இந்திய விடுதலைப் போராட்டத்தில் ‘திருநெல்வேலி எழுச்சி’ ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு!



அழுத்தமாக சொல்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், 1908ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி நிகழ்ந்த ‘திருநெல்வேலி எழுச்சி’ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதனை ஆய்வின் வழியே முதன்முதலாக வெளியுலகிற்கு கொண்டு வந்தவர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி.சமீபத்தில் இதுகுறித்தான, ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூலுக்காக அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். அவரிடம் பேசினோம்.   

தமிழக விடுதலை வரலாற்றில் திருநெல்வேலி எழுச்சி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

தன்னியலாக ஏற்பட்ட மக்கள் எழுச்சி என்பதால் 1908 மார்ச் 13ல் நிகழ்ந்த திருநெல்வேலி எழுச்சி முக்கியமானது. வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் கைதானவுடனே, எந்தவிதத் திட்டமிடலும் தலைமையும் இல்லாமல் மக்கள் தாமாகவே திரண்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அதனால் இது நினைவுகூரப்பட வேண்டிய முக்கிய வரலாற்று நிகழ்வு. தவிர, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தில் இந்நிகழ்வு ஒரு மைல்கல்.

இந்த எழுச்சி பற்றி சுருக்கமாகச் சொல்லமுடியுமா?

சுதேசி இயக்கத்தின் உச்சக்கட்டமாக, 1908 மார்ச் 12ம் நாள் பிற்பகலில் வ.உ.சி. கைதுசெய்யப்பட்டார். அடுத்த நாள் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் தாமாகத் திரண்டனர்.

நெல்லை நகரத்தில் அன்று காலை இறுக்கமும் பதற்றமும் நிலவின. ரயில் நிலையத்தை ஒட்டிய வீரராகவபுரத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டன.

அக்காலத்தில் ஜங்ஷன் இல்லை. திருநெல்வேலிப் பாலம் ரயில் நிலையம் என்றுதான் அதனைக் குறிப்பிடுவார்கள். கூட்டமாகக் கூடிய மக்கள் இந்துக் கல்லூரிக்குள் - இன்றைய இந்து மேல்நிலைப் பள்ளி - நுழைந்ததும் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களும் சில ஆசிரியர்களும் கலந்துகொண்டு கிழக்கு நோக்கி நகர்ந்தனர்.

கூட்டம் முன்னேற முன்னேற மேலும் மேலும் மக்கள் சேர்ந்துகொண்டு, ‘வந்தே மாதரம்’, ‘சிதம்பரம் பிள்ளை வாழ்க’ என்று முழங்கிக்கொண்டு சென்றனர். வரிசையாக இருந்த ஐரோப்பிய வணிக நிறுவனங்களையும் அரசு கட்டடங்களையும் தாக்கினார்கள். காவல் நிலையம் கூடத் தப்பவில்லை. ‘நீங்கள் சுதேசிகளாக இருந்தால் எங்களுடன் வாருங்கள், பரதேசிகளாக இருந்தால் வெள்ளைக்காரர்களோடு போங்கள்’ என்று துணிவுடன் போலீசாரை எதிர்கொண்டனர்.

நகராட்சி மண்எண்ணெய்க் கிடங்குக்குத் தீமூட்டியதில் அது மூன்று நாட்களுக்கு அணையாமல் எரிந்தது. மக்கள் தம் எதிர்ப்புணர்வைக் காட்டுவதற்காக அரசு சொத்துகளை நாசம் செய்தார்களே தவிர எந்த ஒரு வெள்ளையரையும் தாக்கவில்லை. 

அலுவலகங்களில் இருந்த பணத்தைத் தொடவில்லை. துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்த பிறகுதான் எழுச்சி அடங்கியது.அன்று பிற்பகல், தூத்துக்குடி நகரின் வண்டிப்பேட்டையில் தடையாணையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புக்கூட்டம் நடத்தினர்.

குதிரைமீதேறி வந்த துணை ஆட்சியர் ஆஷ் துரையையும் பிற போலீஸ் படையினையும் அவர்கள் தாக்கினர். நகரத்தின் அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. நூற்றுக்கணக்கான எளிய மக்கள் கைது செய்யப்பட்டனர்.இதற்குப் பிறகு நெல்லையிலும் தூத்துக்குடியிலும் ஆறு மாதங்களுக்குத் தண்டக் காவல் படை நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்காக மக்கள்மீது ‘திமிர்’ வரி என்று சொல்லப்பட்ட வரியும் விதிக்கப்பட்டது.

இதனை பிரிட்டிஷார் ஆவணங்கள் ‘திருநெல்வேலி கலகம்’ எனக் குறிப்பிடுகின்றன. நீங்கள் ஆய்வின் மூலமாக ‘எழுச்சி’ எனப் பொருள் கொள்ள வேண்டும் எனக் கண்டறிய என்ன காரணம்?
மேலே விவரித்த நிகழ்ச்சி ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல. 

கண்மூடித்தனமான ஒரு கும்பல் ஏற்படுத்திய கலவரமும் அல்ல. அரசியல் மயப்பட்ட மக்கள், தெளிந்த பார்வையோடு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆவணங்களையும் சொத்துகளையும் அழித்தார்களே தவிர ஐரோப்பியரைத் தாக்கவில்லை.

இதன்மூலமாகத் தங்கள் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு எல்லாப் பிரிவு மக்களும் பங்குகொண்ட எழுச்சி இது.
அந்நிய ஆட்சியாளர்கள் ஒருபோதும் இத்தகைய எதிர்ப்புகளின் அரசியல் தன்மையை அங்கீகரிக்க மாட்டார்கள். 

‘கலவரம்’ என்றும் ‘கலகம்’ என்றுமே குறிப்பிடுவார்கள். திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நிகழ்ந்த எதிர்ப்பு உண்மையான மக்கள் எழுச்சி. இதை ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியிருக்கிறேன்.

விபின் சந்திரபால் விடுதலைக் கொண்டாட்டம் தவிர, சுதேசி ஸ்டீம் பணிகளும், கோரல் மில் போராட்டமும் சேர்ந்துதான் வ.உ.சி. மீது பிரிட்டிஷாருக்குக் கோபத்தை ஏற்படுத்தியதா?   
அக்காலத்தில் ‘தூங்குமூஞ்சி மாகாணம்’, ‘இருண்ட மாகாணம்’ என்றெல்லாம் எள்ளி நகையாடப்பட்ட தமிழகத்தில் வ.உ.சி. மிகப் பெரிய அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். சுதேசிக் கப்பல் கம்பெனியை நிறுவியும், இரண்டு பெரிய நீராவிக் கப்பல்களை வாங்கியும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார்.

இதற்காக அவர் மக்களைத் திரட்டினார். அதற்குமுன் பொது இடங்களில் தமிழில் தொடர்ந்து சொற்பொழிவாற்றியவர்கள் யாரும் இல்லை. இந்தப் புதிய அரசியல் உத்தி, புதிய வழிமுறை ஜனநாயக அரசியல்மயமாக்கத்தில் முக்கிய படி. 

கப்பல் கம்பெனி நடத்தியதோடு பிரிட்டிஷாருக்குச் சொந்தமான கோரல் பஞ்சாலையிலும் ஒரு பெரிய வேலை நிறுத்தத்தை வ.உ.சி. வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். இவை அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தன. இதன் உச்சக்கட்டமாகத்தான் வ.உ.சி. கைது செய்யப்பட்டார். இதன் விளைவுதான் திருநெல்வேலி எழுச்சி.

பிரிட்டிஷாரை எதிர்த்து இதுபோல் ஓர் எழுச்சி அதற்குமுன் தமிழகத்தில் நடந்திருக்கிறதா?  

திருநெல்வேலி எழுச்சிக்கு முன்னும் பின்னும் பல மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், திட்டமிடாமலும் தலைமையில்லாமலும் தன்னியலான மக்கள் எழுச்சி வேறு நடந்ததாகத் தெரியவில்லை. அவ்வகையில் இது ஒரு தனித்துவமான நிகழ்வு.உங்களின், ‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’ சிறு நூல் 1987ம் ஆண்டு வெளிவந்தபோது வரவேற்பு எப்படி இருந்தது?

1987ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சிறு நூலாக மே.து.ராசுகுமார் ‘மக்கள் வெளியீடு’ பதிப்பகத்தின்மூலம் வெளியிட்டார். விலை பத்து ரூபாய்.

எந்தப் பத்திரிகையும் மதிப்புரை வெளியிடவில்லை. நூலக ஆணையும் கிடைக்கவில்லை. அச்சடித்த ஓராயிரம் நூல்கள் தனிப் பிரதியாக விற்பனையாக ஏழெட்டு ஆண்டுகளாயின.
முற்போக்கு அணியினர் ஆர்வமாக நூலை வாங்கி வாசித்தார்கள் என்று சொல்ல முடியும். வாசித்தவர்கள் என்னை ஒரு முதியவர் என்று நினைத்துக்கொண்டார்கள். நேரில் சந்தித்தபோது என் வயதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். 

குறைவான பிரதிகளே விற்றாலும், நெல்லையின் வரலாற்றைத் தம் உள்ளங்கையிலே வைத்திருந்த பேராசிரியர் தொ.பரமசிவன்கூட, இந்நூல் வெளிவரும்வரை திருநெல்வேலி எழுச்சி பற்றித் தனக்குத் தெரியாது என்று சொன்னது இந்நூலின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

இன்று ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ நூலுக்கு வரவேற்பும், வ.உ.சி பற்றிய பார்வையும் மக்களிடம் எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்?

முப்பது ஆண்டுகளாக அச்சில் இல்லாத நூலை 2022ல்தான் மும்மடங்கு விரிவாக்கி ‘காலச்சுவடு பதிப்பகம்’ வழியாக வெளியிட்டேன். ஆராய்ச்சி நூல் என்று கருதும்போது அதற்கு நல்ல வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும். 

இளையோர் பலர் நூலை ஆர்வத்துடன் வாசிப்பதும் விவாதிப்பதும் மகிழ்ச்சி தந்தது. ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்பதற்கு அப்பால், அறிவு வட்டாரத்தில் வ.உ.சி.யின் காத்திரமான அரசியல், சமூகப் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

இந்த எழுச்சியில் சுடப்பட்டு இறந்துபோனவர்களுக்கோ அல்லது எழுச்சிக்கோ எந்த நினைவுச் சின்னமும் இல்லை. ஆனால், எழுச்சியின் போது துப்பாக்கியால் சுட்ட உதவி கலெக்டர் ஆஷிற்கு நினைவு மண்டபம் உள்ளது. 

இதை எப்படி எடுத்துக் கொள்வது? ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அவர்களுடைய வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். நாம் தவறிவிட்டோம். திருநெல்வேலி எழுச்சி கடுமையாக ஒடுக்கப்பட்டதும், காந்திய யுகத்தின் எழுச்சியும் இந்த முக்கிய நிகழ்வு மறக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டன.

இப்போது சூழல் மாறிவருவதை உணர முடிகிறது. சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்கு என்னை அழைத்து வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருநெல்வேலி எழுச்சிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக்கொண்டார். 

திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், தூத்துக்குடி வண்டிப்பேட்டையிலும் (மசூதிப்பேட்டை) நினைவுச் சின்னம் அமையும் என எதிர்பார்க்கிறேன். ஆஷ் நினைவு மண்டபத்தில் ஒரு விளக்கமான கல்வெட்டை வைக்க வேண்டும் என்றும் கருதுகிறேன்.

உங்களின் ‘Swadeshi Steam’ நூல் வந்த பிறகு வடஇந்திய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறிவார்ந்தவர்களிடம் ஏதேனும் மாற்றங்கள், விவாதங்கள் ஏற்பட்டுள்ளதா?
கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆராய்ச்சித் தேடலுக்காகவும், கல்விப் புலம் சார்ந்த கருத்தரங்கங்களுக்காகவும் இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தின் பல பல்கலைக்கழகங்களுக்கும் பயணம் செய்துவருகிறேன். போகும் இடங்களிலெல்லாம் வ.உ.சி., பாரதி, பெரியார் ஆகியோரைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.

இதன் விளைவாக, சுனில் கில்நானி, மனு பிள்ளை முதலான பிரபல வரலாற்றாசிரியர்கள் வ.உ.சி. பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். ஆனால், ஓராண்டுக்கு முன்பு, உலகப் புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பகம் ‘Swadeshi Steam’ என்ற தலைப்பில் வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி பற்றிய என் விரிவான நூலை வெளியிட்டதும் பெரிய கவனிப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவின் முக்கிய பத்திரிகைகளும் அறிவுஜீவிகளும் நூலைப் பற்றிப் பேசியும் எழுதியும் கவனப்படுத்தியுள்ளனர். ருத்ராங்ஷு முக்கர்ஜி, ராமன் மகாதேவன், ஆதித்யா பாலசுப்பிரமணியம், சலீல் மிஸ்ரா, பிரஷாந்த் கிடாம்பி, மனு பிள்ளை முதலான உலக அளவில் பெயர் பெற்ற வரலாற்றாசிரியர்கள் நூலைப் பாராட்டி மதிப்புரை எழுதியுள்ளனர்.

இவ்வளவு பெரிய ஆளுமையை பல காலமாக அறிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்று ஆதங்கமும் பட்டனர். இனி வெளியாகும் இந்திய வரலாற்று நூல்களில் வ.உ.சி.யின் பெயர் தவிர்க்க முடியாததாக ஒளிவிடும் என்று நம்புகிறேன். அடுத்ததாக வ.உ.சி. பற்றி மேலும் இரண்டு நூல்களை ஆங்கிலத்தில் எழுதும் திட்டம் உண்டு.

உங்கள் ஆய்வு முதன்முதலில் வ.உ.சி.யிலிருந்துதான் தொடங்கியது? வ.உ.சி. குறித்து ஆய்வு செய்யவேண்டுமென எப்போது நினைத்தீர்கள்?

நான் படித்த சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூட வரலாற்றுப் பாடநூலில் வ.உ.சி. பற்றிய குறிப்பே இல்லாததுதான் தொடக்கப் புள்ளி. இதைக் கண்டு துணுக்குற்றுத்தான் பதினான்கு வயதுச் சிறுவனாக ஆய்வுக் களத்தில் குதித்தேன். 

மதுரை உலகத் தமிழ் மாநாடு, பாரதி நூற்றாண்டு, பாரதிதாசன் பாடல்கள் ஆகியவை எனக்குள் தமிழ் உணர்ச்சியைப் பற்ற வைத்தன. ‘முகம்’ மாமணி, புலவர் த.கோவேந்தன் ஆகியோரின் வழிகாட்டல் என்னை வடிவமைத்தன. வ.உ.சி.யை தேடிச்சென்ற நான் ஒரு முழு வரலாற்று மாணவனாக, ஆராய்ச்சியாளனாக மாறிவிட்டேன்!

இப்போது வ.உ.சி. குறித்த ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது?  

முற்றிலும் எதிர்பாராதது. பெருமகிழ்ச்சி தருகிறது. அதுவும் வ.உ.சி. பற்றிய நூல் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் வரலாற்று ஆசிரியர்கள் சாகித்ய அகாடமி விருது பெறுவது அரிதல்ல. தமிழில் ஒரு வரலாற்று ஆசிரியர் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். 

தமிழ் அடையாளத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட முயற்சிகள் நிகழ்ந்து வரும் இக்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சிக்கான தேவை கூடியிருக்கிறது. இளையோர் வரலாற்றுத் துறையில் ஈடுபடுவதற்கு இந்த விருது உற்சாகம் தருமானால் மேலும் மகிழ்வேன்.

பேராச்சி கண்ணன்