையும் மிகு உணர்ச்சியின் உச்சகட்டம் வரை கொண்டு சென்றபின், மையச் சிக்கல் சமன்பட்டு பேரமைதிக்கு படிப்படியாக திரும்பும்.
சிம்பொனி வடிவம் தரும் சவால் காந்த சக்தி போன்றது. கலைஞர்களை ஈர்ப்பதும் விலக்குவதும் இவ்வடிவமே.
கர்நாடக சங்கீத முறைகள் போல் கறாரான இசை வடிவம் சிம்பொனியில் இருந்ததில்லை. கடந்த 150 ஆண்டுகளாக பல இசைக்கலைஞர்கள் சிம்பொனி இசைவடிவத்தை வளர்த்துள்ளனர். சுதந்திரமான வடிவங்களில் பலவித சாத்தியங்களை தன்னுள் அடக்கியபடி மேற்கிசையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை சிம்பொனி பிடித்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பீத்தோவன், ஹைடன், ராபர்ட் ஷூமன், ரிச்சர்ட் ஸ்ட்ராஸ் போன்ற இசை மேதைகளால் கண்டெடுக்கப்பட்ட சிம்பொனி ஓபரா வடிவின் உச்சகட்டத்தில் பிறந்த குழந்தை. ஓபரா எனும் இசை நாடகத்திலிருந்து பிறந்த இசைக் காவியம். சிம்பொனியின் வடிவம் தரும் சவால் இன்றளவும் திறமையான கலைஞர்களை அதன்பால் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. அதனாலேயே இன்று எந்த மேற்கிசை மேடைகளிலும் சிம்பொனி இல்லாமல் இசை நிகழ்ச்சி நடப்பதில்லை.மற்ற இசை வடிவங்களான கன்சர்ட்டோ (Concerto), சொனாட்டா (Sonata) போன்ற வடிவங்களைத் தாண்டி சிம்பொனிக்கு கிடைத்த வரவேற்புக்குக் காரணம் என்ன?
பலதரப்பட்ட வாத்தியக் கருவிகளைக் கொண்ட சிம்பொனியில் தனித்துவம் பெற்ற கருவியென எதுவும் கிடையாது. கன்சர்ட்டோ வகையில் ஒரு குழுவுக்கு முன்னணியாக ஒரு வாத்தியக்கருவி ஒலிக்கும். இதனாலேயே கன்சர்ட்டோ இசைக்கோவைகளை வயலினுக்கான கன்சர்ட்டோ, சிதாருக்கான கன்சர்ட்டோ என முதன்மை வாத்தியக்கருவியை மையமாகக் கொண்டு வகைப்படுத்துவர்.
பல இசைக் கருவிகள் கூட்டாக ஒலிப்பதால், சிம்பொனி குழுவின் அளவு இசைக்கலைஞரின் கற்பனைக்கும் இசைக்கோவையின் தேவைக்கும் கட்டுப்பட்டது. அதேசமயம் கரைபுரண்டோடும் கற்பனையைக் கொண்டே சிம்பொனியை எழுத முடியும். எழுநூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களால் அமைந்த மாஹ்லரின எட்டாவது சிம்பொனி, நான்கு பேர் கொண்ட குழுவைக் கொண்டு அமைந்த பிலிப் கிளாஸின் இரண்டாவது சிம்பொனி... என குழு அளவில் பலமாதிரிகள் உண்டு. சிம்பொனியின் இந்த சுதந்திரத்தால் இசையமைப்பாளர்கள் விரிவான கருவையும் , பல வாத்தியக்கருவிகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
- கிரிதரன்
|